திருநங்கை பொன்னி
பொன்னி தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த ஒரு திருநங்கை. சமூகத்தின் புறக்கணிப்பையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு இன்றைக்கு ஒரு நாட்டியக் கலைஞராய் உயர்ந்து நிற்கிறார். தான் உயர்ந்தது மட்டுமல்லாமல், தன்னைப்போல் ஆர்வமும், திறமையும் உள்ள திருநங்கைகளுக்கும் நாட்டியம் சொல்லித்தருகிறார். குடிசைவாழ் மக்களிடம் பரதக்கலையைக் கொண்டு சேர்ப்பதற்காக 'அபிநய நிருத்தாலயா' என்ற நாட்டியப் பள்ளியைத் துவங்கி நடத்தி வருகிறார். ஆவடி தமிழ்ச்சங்கம் வழங்கிய சிறந்த நாட்டியக் கலைஞர் விருது, சேலம் தாய் ட்ரஸ்ட் வழங்கிய சிறந்த சாதனையாளர் விருது, பாண்டிச்சேரி தமிழ்ச்சங்கம் வழங்கிய சிறந்த சமூகசேவகர் விருது, சிறந்த நாட்டியக் குழு, சிறந்த மனிதநேயர், மனிதநேயக் கலைமாமணி, ஊருணி விருது, செல்லமே இதழ் வழங்கிய விருது, சங்கீத கலாசாகர் விருது உள்பட பல்வேறு விருதுகளும் பெற்றிருக்கிறார். B.Sc. (கணிதம்), M.S.W., M.A. (பரதநாட்டியம்) எனப் பல்வேறு பட்டங்களும் கைவசம். இன்றிருக்கும் சமூகச் சூழலில் திருநங்கையான பொன்னி எப்படி இவற்றைச் சாதித்தார்? இதோ, அவரே சொல்கிறார், கேட்போமா?

இளமையில் நளினம்...
தூத்துக்குடி நான் பிறந்த ஊர். கூடப் பிறந்தவர்கள் இரண்டு அக்கா, இரண்டு அண்ணன். தந்தை மிக்சர் வியாபாரம் செய்துவந்தார். என் வீட்டில் ஆண்பிள்ளைகளை ஐந்தாவது, ஆறாவதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, மிக்சர் வியாபாரத்திற்கு அனுப்பிவிடுவார்கள். நல்ல வியாபாரி ஆகவேண்டும் என்பதில்தான் கவனம் இருந்ததே தவிர, படிப்பில் அல்ல. ஆனால், எனக்குப் படிக்கும் ஆர்வம் அதிகம். சிறு வயதிலிருந்தே எனது நடை, உடை, பாவனையில் ஒரு நளினம் இயல்பாகவே இருந்தது. நான்காவது படிக்கும்போது அதனால் சக மாணவர்களின் தொல்லையும் ஏற்பட்டது. ஆனால், அது புரியாத வயது என்பதால் கடந்துவிட்டேன். ஏழாவது, எட்டாவது வகுப்புப் படிக்கும் போதும் பிரச்சனை வந்தது என்றாலும் நான் கணக்கு நன்றாகப் போடுவேன். என்னைக் கேலி, கிண்டல் செய்பவர்களுக்கு 'மேத்ஸ்' வராது. அவர்களுக்கு நான்தான் சொல்லிக் கொடுப்பேன். எனவே என்னை யாராவது கிண்டல் செய்தால் இவர்கள் சப்போர்ட்டுக்கு வருவர். எட்டாவது முடித்ததும் என் வீட்டில் படிப்பை நிறுத்த முயன்றனர். பெரிய அக்காவின் சப்போர்ட்டால் வேறொரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்த்தார்கள். அந்தப் பள்ளியில் சரியாகப் படிக்காத மாணவர்களை அடிப்பார்கள். அதனால் நான் நின்று விடுவேன் என்று நினைத்தார்கள். எனக்கு நன்றாகக் கணக்கு வரும் என்பதால் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. பத்தாவது முடித்து +1 சேர்ந்தேன். அப்போது பருவ வயது என்பதால் இனக்கவர்ச்சி, கவனச்சிதறல் நிறைய. பத்தாவதில் மிக அதிக மதிப்பெண் எடுக்க முடிந்த என்னால் +2வில் அதிக மார்க் வாங்க முடியவில்லை.

சந்தையில் கணக்காளர்
பிளஸ் 2 முடித்ததும் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால் குடும்பத்தில் அதற்கான வசதி இல்லை. அதனால் காய்கறி மார்க்கெட்டில் கணக்கெழுதும் வேலைக்குப் போனேன். வாங்கும் சம்பளத்தை அம்மாவிடம் கொடுப்பேன். என் நண்பர்கள் காலேஜில் சேர்ந்திருந்தனர். அவர்கள் எல்லாம், நன்றாகப் படிக்கும் நானும் உடன் படிப்பேன் என்று நினைத்துத்தான் சேர்ந்தனர். நான் படிக்கப் போகாததில் அவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது. அதனால் அடுத்த வருடமாவது கல்லூரியில் சேர முடிவுசெய்தேன். ஒரு வருடம் போய்விட்டது. முழுநாள் வேலை பார்த்தால் படிக்கமுடியாது. காலேஜ் படிக்கப் பணம் வேண்டும். அதனால் பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே படிக்க நினைத்தேன். தூத்துக்குடியில் நிறைய நூற்பாலைகள் இருந்தன. அங்கு வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையும் ஷிஃப்ட் வேலையாக இரவு, பகல் என்று மாறி மாறி இருந்தது. அதில் நான் சேரவில்லை. கணக்கெழுதும் வேலை பார்த்துக்கொண்டே வேறு பார்ட்-டைம் வேலை தேடினேன்.

