அரங்கேற்றம்: சுருதி ரமேஷ்
ஆகஸ்ட் 11, 2019 அன்று சுருதி ரமேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் நியூ ஹாம்ப்ஷயரில் (Seifert Performing Arts Center, Salem) நடைபெற்றது. குரு சுஜா மெய்யப்பன் அவர்களை நடன இயக்குநராகக் கொண்ட 'கோலம் நடன அகாடெமி'யின் மாணவராவார் சுருதி.

நிகழ்ச்சியின் தொடக்கமான புஷ்பாஞ்சலியில் நடராஜருக்கும், குருவுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் மலர்வணக்கம் செய்தார். தொடர்ந்து, தடைகளை நீக்கும் விநாயகக் கடவுளின் மேல் ஸ்துதிக்கும் ஸ்லோகத்திற்கும் அழகிய இளமயில் போல் ஆடிக் கவனத்தை ஈர்த்தார். கடினமான தாளவகை கொண்ட பதத்தை, திரிபுரசுந்தரி நாயகியின் மீது அஹிர் பைரவி ராகத்திற்கு ஆடியது வெகு அழகு! நளினகாந்தி ராகத்தில், நடராஜரின்மேல் அமைந்த வர்ணத்தை பாவம், லயம் ததும்ப ஆடினார் சுருதி.

இடைவேளைக்குப் பிறகு, பரத நாட்டியத்தின் முக்கிய அம்சங்களான கவுத்துவத்தை அப்பழுக்கில்லாத பாதவேலையுடன் ஆடி ஜமாய்த்தார். ராகமாலிகையில் மகாகவி பாரதியின் படைப்பில் வரும் 'மழை'க்கு அவர் ஆடிய நடனத்தில் சுறுசுறுப்பும், வீரமும் நிரம்பியிருந்தன. தொடர்ந்து வந்த காவடிச்சிந்து' அரங்கத்தைக் கலகலக்க வைத்தது. அழகிய தில்லானாவுடன் அரங்கேற்றம் நிறைவுகண்டது.

பெற்றோர் திரு ரமேஷ் தயாளன், திருமதி சத்யா ரமேஷ் தமது புதல்வி நாட்டிய மேதையாக வரவேண்டும் என்ற அவாவில் சிறுவயதிலேயே குரு சுஜா மெய்யப்பன் அவர்களிடம் ஒப்படைத்தனர். குருவின் உழைப்பை சுருதியின் நேர்த்தியான நடனத்தில் தெள்ளெனப் பார்க்க முடிந்தது.

அரங்கேற்றத்தை ஆங்கிலத்திலும், இனிய தமிழிலும் திருமதி பிரியா தயாளன் மற்றும் திரு.சரவணன் மெய்யப்பன் தொகுத்தளித்தனர். தனது பேத்தியின் நடனத்தைப்பற்றி அழகும், அன்பும் நிரம்பப் பேசினார் திரு தயாளன் அவர்கள்.

குரு மதுரை ஆர். முரளிதரன் அவர்களின் இயக்கத்தில் உருவான பாடல்களை இ.பி. சுதேவ் வாரியர் பாட, வித்துவான் கே.ச. சுதாமன் (மிருதங்கம்), ராமன் தியாகராஜன் (புல்லாங்குழல்), வீரமணி நாகராஜன் (வயலின்) ஆகியோரின் அருமையான இசைத்துணை அரங்கேற்றத்துக்கு மெருகூட்டியது என்றால் மிகையல்ல.

தகவல்: பமிலா வெங்கட்,
பாஸ்டன்
புகைப்படம்: க்ரிஷ் வேல்முருகன்,
க்ரிஸ்ப் ஃபோட்டோஸ்

© TamilOnline.com