அந்தந்த நாளை அன்றைக்கே வாழுங்கள்...
அன்புள்ள சிநேகிதியே,
என்னுடைய வயது 77. கணவரின் வயது 84. 53 வருட பந்தம். அந்தக் காலத்திலேயே காதல் திருமணம். எங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அவர் குடும்பம் மிக ஆசாரமான பிராமணக் குடும்பம். உறவுகளை எல்லாம் முறித்துக் கொண்டு, எதிர்த்துக் கொண்டுதான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். Opposite poles attract each other என்பது எங்கள் விஷயத்தில் உண்மையானது. நாங்கள் இருவரும் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயம் கொண்டவர்கள். நான் நிறையப் பேசுவேன். நிறைய நண்பர்கள் வேண்டும். அவருக்கு மனைவி, குழந்தைகள்தான் உலகம். ஆனால், நான் எது செய்ய விரும்பினாலும், அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் எனக்காக ஒத்துப்போவார். உதவி செய்வார். நானும் குடும்ப நன்மைக்காக நிறைய விட்டுக் கொடுத்திருக்கிறேன். நல்ல வேலையை விட்டுவிட்டேன். இவர் அடிக்கடி பயணம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம். அவர் வீட்டில் இருந்தால் எந்த நண்பருடனும் மணிக்கணக்கில் பேசமாட்டேன். பார்ட்டிக்குப் போகமாட்டேன். எங்களுக்குள் நிறைய அபிப்பிராய பேதங்கள் இருக்கும். நிறைய விவாதம் செய்வோம். நான் அழ ஆரம்பித்தால் விட்டுக்கொடுத்து விடுவார். இப்படித்தான் 35-40 வருடங்கள் கழிந்தன.

அவர் ரிடையர் ஆனவுடன் நான் வெளியே போவது அவருக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. He starts demanding attention. எனக்கு, குழந்தைகள் பெரியவர்களாகி செட்டில் ஆகிவிட்டார்கள். நான் ஏதாவது சமூக சேவை செய்ய ஆசைப்பட்டேன். வீட்டுக்கு வந்தால் முகத்தைத் தூக்கிவைத்துக் கொள்ளுவார். சில சமயம் எரிந்து விழுவார். வயது ஆக ஆக அவருக்கு ஏதேனும் உடம்பிற்கு வந்தால், நான் 24/7 அருகில் இருந்து சேவை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எனக்கும் வயதாகிக் கொண்டிருப்பதை உணருவதில்லை. எப்போது பார்த்தாலும் ஒரு பய உணர்ச்சி. Feeling of insecurity. எனக்கு ஆஸ்த்மாவிலிருந்து ஆர்த்ரைடிஸ் வரை அவ்வளவு உடம்பு படுத்துகிறது. முன்போல் அவரை அப்படிக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தைப் பற்றி பயமாகத்தான் இருக்கிறது. இரண்டு பையன்களும்தான் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்களே! என்னுடைய கணவர் டிப்ரெஷனில் இருக்கிறார். ஆனால், சைக்கியாட்ரிஸ்ட்டிடம் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். இப்போதெல்லாம் என்னால் தாங்கமுடிவதில்லை. கத்தி விடுகிறேன். ஒவ்வொரு நாளும் வேதனையாகப் போகிறது. இப்போது அவருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது. அந்தச் சமயத்தில்தான் நானும் சத்தம் போடுகிறேன். எனக்கு இப்போது மனசு நிம்மதி வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி இன்னும் கவலையாக இருக்கிறது. ப்ளீஸ் ஏதாவது சொல்லுங்கள். நன்றி.

இப்படிக்கு,
...........


அன்புள்ள சிநேகிதியே
53 வருட பந்தம். அதில் 40 வருடங்கள் அருமையான வாழ்க்கை. Love, care, compromise, understanding எல்லாமே. வயது ஆகும்போது, உடம்பு மனத்தோடு ஒத்துப் போவதில்லை. மனம் என்ன நினைக்கிறதோ, உடல் கேட்க மறுக்கிறது. We are running out of tune என்று எண்ணங்கள் உடம்பைப் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த உணர்ச்சிகள் எல்லாமே உண்மை. எல்லோருக்கும் பொது. This is a helpless, hopeless state of mind. அது ஒரு இயலாமையைக் கொடுக்கிறது. அந்த இயலாமையில் ஜனிப்பதுதான் கோபம், ஆத்திரம், சுய பச்சாதாபம் எல்லாம். இதைப் புரிந்துகொண்டு விட்டால், உங்கள் கணவரின் கோபத்தைப் புரிந்துகொண்டு, உங்கள் கோபத்தைத் தவிர்க்க முடியும். எதிர்காலத்தை அணுக எனக்குத் தெரிந்த ஒரு வழிமுறை, அந்தந்த நாளை அன்றைக்கே அனுபவித்துவிட வேண்டியதுதான். இளவயதில் அடுத்த வருட விடுமுறை எங்கே எனத் திட்டமிடுவோம். ஐந்து வருடத்திற்குப் பிறகு என்ன செய்யப் போகிறோமோ என்று யோசிப்போம். எல்லாம் தன்னால் முடியும் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் வயதாகி, உடம்பு தளரும்போது மற்றவரைச் சார்ந்திருத்தல் அதிகமாகும்போது, சுய நம்பிக்கை, சுய பச்சாதாபமாக மாறிவிடுகிறது.

அவர் கோபித்தால் அவரைப் புரிந்து கொள்ளுங்கள். வருத்தத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் கோபித்துக் கொண்டாலும் குற்ற உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எல்லாமே இயல்பான எதிர்வினைதான். இதில் ஆராய்ச்சிக்கே இடமில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, அருமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறீர்கள். அன்றைய கணக்கை அன்றே முடித்துவிடுங்கள். மறுநாள் அன்புடன் மீண்டும் பிறக்கும். நாளைய தினத்தை பயத்துடன் இன்றே துவங்கி விடாதீர்கள். அப்படியென்றால் இன்றே உங்களை நீங்கள் இழந்து விட்டீர்கள். இன்றே உங்களை நீங்கள் இழந்து விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com