மூட்டை தூக்கினேன்
ஒருநாள் வழியில் பாய் ஒருவரைப் பார்த்தேன். அவர் மார்க்கெட்டில் மூட்டை தூக்குபவர். காலை 3.30 மணி முதல் 9.00 வரை வேலை. அதற்கேற்ற சம்பளம். நான் கணக்கெழுதிச் சம்பாதித்ததைவிடப் பல மடங்கு அதிகச் சம்பளம் அவருக்கு என்று தெரிய வந்தது.

எனக்குக் கல்லூரி 9.30 மணிமுதல் தான். மூட்டை தூக்கும் வேலைக்குப் போக முடிவு செய்தேன். பெண்மைக்குரிய நளினம் என்னிடம் இருந்தது. முற்றம் தெளிப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளைத்தான் அதுவரை செய்திருக்கிறேன். மூட்டை தூக்கும் அளவுக்கு எனக்கு உடல் வலுவும் இல்லை. ஆனாலும் படிக்கும் ஆர்வத்தால் கணக்கெழுதும் வேலையை விட்டுவிட்டு மூட்டை தூக்கினேன்.

அஞ்சலி, பொன்னி



முருகன் என்பவர் முதன்முதலில் எனக்கு அந்த வேலையைக் கொடுத்தார். எனக்கு ஒரு பெட்டிகூடத் தூக்கத் தெரியாது. மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். 'திருநங்கை' என்பதால் கிண்டல், கேலி செய்வார்களோ என்று பயந்தேன். ஆனால், நான் படிப்பதற்காகத்தான் மூட்டை தூக்குகிறேன் என்பது தெரிந்ததும், யாரும் கிண்டல், கேலி செய்யவில்லை. மாறாக மிக ஆதரவாக இருந்தனர். தூத்துக்குடி மீன் மார்க்கெட் பொருளாளராக இருந்த கஷ்மீர் அண்ணாச்சிதான் எனக்கான காலேஜ் ஃபீஸை முதன்முதலில் கட்டினார். அவர் மூலமாகத்தான் வ.உ.சி. கல்லூரியில் B.Sc. (கணிதம்) சேர்ந்தேன். நான் சேர்ந்தது அம்மாவுக்குத் தெரியாது. அப்பா கையெழுத்துப் போட்டுச் சேர்த்துவிட்டார். நான் கணக்குப் பிள்ளை வேலை பார்ப்பதாக அம்மா நினைத்துக் கொண்டிருந்தார்.

ஒருநாள் நான் மார்க்கெட்டில் மூட்டை தூக்கிக் கொண்டிருப்பதை அந்த வழியாக வந்த அம்மா பார்த்துவிட்டார். அதைக் கண்டு ஒரே அழுகை. ஆனால், படிப்பதற்காகத்தான் இந்தக் கஷ்டம் படுகிறேன் என்பது புரிந்ததால் படிப்புக்குத் தடை சொல்லவில்லை. மூன்று வருடம் இப்படி மூட்டை தூக்கித்தான் படிப்பை முடித்தேன். எம்.சி.ஏ. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், மூட்டை தூக்கும்போது ஏற்பட்ட ஒரு விபத்தால் காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டி வந்தது. அதனால் தேர்வுகளுக்குப் படிக்க முடியவில்லை. மதிப்பெண் குறைந்ததால் எம்.சி.ஏ. சேர முடியவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

கடவுள் கொடுத்த வரம்
நிறைய திருநங்கைகளின் வாழ்க்கை பாழாக மிக முக்கியக் காரணம் குடும்பத்தினரின் புறக்கணிப்புதான். "நீ வேலைக்குப் போனாலும் போகாவிட்டாலும் வீட்டில் இரு. நாங்கள் சோறு போடுகிறோம்" என்றுதான் சொன்னார்கள். என்னைப் பற்றி யாராவது சொன்னால் கூட "ஒரு குழந்தை ஊனமுற்றதாக இருந்தால் தூக்கித் தெருவில் போட்டுவிடுவோமா. குழந்தையில் ஆணென்ன, பெண் என்ன?" என்பார் என் அம்மா. நான் 4வது, 5வது படிக்கும்போது பசங்கள் என் பின்னால் வந்து கட்டிப் பிடித்து விளையாடுவார்கள். நான் அம்மாவிடம் சென்று சொல்வேன். உடனே அம்மா அந்தப் பையனைக் கண்டிப்பார்கள். திட்டுவார்கள். "உன் பையன் பொம்பள மாதிரி நடக்கான்" என்று அந்தப் பையன்களுக்கு சப்போர்ட்டாக யாராவது சொன்னால்கூட, "என் பையன் எப்படியோ நடக்கட்டும், அது என் கவலை. உனக்கென்ன? நீ எதுக்கு வம்பு பண்ணுத?" என்று கேட்டு அவர்களைத்தான் கண்டிப்பாரே தவிர ஒரு நாளும் என்னைக் கண்டித்ததில்லை. எந்தச் சூழ்நிலையிலும் நான் அம்மாவை விட்டுப் பிரிந்ததில்லை. அம்மா என்னை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்ததும் இல்லை. என் குடும்பம் கடவுள் எனக்குக் கொடுத்த வரம்.
பொன்னி


