அமிர்தவர்ஷினி மணிசங்கர்
தந்தை மணிசங்கர் நாதஸ்வரக் கலைஞர்; தாய் ஜெயந்தி வயலின் கலைஞர். சகோதர, சகோதரிகள் அனைவருமே நாதஸ்வரம் வாசிப்பர். அவர்கள் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து அமிர்தவர்ஷினிக்கு இசையில் நாட்டம். ஆனால், அவர் தேர்ந்தெடுத்தது நாதஸ்வரமோ, வயலினோ அல்ல; தவில்! ஆண்கள் வாசிக்கவே மிகக் கடினமான வாத்தியம் தவில். அதனால் இதற்கு 'ராஜவாத்தியம்' என்று பெயர். இதனை அநாயாசமாக வாசித்து அசத்துகிறார் அமிர்தவர்ஷினி.

முதலில் வாய்ப்பாட்டுதான் கற்றார். ஆனாலும் தவிலின்மீது காதல். அதைத்தான் கற்பேன் என்று உறுதியாக இருக்க, முதலில் குடும்பத்தார் யோசித்தாலும், தடை போடவில்லை. ஆதிச்சபுரம் ஏ.பி. ராமதாஸிடம் தவிலின் அடிப்படைகளைக் கற்றார். பிறகு கலைமாமணி கோவிலுார் கல்யாணசுந்தரம் அவர்களிடம் சேர்ந்து பயிலத் துவங்கினார். தவிலின் நுணுக்கங்கள் பிடிபட்டன. தனியாகத் தவில் வாசிக்குமளவிற்கு அவர் பயிற்சி அளித்தார். முதல் கச்சேரி ஹரித்துவாரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில், அமிர்தா நான்காம் வகுப்பு படிக்கும்போது நடந்தது. தந்தையுடன் இணைந்து வாசிப்பைத் தொடர்ந்தார். அதன் பின் பல மேடைகள், கோவில்கள், திருமணங்கள் என்று இதுவரை 200க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் வாசித்திருக்கிறார் அமிர்தவர்ஷினி.அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவர் வாசிப்பதைக் கேட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி இவரைப் பாராட்டியிருக்கிறார். காஞ்சிபுரத்தில் இவர் வாசிப்பைப் பார்த்து வியந்த டிரம்ஸ் சிவமணி, இவருடன் சேர்ந்து வாசித்திருக்கிறார். பஞ்சாபி பாப் பாடகர் தலேர் மெஹந்தி வியந்து பாராட்டியிருக்கிறார். இப்படி இந்த இளம் வித்வாம்சினிக்குப் பலதரப்பட்ட ரசிகர்கள்.

தந்தை மணிசங்கர் 'மங்கள லய நாதம்' என்ற இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். தாய் ஜெயந்தி வயலின் இசைபற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். திருவாரூர் அரசு இசைப்பள்ளியில் ஆசிரியர். சகோதரர்கள் பி.எஸ்சி., பி.ஈ. என்று படித்திருந்தாலும் நாதஸ்வரத்தை விட்டுவிடவில்லை. இந்த இசைக்குடும்பமே அமிர்தவர்ஷினியை ஊக்குவித்து வருகிறது. தற்போது மன்னார்குடி அசோகா சிசு விஹார் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் அமிர்தவர்ஷினியின் வளர்ச்சிக்குப் பள்ளியும் ஆசிரியர்களும் ஊக்கம் தருகின்றனர்.

ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்த கச்சேரிகளில் வாசித்திருக்கிறார். சமீபத்தில் சிகாகோவில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும் தவில் வாசித்திருக்கிறார். 'கலா உத்சவ்' என்னும் மாநில அளவிலான கருவியிசைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றிருக்கிறார். தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை வழங்கிய 'கலை இளமணி' உட்படப் பல்வேறு விருதுகளையும், பொற்கிழிகளையும் பெற்றுள்ளார்.சிறுவயது முதல் இன்று வரையிலான அமிர்தவர்ஷினியின் சில இசைக்கோவைகளை இங்கே கேட்கலாம்.

"டாக்டர் ஆகவேண்டும் என்பது என் ஆசை. ஆனாலும், தொடர்ந்து தவில் வாசிப்பேன். அதிலும் ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் வாங்குவேன். இது என் லட்சியம்" என்கிறார் அமிர்தவர்ஷினி. அவரது கனவுகள் நிறைவேற வாழ்த்துவோம்.

சிசுபாலன்

© TamilOnline.com