டிசம்பர் 2019: வாசகர்கடிதம்
தென்றல் நவம்பர் இதழில் வெளிவந்த துரை ஸ்ரீனிவாசன் நேர்காணலில் அவரது கண் தெரியாத பாட்டி அவரை ஊக்குவித்ததாகக் கூறியது நெஞ்சைத் தொட்டது. இத்தகைய திறமை வாய்ந்த இளைஞர்களைத் தென்றல் அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வருவது பாராட்டத் தக்கது.

14 வயதிலேயே ஆங்கில நாவலை எழுதி வெளியிட்டுள்ள தீபிகா ஜெயசேகரின் ஆர்வமும், முயற்சியும் பாராட்டத் தக்கன. சீதா துரைராஜ் அவர்கள், அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி கோவிலைப் பற்றிய தகவலை மிக அழகான நம்மாழ்வார் பாசுரத்துடன் தொடங்கி, நம்மைக் கோவிலைச் சுற்றி அழைத்துக் கொண்டு போய்விட்டார். அவரது அரிய ஆன்மீகப்பணி தொடரட்டும்.

ஆர். கண்ணன், கீதா கண்ணன்,
சான்ட கிளாரா, கலிஃபோர்னியா

★★★★★


நவம்பர் தென்றலில் சங்கீத ஞான நிதியான இளைஞர் துரை ஸ்ரீனிவாசன் நேர்காணல் படித்து மகிழ்ந்தேன். இன்றய இளங்கலைஞர்கள் பலருக்கு அவர் முன்னோடியாகத் திகழ்கிறார். உலக ஜூனியர் செஸ் சாம்பியனாக வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் பிரக்ஞானனந்தாவால் இந்தியர்கள் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளோம். சிறார் நாவல் படைத்துள்ள இளம்சாதனையாளர் தீபிகா ஜெயசேகரின் சாதனையும் பாராட்டத் தக்கது. நினைத்துப் பார்க்க முடியாத, சிந்திக்க வைக்கும் சிறுகதையை ஜே. ரகுநாதன் அற்புதமாக எழுதியிருக்கிறார். சாரதாவின் குதிரைவண்டித் தாத்தா சிறுகதையும் அருமை.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா



© TamilOnline.com