பரதமும் கற்கப் போராட்டம்
சிறு வயதில் இருந்தே எனக்கு பரதநாட்டியம் மீது தனி ஈடுபாடு இருந்தது. டி.வி.யில் வரும் நடன அசைவுகளைப் பார்த்து அப்படியே ஆடுவேன். எட்டாவது வகுப்பு படிக்கும்போது முறையாக நடனம் கற்றுக் கொள்ளலாமே என்று நினைத்து ஒரு நடனப் பள்ளியில் பரதம் கற்றுக்கொள்ளச் சென்றேன். இரண்டு, மூன்று முறை நான் சென்று கேட்டும் நடன ஆசிரியர் சேர்த்துக் கொள்ளவில்லை. ஒருநாள் அந்தப் பள்ளியை நடத்தும் நிர்வாகியின் காரை நிறுத்தி, "எனக்குப் பரதம் கற்றுக்கொள்ள வேண்டும்; என்னை வகுப்பில் சேர்த்துவிடுங்கள்" என்று கேட்டேன். அவருக்கு வியப்பு. "என்ன, கமல்ஹாசன் மாதிரி வர வேண்டும் என்று ஆசையா?" எனக் கேட்டார். நான், "இல்லை. ஒரு சிறந்த நாட்டியக் கலைஞர் ஆக வேண்டும் என்பதுதான் என் ஆசை" என்று பதில் சொன்னேன். அந்தப் பதில் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. அவரது சிபாரிசில் அதே நடனப்பள்ளியில், அதே நடன ஆசிரியரிடம் சேர்ந்து இரண்டு ஆண்டு பரதம் பயின்றேன். பள்ளியில் நடனமாடி, நிகழ்ச்சிகளை வடிவமைத்து பரிசுபெற்றேன். பிற பள்ளிகள் நடத்திய போட்டிகளிலும் பரிசு வாங்கினேன். பின்னர் பத்தாவது வகுப்பு பொதுத்தேர்வு வந்ததால் தொடர முடியாமல் போனது. இப்போது B.Sc. முடித்தபிறகு மீண்டும் பரதத்தைக் கற்க விரும்பினேன். தூத்துக்குடியில் இருந்த தமிழ்நாடு அரசு இசைப் பள்ளியில் சேர்ந்து பரதநாட்டியம் மூன்று வருட டிப்ளமா படித்தேன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். எனது ஆசிரியரும் உனக்கு இதில் நல்ல திறமை இருக்கிறது. இதில் தொடர்ந்து முயன்றால் நல்ல நிலைமைக்கு வரலாம் என்று ஊக்குவித்தார்.

நான் பரதம் படிக்கும்போதே பல இடங்களில் நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். படிப்பை முடித்தவுடன் என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்றின் மூலம் ஒரு வாய்ப்பு வந்தது. மதுரை ஆண்டிப்பட்டியில் இருபது திருநங்கைகளுக்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் ட்ரெய்னர் ஆக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அது ஒரு திருப்புமுனை.

திருநங்கைகளுக்குக் கற்பித்தேன்
எங்கள் ஊரில் திருநங்கைகள் சேலை கட்டியிருக்க மாட்டார்கள். உள்ளே பாவாடை அணிந்து சாமி ட்ரஸ் போட்டிருப்பார்கள். பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். சேலை கட்டி, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருநங்கைகளை நான் எங்கள் ஊரில் அதிகம் பார்த்ததில்லை. நானும் ஒரு பையன் போன்ற தோற்றத்தில் பேண்ட்-ஷர்ட் போட்டுத்தான் அப்போது இருந்தேன். ஆனால், என்னிடம் பயிற்சிக்கு வருபவர்களோ பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு தங்களை முழுக்கப் பெண்ணாக மாற்றிக்கொண்ட திருநங்கைகள். அதனால், அவர்கள் என்னை ஏற்பார்களோ என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால், நான் அந்தப் பயிற்சி அரங்கிற்குள் நுழைந்தவுடனேயே அது மாறிப்போனது. 'மாஸ்டர், மாஸ்டர்' என்று என்னைச் சூழ்ந்துகொண்டு, என் நலம் விசாரித்து, சாப்பாடு கொண்டு வரட்டுமா, எத்தனை மணிக்கு நாங்கள் தயாராக வேண்டும் என்றெல்லாம் பெரிய திருநங்கைகள் முதற்கொண்டு எல்லாரும் மரியாதையுடனும் அன்புடனும் கேட்டனர். எனக்கு மெய் சிலிர்த்துவிட்டது. நிகழ்வை எப்படிக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்தேனோ அப்படிக் கொண்டுபோக முடிந்தது.

அப்படி அங்கு வந்திருந்த திருநங்கைகளுள் ஒருவர்தான் அஞ்சலி. நான் சென்னைக்கு வந்ததற்கும், இந்த அளவு வளர்ந்ததற்கும் முக்கியக் காரணம், எனது திருநங்கைத் தோழி அஞ்சலிதான். அவர்தான் சென்னைக்கு வருமாறு என்னை அழைத்தார். எனது தூத்துக்குடி வாழ்க்கை ஒரு கூண்டில் அடைபட்ட வாழ்க்கையாகத்தான் இருந்தது.

