வேண்டுமடி எப்போதும் விடுதலை
நவம்பர் 10, 2019 அன்று பாஸ்டனருகே ஆண்டோவர் நகரத்தில் சின்மயா மிஷன் அரங்கில் மகாகவி பாரதியாரின் பாடல்களைக் கொண்டாடிய 'வேண்டுமடி எப்போதும் விடுதலை' என்ற அருமையான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை உருவாக்கி அமைத்தவர், சென்னையைச் சேர்ந்த்த பிரபல இசை மற்றும் நடன மேதை திருமதி சுஜாதா விஜயராகவன். சுதந்திரப் போராட்டம், பெண் விடுதலை, குழந்தைப் பாசம், ஆத்மஞானம் என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு பாரதியார் எழுதிய அழிவில்லாப் பாடல்களுக்கு, பாஸ்டனைச் சேர்ந்த்த பிரபல கலைஞர்கள் உயிரூட்டினர்.

சுதந்திரப் போராட்டம் பற்றிய "வீர சுதந்திரம் வேண்டி நின்றார்", "பாருக்குள்ளே நல்ல நாடு" "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே" பாடல்கள் தாய் நாட்டின்மீது பக்தியுணர்வை எழுப்பின. ஃபிஜித்தீவின் கரும்புத் தோட்டங்களில் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பேசிய "கரும்புத் தோட்டத்திலே", "விடுதலை விடுதலை", "கும்மியடி" , "புதுமைப்பெண் போற்றி" போன்ற பெண்விடுதலைப் பாடல்களுக்கான நடனங்கள் பாரதியாரின் தீர்க்க தரிசனத்தைச் சித்தரித்தன. "சின்னஞ்சிறு கிளியே", "உன் கண்ணில் நீர் வழிந்தால்", "ஓடி விளையாடு பாப்பா", "சின்னஞ்சிறு குருவிபோல்", "ஒளி படைத்த கண்ணினாய்" பாடல்கள் பாரதியார் குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பைச் சித்திரித்தன. வேத உபநிஷத்துக்களை ஆத்மஞானக் கவிதையாக வடித்த "கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட", "யாதுமாம் ஈசவெள்ளம்", "சாத்திரங்கள் வேண்டாம்", "ஜெயபேரிகை கொட்டடா" ஆகிய பாடல்கள் மனதைக் கவர்ந்தன.

நடனமணிகள் சுனந்தா நாராயணன் சௌம்யா ராஜாராம், ஐஸ்வர்யா பாலசுப்ரமணியன், தீபா ஸ்ரீநாத், சுமனா ராவ், ஸ்மிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மானஸா ஜெயந்தி பாடல்களுக்கு நாட்டிய வடிவம் கொடுத்தனர். இசைக் கலஞர்கள் பிரசன்னா வெங்கடேஷ், ரோஜா கண்ணன், தாரா ஆனந்த், துர்கா கிருஷ்ணன், ரஸிகா முரளி மற்றும் மாலி சந்தானகிருஷ்ணன் பாடல்களை இசைத்தனர். அற்புதமானதொரு நிகழ்ச்சியை அளித்த கலைஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

தகவல்: அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
பாஸ்டன்
படங்கள்: செந்தில் குமார்

© TamilOnline.com