தென்றல் பேசுகிறது....
அவருக்குச் சிறுவயதாக இருந்தபோதே, அவரது தாயார் மதுவுக்கு அடிமையான தந்தையை விவாரத்துச் செய்துவிட்டார். பின்னர் தாயாரின் ஓரின உறவுக் குடும்பத்தில் வளர்ந்தபோதும் அங்கே அன்பின் பெருக்கு இருந்ததாகக் குறிப்பிட்டார் அவர். ஆனால் வறுமை வாட்டியது. கோடை விடுமுறையில் பேக்கரியில் வேலை செய்வார். காலையில் வீடு வீடாகப் போய்ச் செய்தித்தாள் போடுவார். அப்படிப் போராடிக் கல்லூரிப் படிப்பையும் முடித்த அவர் இன்றைக்கு ஓர் ஐரோப்பிய நாட்டின் பிரதமர்! அவர்தான் ஃபின்லாந்து தேசத்தின் 34 வயதுப் பிரதமரான சன்னா மரீன் (Sanna Marin). அவர் உலகின் மிக இளவயதுப் பிரதமரும் கூட. ஒரு பெண், அதிலும் ஏழை, உழைப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த இளவயதினர், பிரதமராகியிருப்பது உலகின் பார்வையை ஃபின்லாந்தை நோக்கித் திரும்ப வைத்திருக்கிறது. நமக்கும் அதில் மகிழ்ச்சிதான். வாருங்கள் சன்னா மரீனை வாழ்த்துவோம்.

★★★★★


'அற' என்றால் இல்லாமல் போக என்று பொருள். இன்று பாரதத்தில் நடக்கும் "அறப் போராட்டங்கள்", ரயில்கள், பஸ்கள், பொதுமக்கள் சொத்துக்கள், கடை கண்ணிகள் என்று எந்த வேறுபாடும் பாராமல் எல்லாம் "இல்லாமல் போகச்செய்யும்" போராட்டங்களாகி விட்டது வருத்தத்துக்குரியது. "பெட்ரோல் நிறைய நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். பொதுச்சொத்தை எரிக்கத் தயாராக இருங்கள்" என்று ஓர் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் "சோலியை முடிச்சுருவீங்கன்னு நெனச்சேன், முடிக்க மாட்டீங்கறீயளே" என்று பேசுகிறார் ஒரு மதம்சார்ந்த கட்சிக் கூட்டத்தில் 'தமிழறிஞர்' ஒருவர். எதிர்ப்பைக் காட்ட ஒரே வழி பேரழிவை ஏற்படுத்துவதுதானா? இதன்மூலம் எதிர்ப்பைத்தான் காட்டுகிறோமா அல்லது பேசுகின்ற வாதங்களுக்கு அப்பாற்பட்டு வேறெதையோ நிரூபிக்க முயல்கிறோமா? தமிழரின் இலக்கியம், அறிவு, பண்பாடு ஆகியவை தமக்கென ஒரு தனி மதிப்பைப் பெற்றவை, இன்று நம்மைச் சுற்றிக் காணப்படும் இந்த நடவடிக்கை எதுவும் நமக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. புத்தாண்டு நம் போக்கினை மாற்றட்டும்.

★★★★★


சமூகத்தில் விடுபட்ட மாந்தரின் பெருமையை எப்போதும் தென்றல் வெளிச்சமிட்டுக் காட்டி வந்துள்ளது. இந்த இதழில் திருநங்கை பொன்னி தமது பாலியல் தேர்வின் காரணமாகப் பட்ட பாடுகளையும், அவற்றையும் மீறி நடனக் கலையில் தேர்ச்சி பெற்று, அதில் முத்திரை பதித்து வருவதையும் நமது நேர்காணல் நெஞ்சைத் தொடும் வண்ணம் படம்பிடிக்கிறது. அதுபோலவே, எழுத்துலகில் 'இலக்கிய அந்தஸ்தை' அடையாத போதும், மிகப் பெருமளவில் வாசகர் கவனத்தை ஈர்த்துள்ள ரமணி சந்திரன் இவ்விதழின் 'எழுத்தாளர்' பகுதியில் இடம்பிடித்திருக்கிறார். உடல் இயங்காத நிலையிலும் உணர்ச்சி பூர்வமான கவிதைகளை அள்ளிக்கொட்டும் யாழினிஸ்ரீயை, ஓட்டு வீட்டில் இருந்துகொண்டு ராக்கெட் நகரம் நாசாவுக்கு வரத் தயார் செய்துகொண்டிருக்கும் ஜெயலட்சுமியை, தவில் வாசிப்பில் சாதனை புரிந்துகொண்டிருக்கும் அமிர்தவர்ஷினியை எதிர்வரும் பக்கங்களில் சந்திக்கப் போகிறீர்கள். அப்படியே பிள்ளையார் பட்டிக்கும் ஒருமுறை போய் வரலாம்.

வாசகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி, பொங்கல், இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துக்கள்.

தென்றல்
ஜனவரி 2020

© TamilOnline.com