ஒருபோதும் பிரியாத அன்னையுடன் பொன்னி



சென்னை வாழ்க்கை
நான் பேண்ட், ஷர்ட்டோடு தூத்துக்குடியில் இருந்தபோது மதித்த சமுதாயம், சென்னையில் சுடிதார், சேலை கட்டியபோது மதிக்கவில்லை. கண்ணோட்டமே மாறியிருந்தது. தூத்துக்குடியிலும் நான் சேலை கட்டியிருந்தால் அப்படித்தான் செய்திருக்கும். ஆனால், அங்கு நான் மனதால் பெண்ணாக இருந்தாலும் தோற்றத்தில் ஆண்போலவே இருந்தேன். இங்கே 'பெண்' ஆக மாறியதும் சமூகத்தின் கிண்டல், கேலிக்கு ஆளானேன். மற்றவர்களுக்கு வாடகை ஆயிரம் என்றால் திருநங்கைகளுக்கு ஐயாயிரம் வாடகை. (அப்போதுதானே நாங்கள் வர மாட்டோம்). பாத்ரூம் பிரச்சனை வேறு. தெருவில் நடமாடினால் சிறு குழந்தைகள் முதற்கொண்டு கிண்டல், கேலி. இப்படிப் பல பிரச்சனைகள் இருந்ததை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். என் கனவுகளை ஒரு மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு என் படிப்பிற்கேற்ற ஒரு வேலையில் சேர்ந்தேன். MCCSS (Madras Christian Council of Social Service) என்ற தன்னார்வ நிறுவனத்தில் கவுன்சலிங் பிரிவில் ஒரு வேலை கிடைத்தது. அது பெரம்பூரில் இருந்தது. நான் வியாசர்பாடி குப்பைமேடு பகுதியை ஒட்டிய ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். என்னுடன் திருநங்கை அஞ்சலியும் இருந்தார். ஓய்வுநேரத்தில் பக்கத்து வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளுக்கு பரதம் சொல்லித்தர ஆரம்பித்தேன். அதுதான் ஆரம்பம்.

அஞ்சலியின் படைப்பாற்றல்
"எனது சொந்த ஊர் பாண்டிச்சேரி. 11 வயதில் பெற்றோருடன் சென்னைக்கு வந்தேன். வளர வளர நான் திருநங்கை என்பது புரிந்து, என்னைப் போன்றவர்களுடன் பழகத் துவங்கினேன். வீட்டில் என்னைக் கண்டித்தார்கள். அடி, உதை என்று பல பிரச்சனைகள். அதனால் நான் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். சில திருநங்கைகளுடன் இருந்தேன். பின்னர் மும்பை சென்று ஐந்து வருடம் இருந்தேன். பின்னர் சென்னைக்கு வந்தேன். இங்கே கடை கேட்பதுதான் தொழிலாக இருந்தது. திருநங்கைகளுக்கு பரதநாட்டியம் சொல்லித் தருகிறார்கள் என்று அறிந்தேன். அங்குதான் பொன்னி அக்காவின் அறிமுகம் கிடைத்தது. 15 நாள் அந்தப் பயிற்சி நடந்தது. பின் நான் சென்னைக்கு வந்துவிட்டேன். பொன்னி தூத்துக்குடி சென்றுவிட்டார். பின்னர் என் அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்தார்.

எங்களுடைய குடும்பம் கோவில் சிற்பிகள் குடும்பம். அதனால் எனக்கும் ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். பொழுது போக்காக ஓய்வுநேரத்தில் செய்வேன். அப்போதுதான் 'அருவி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அது ஒரு நல்ல, வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதற்கு எனக்கு 'எடிசன் அவார்டு' கிடைத்தது. அதன் பிறகு 'நார்வே அவார்டு' கிடைத்தது. அவ்வளவு தூரம் செல்ல முடியாது என்பதால் நான் போய் வாங்வில்லை.

சிற்பம், ஜுவல்ரி மேகிங், சுடுமண் நகைகள் எல்லாம் செய்வேன். கேரளத்து மியூரல் தெரியும். விநாயகர் சிவன், அம்பாள், பைரவர் எல்லாம் வரைந்திருக்கிறேன். (பார்க்க படங்கள்). தேவையான பொருட்களைப் பொன்னிதான் வாங்கித் தருவார். இதெல்லாம் யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. விதவிதமாகச் செய்யத் தெரியும், ஆனால், வியாபாரம் செய்வதில் விருப்பமில்லாததால், யாராவது கேட்டால் செய்து கொடுக்கிறேன். அதுபோல கொலு நேரத்தில் கேட்பவர்களுக்குச் செய்துதருகிறேன். டான்ஸ் மட்டுமல்ல; வீணை வாசிக்கவும் தெரியும்."
அஞ்சலி


நாட்டியப்பள்ளி
நான் எட்டாவது வகுப்பு படிக்கும்போது ஆசிரியரால் ஒதுக்கப்பட்டேன். ஆர்வமிருந்த எனக்கு பரதம் மறுக்கப்பட்டது. நான் நடனப் பயிற்சிகளை முடித்ததும், ஆர்வமுள்ள ஒருவருக்கு, அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், பரதம் சொல்லித்தர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டேன். நான் வசித்த பகுதியில், அருகில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு பரதம் சொல்லித்தர விரும்பினேன். திருநங்கைகள் கடைக்குக் கடை சென்று பிச்சை எடுப்பார்கள், பாலியல் தொழில் செய்வார்கள்; இவர்களுக்கும் பரதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அங்கு ஆடுவதற்கு வாய்ப்புக்கேட்டு பலமுறை அலைந்தேன். வாய்ப்புக் கிடைக்கவில்லை. இறுதியாகச் சிறியதொரு அரங்கில் ஆட அனுமதி கிடைத்தது. அங்கு ஒரு சிறு நடனத்தை அரங்கேற்றம் செய்தேன். அதைப் பார்த்தபின் மக்களின் பார்வை மாறியது. என் வகுப்பில் பிள்ளைகளைச் சேர்க்க ஆரம்பித்தார்கள். இரண்டு பிள்ளைகளுடன் ஆரம்பித்தது. இன்றைக்கு 36 பேர் படிக்கிறார்கள்.

எல்லாருமே ஏழைகள். அதுவோ குப்பை மேடு. அங்கிருந்த பலரும் குப்பை அள்ளச் செல்பவர்களின் பிள்ளைகள். குழந்தைகள் அந்த வேலைக்குச் சென்று இரும்பு அள்ளினால் 50, 100 ரூபாயாவது கிடைக்குமே, டான்ஸ் என்ன செஞ்சிரப் போகுது என்றுதான் பார்ப்பார்கள். அவர்களிடம் குழந்தைகளின் ஆர்வத்தைச் சொல்லி, பெரிய பெரிய ஆட்கள்முன் ஆடவைப்போம் என்றெல்லாம் சொல்லித்தான் குழந்தைகளைச் சேர்த்தோம். அதேமாதிரி பல பெரிய மனிதர்கள் முன்னால் அவர்கள் ஆடியிருக்கின்றனர். அந்தக் குழந்தைகள் மிகச்சிறப்பாக ஆடுவார்கள். கற்பூரம்போல் உடனே பிடித்துக் கொள்வார்கள். அங்க சுத்தம், உடல் வாங்கல் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். முக பாவனைகள் மிக அழகாக இருக்கும். சிரித்த முகத்துடன் ஆடுவார்கள். கோவில், வியாபார சங்கங்களின் நிகழ்வுகள் என்று படிப்படியாக வாய்ப்புக் கிடைத்து நாங்கள் முன்னேற ஆரம்பித்தோம்.

அருவி படத்தில் அஞ்சலி, அதிதி பாலன்



குருவைத் தேடி...
ஏழைக் குழந்தைகளுக்கு பரதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் நான் M.S.W. படித்துக் கொண்டிருந்தேன். தேங்கிய நீராக இருந்துவிடக் கூடாது என்று அடிக்கடி நினைப்பேன். எனக்கு 'நட்டுவாங்கம்' கற்றுக்கொள்ள ஆர்வமிருந்தது. அதற்கு ஒரு குருவைத் தேடி அலைந்தேன். பல பிரபல நடனமணிகளைத் தேடிப் போனேன். 'சீ போ' என்று என்னை விரட்டாமல், 'நாங்கள் வகுப்பு எடுக்கவில்லை", "வெளிநாட்டுக்குப் போகப்போகிறேன்", "இப்போது நேரமில்லை" என்றெல்லாம் சொல்லித் தட்டிக் கழித்தார்கள்.

நான் படித்த நிறுவனத்தின் டைரக்டராக லதா மேடம் அவர்கள் இருந்தார்கள். அவர் எனது தேடுதலை உணர்ந்து 'ப்ரியா முரளி' என்ற நாட்டியக் கலைஞரின் நம்பர் தந்தார்கள். அவரிடம் பேசினேன். அவர், "நான் எனது குருவுக்கு உதவியாளராகத்தான் இருக்கிறேன். ஆனால் எனது தம்பி சிவகுமார் இருக்கிறார். அவர் உதவுவார்" என்று சொன்னார். நானும் நாட்யாச்சார் சிவகுமார் அவர்களைப் பார்க்கப்போனேன். அவர் 'சிவகலாலயம்' என்ற பெயரில் திருவான்மியூரில் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். அவரும் என்னை எங்கே ஒதுக்கி விடுவாரோ என்று பயந்து, என்னைப் பற்றிய செய்தி வந்திருந்த பேப்பர் கட்டிங் எல்லாம் எடுத்துப் போயிருந்தேன். ஆடச் சொன்னால் ஆடவும் தயாராகப் போயிருந்தேன். அவரைப் பார்த்து எனது ஆர்வத்தைச் சொன்னேன். அவர் என்னை ஆடச் சொல்லவில்லை, பேப்பர் கட்டிங்குகளைப் பார்க்கவும் இல்லை. "நாளைமுதல் வகுப்புக்கு வா" என்று சொல்லிவிட்டார்.

குருவும் நானும்
குரு நாட்யாச்சார் சிவகுமார் அவர்களிடம் பயிற்சி பெற்றேன். அவர் மிகச்சிறந்த மனிதர். "பொருளாதார ரீதியாக நீ பலம்பெற வேண்டும்" என்று சொல்லி, சென்னை அம்பத்தூரில் எனக்கு வகுப்பெடுக்கும் வாய்ப்பு ஒன்றைத் தந்தார். அடுத்து ஈரோட்டில் உள்ள கவிதாலயம் நடனப்பள்ளிக்கு டிரெய்னர் ஆகப் போனேன். அதுபோல பெரம்பூர் பள்ளி ஒன்றில் நடன வகுப்பு சொல்லித் தரும் வாய்ப்பையும் வாங்கித் தந்தார். இப்படியாக எனது பொருளாதாரத் தேவைகளை என்னால் சமாளிக்க முடிந்ததது.

குரு சிவகுமார், "சாப்பாட்டுப் பிரச்சனை இல்லாமல் இருந்தால்தான் உன்னால் கலையில் முழுமையாக ஈடுபட முடியும்" என்று சொல்லி எனக்குப் பல்வேறு வாய்ப்புக்களைக் காட்டிக் கொடுத்தார். பரதநாட்டியத்டிஹ்ல் எம்.ஏ. செய்வதற்கும் அவர் வழிகாட்டியாக, உறுதுணையாக இருந்தார். எனது உயர்வுக்கு அவர் ஒரு முக்கியக் காரணம்.

அபிநய நிருத்யாலயா
'அபிநய நிருத்யாலயா சமூகக் கலை மையம்' என்பது எங்கள் நாட்டியப்பள்ளியின் பெயர். 2007ல் ஆரம்பித்தோம். ஆர்வமுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் சொல்லித் தருவதுதான் எங்கள் நோக்கம். முதலில் இலவசமாகச் சொல்லிக் கொடுத்தோம். அதற்கு வரவேற்பில்லை. பின்னர் 100 ரூபாய் வைத்தோம். ஆனால், பலருக்கு அது சீப் ஆகத் தெரிந்தது. பின்னர் 300 ரூபாய் ஆக்கினோம். கொடுப்பவர்கள் கொடுக்கட்டும், வாடகைக்காவது பயன்படும் என்று எண்ணினோம். இப்போது அங்கு பயின்றவர்களே ஆசிரியராகிப் பிறருக்கும் கற்பிக்கின்றனர். மாணவர்கள் தரும் கட்டணத்தில், வாடகை, மற்றச் செலவினங்கள் போக, எஞ்சியதை சொல்லித் தருபவர்களுக்குச் சம்பளமாக அளிக்கிறோம். யாரிடமும் பணம் கேட்டுக் கட்டாயப் படுத்துவதில்லை. காரணம் ஏற்கனவே அவர்கள் ஏழைகள். எங்களது நோக்கமும் பாமர மக்களுக்கும் குடிசைவாழ் மக்களுக்கும் பரதத்தைக் கொண்டு சேர்ப்பதுதான். மேட்டுக்குடி மக்களுக்கான கலை என்று அறியப்படும் இக்கலையை ஆர்வமுள்ள எவருக்கும் - அவர் மேட்டுக்குடியோ பாமரரோ - சொல்லித்தர வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம். திருநங்கைகள் சிலரிடம் சில தீய பழக்க வழக்கங்கள் இருந்தாலும்கூட இந்தக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆக, நானறிந்த இந்தக் கலை வழியே அவர்களுக்கு ஏதாவது செய்ய முடிவுசெய்து, அவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன்.

வரதட்சணைக் கொடுமை, பெண்சிசுக் கொலை, திருநங்கைகள்: நேற்று, இன்று, நாளை, திருநங்கைகள் வீட்டை விட்டு வெளியேறுவதால் சமுதாயத்தில் பெற்றோர் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பவற்றை விளக்கும் வகையில் என்றெல்லாம் விதவிதமான தலைப்புகளில் தமிழ்நாடெங்கும் சென்று நாட்டிய நாடகங்கள் போட்டிருக்கிறோம். 'உலக வெப்பமயமாதல்' குறித்து, ஒரு சிறிய விதை தன் கருத்தைச் சொல்வது போல் நாட்டிய நாடகம் அரங்கேற்றியிருக்கிறோம். இவையெல்லாம் முழுக்க முழுக்க திருநங்கைகளை வைத்தே அரங்கேற்றம் செய்யப்பட்டன. என்னிடம் படிக்கும் மாணவர்களது நாட்டியங்களும் நிறைய அரங்கேறியுள்ளன. 12 திருநங்கைகளை வைத்துச் செய்த '60 மணி நேரம்' என்ற கான்செப்ட் மறக்க முடியாத ஒன்று. என்னிடம் கற்பவர்களில் அஞ்சலி ஆசிரியராக இருக்கிறார். இன்னொருவர் எம்.ஏ. முடித்திருக்கிறார். இன்னொரு திருநங்கை, எஞ்சினியரிங்கில் கோல்ட் மெடலிஸ்ட், விரைவில் அரங்கேற்றம் செய்யப்போகிறார். இன்னொரு திருநங்கையும் எஞ்சினியரிங்தான். அவரும் அரங்கேற்றத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

நடனம் கற்பிக்கிறார் பொன்னி, குரு சிவகுமார்



ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்கள்
திருநங்கைகள் மீதான கசப்புணர்விற்கு மக்களின் கண்ணோட்டம்தான் காரணம். ஒரு சில பெண்கள் தவறு செய்தால், தவறாக நடந்தால், ஒட்டுமொத்தப் பெண்களை யாரும் குற்றம் சொல்வதில்லை. அதுபோல ஆண்களில் பலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக அனைத்து ஆண்களையும் குற்றம் சாட்டுவதில்லை. ஆனால் திருநங்கைகளில் ஒரு சிலர் தவறு செய்வதால் ஒட்டுமொத்தத் திருநங்கைகளும் அப்படித்தான் என்பதான சமூகக் கண்ணோட்டம் இருக்கிறது. இதுதான் எங்கள் மீதான கசப்புணர்விற்கு மிக முக்கியக் காரணம். தங்களைப்போல ரத்தமும் சதையும் உள்ள மனிதர்கள்தாம் நாங்களும் என்னும் புரிதல் பலரிடம் இல்லை.

முன்பெல்லாம் சேரியில்தான் திருநங்கைகள் வசித்தனர். ஆனால் திருநங்கைகள் நல வாரியம் வந்த பின்னர் அந்த நிலைமை பெரிதும் மாறியிருக்கிறது. எங்கள் வாழ்வாதாரத்தைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது தமிழ் நாடுதான். ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாளம் என்று எல்லாமே முறையாகக் கிடைப்பது தமிழகத்தில்தான். இதைப் பெறுவதற்காகவெல்லாம் நிறையப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. என்.ஜி.ஓ.க்களும் துணை நின்றன. இப்போதெல்லாம் திருநங்கைகள் நகரெங்கிலும் வசிக்கிறார்கள். வீடு தரமாட்டேன் என்று சொன்னவர்கள் கூட, திருநங்கைகளுக்கு வீடு வாடகைக்கு விடுமளவிற்குப் புரிதல் வளர்ந்திருக்கிறது.

இன்றைக்கு திருநங்கைகள் காவல்துறையில் இருக்கிறார்கள், பியூட்டிஷியன் ஆக இருக்கிறார்கள், டான்ஸில் இருக்கிறார்கள், வங்கியில் வேலை செய்கிறார்கள், வக்கீலாக, நீதிபதியாக இருக்கிறார்கள். அரசியலில் இருக்கிறார்கள். வரும் நாட்களில் பல்வேறு துறைகளில் திருநங்கைகள் மேலே வருவார்கள். மெல்ல மெல்ல இந்தக் கசப்புணர்வு மாறிவிடும்.

இன்னும் புரிதல் வேண்டும்
திருநங்கைகளுக்கென அரசு அறிவித்திருக்கும் ஆணைகளின்படி, சலுகைகள் அனைத்தும் அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கும்படி அரசு ஆவன செய்யவேண்டும். அரசாணை அனுப்புவதோடு நில்லாமல் அது செயல்வடிவம் பெறவேண்டும். திருநங்கைகளுக்கு வேலை கொடுக்கலாம் என்று இருக்கிறது. அதன்படி சிலருக்குத்தான் கிடைக்கிறது. என் அனுபவத்தையே எடுத்துக் கொண்டால் அரசு இசைப்பள்ளி வேலைக்கு நான் சென்றிருந்தேன். இறுதிக்கட்டத் தேர்வாகி முதல் 10 இடத்துக்குள் நான் இருந்தேன். இரண்டு இடங்களுக்குத்தான் தேர்வு. முஸ்லிமாக இருந்தால் ஒரு பணியிடம் நிச்சயம். எஞ்சிய ஓரிடம் உனக்குத்தான் என்று என் தோழிகள் கூறினர். திருநங்கையாக என்பதற்காகக் கொடுக்கலாமே. ஆனால் கொடுக்கவில்லை. ஆக, திருநங்கைகளுக்கு இதுபோன்ற பணிகளில் ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்கிறோம். ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ ஆதரவளிக்கக் குடும்பம் இருக்கிறது. திருநங்கைகள் தாங்களேதான் உதவிக்கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் திருநங்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க யோசிப்பார்கள் அல்லது மறைமுகமாகக் குரல் கொடுப்பார்கள். இப்போது தைரியமாகக் குரல் கொடுக்க முன்வருகிறார்கள். திருநங்கைகள் பற்றிய கேலிச்சூழல் மாற வேண்டுமென்றால் அவர்களைப் பற்றிய செய்திகள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறைக்காவது எங்களைப் பற்றிய சரியான புரிதல் ஏற்படும். விழிப்புணர்ச்சி வரும்.

அரிய குருவும் அருமை சிஷ்யையும்



நேர்மறைச் சிந்தனை முன்னேற்றம் தரும்
அலைபாயும் வயதில் என்னைத் தற்காத்துக் கொள்ள ஸ்போர்ட்ஸில் கவனம் செலுத்தினேன். 1500 மீ. ஓட்டத்தில் மாவட்ட அளவில் முதலிடம். 1 2 கி.மீயிலும் மாவட்ட அளவில் வந்தேன். என்னிடம் இருக்கும் குறைகள் என மக்கள் கருதியவற்றை நான் நிறைகள் ஆக்கிக் கொண்டே வந்தேன். எனது திருநங்கைத் தோழிகளுக்கும் அதுதான் சொல்வேன். உங்களிடமிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் எல்லாவற்றையும் விலக்கிவிடுங்கள். பாசிடிவாக எண்ணுங்கள். நம்மால் முடியும் என்று எண்ணுங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும். முடியும் என்று நினைத்தால் முடியும். முடியாது என்று நினைத்தால் முடியாது. அதுதான் அனுபவ உண்மை. எனது முன்னேற்றத்திற்கு எனக்குள் இருந்த வைராக்கியமும், என்னுடைய வாழ்க்கைச் சூழலும் ஒரு காரணம். எனது குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் இல்லை. முதல் பட்டதாரியே நான் தான். எனது மேல் படிப்பைத் தொடர எனது குரு முதற்கொண்டு பலர் உதவினர். இரண்டாவது நான் மீடியாவில் ஓரளவிற்குப் பிரபலமாக ஆரம்பித்தேன். எல்லாம் எனக்கு உதவியது.

திருநங்கை பியூட்டி சொல்கிறார்...
"எனது பெயர் பியூட்டி. தூத்துக்குடி மாவட்டம். 2009ல் சென்னைக்கு வந்தேன். 2010ல் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். ஆரம்பத்தில் பிச்சை எடுத்தேன். நண்பர் மூலம் பொன்னி அத்தையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் டான்ஸ் நன்கு ஆடுவேன். அதுபற்றி அவரிடம் சொன்னேன். ஆடிக் காட்டினேன். சில திருத்தங்கள் சொன்னார். பின் அவருடன் இருந்து மேலும் கற்றுக்கொண்டேன். அத்தை மிகவும் பங்சுவல் ஆக இருப்பார். 6.00 மணிக்கு ரெடியாக இருக்க வேண்டும் என்றால் இருக்க வேண்டும். 6.10 ஆனால் விட்டுவிட்டுப் போய் விடுவார். அவர் கடின உழைப்பாளி.

எனக்கு பரதம் மட்டுமில்லாமல் நாட்டுப்புற நடனமும் தெரியும். அதிலும் நிறைய நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார். 60 மணி நேரம் என்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் என்னையும் பங்கேற்க வைத்தார். அதைப் பெரிய சாதனையாக நினைக்கிறேன். அதற்காக எனக்கு கின்னஸ், ஏசியா புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸ் என்று நிறையச் சான்றிதழ்கள் கொடுத்தார்கள். நான் அத்தையிடம் வந்திருக்காவிட்டால் பிச்சை எடுத்துக் கொண்டோ அல்லது பாலியல் தொழில் செய்து கொண்டோ இருந்திருப்பேன். சன்.டி.வி. நிகழ்ச்சியில் அத்தையுடன், விஜய் சேதுபதி அவர்களுடன் கலந்துகொண்டது ஒரு சந்தோஷமான விஷயம். தூத்துக்குடியில் ஒரு பள்ளி தொடங்கி நடத்துங்கள் என்று அத்தையிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
பியூட்டி


பொருளாதாரச் சூழல்
பொருளாதாரச் சூழலில் சற்றுத் தொய்வு இருக்கும், அப்புறம் சரியாகும். இப்படியாகத்தான் தொடர்கிறது. ஈரோட்டில் சில மாதங்களாக வகுப்புகள் இல்லை. விரைவில் அது தொடரும். முன்பு பெரம்பூர் ஸ்கூலில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டு வருடமாக அது தடைப்பட்டிருக்கிறது. என் அம்மா என்னுடன் இருக்கிறார். அவரை நான் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை இருக்கிறது. அடுத்த வருடம் மீண்டும் அந்த வாய்ப்புக் கிடைக்கும் என நினைக்கிறேன்.

அஞ்சலி மரத்தில் செதுக்கிய சிவன், பியூட்டி



துணை நிற்கும் தூண்கள்
எனக்கு உறுதுணை எனது அம்மா. அடுத்தது சகோதரி அஞ்சலி. அஞ்சலி இல்லையென்றால் நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. திருநங்கைகளின் உலகுக்குள்ளேயே நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதையெல்லாம் மீறித்தான் வளரவேண்டும். ஆபரேஷன் செய்துகொள்வது ஒரு பெரிய போராட்டம். வலி, வேதனை. எனது குருவாக இருக்கும் கீதா அவர்கள் எனக்கு மிகவும் சப்போர்ட். எனது சகோதரிகளும், உறவுகளும் என்னை ஒதுக்காமல் என் மன, உடல் நிலையைப் புரிந்துகொண்டு உறுதுணையாக இருந்தனர். எனக்கு வாய்ப்புக் கொடுத்த குரு சிவகுமார் அவர்களை மறக்கவே முடியாது. என்னிடம் கற்றுக்கொண்டு, துணையாக இருக்கும் எனது நாட்டியப்பள்ளியின் காயத்ரி, பிரியதர்ஷினி போன்ற குழந்தைகள் என்று பலரைச் சொல்லலாம்.

என்னுடைய ரோல் மாடல் வைஷ்ணவி அத்தை. அவர் ஆட்டோ ஓட்டும் திருநங்கை. எனக்குத் தன்னம்பிக்கையில் அவர்தான் குரு. இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுக்கோப்பை நான் அத்தையிடம் கற்றுக்கொண்டேன். நான் துவண்ட நேரத்தில் எல்லாம் எனக்குத் தோள் கொடுத்தவர் அவர்தான். அவர் பேசினாலே எனக்கு எனர்ஜி கிடைத்துவிடும்.

என்னுடைய நண்பர்கள் பலரும் "உன் அனுபவங்கள் எல்லாருக்கும் தெரியவேண்டும். பலருக்கும் பயன்படும். எழுது" என்கிறார்கள். எழுத வேண்டும்.

திருநங்கைகளுக்கான செய்தி
எனக்கு ஆடத் தெரியும் என்று சொல்லிக் கொண்டு நான் வீட்டுக்குள்ளேயே இருந்தால் எப்படி வாய்ப்புக் கிடைக்கும்? நான் அதற்கான முயற்சிகளை எடுத்தால்தானே எனக்கு வாய்ப்பு வரும்? திருநங்கைகள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சமுதாயத்திற்கு அவர்களைத் தெரியவரும். புறக்கணிப்பும், போராட்டமும் இருக்கத்தான் செய்யும். மனம் சோர்ந்துவிடக் கூடாது. உழைக்க வேண்டும்.

உற்சாகமாகப் பேசுகிறார் பொன்னி. அதில் பக்குவமும் பட்டறிவும் தெறிக்கின்றன. வீட்டையொட்டிச் சிறிய சிவன் கோயில் ஒன்றை அமைத்திருக்கிறார். "பிரதோஷ காலத்தில் நிறையப் பேர் வருவார்கள். அவர்கள் கையாலேயே அபிஷேகம் செய்வார்கள். அதுதான் இக்கோயிலின் சிறப்பு" என்கிறார். பொன்னி தொட்டதெல்லாம் பொன்னாக வாழ்த்தி விடைபெற்றோம்.

சந்திப்பு, உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com