மகதலேனா மரியாள்
மகதலேனா மரியாள் கண் விழித்துப் பார்த்தாள். அவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை. ஒரு கணம்தான் எங்கே இருக்கிறோம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஒரு வீட்டின் மேல்மாடி அறை. ஒரு பகுதி சாளரங்கள் கொண்ட அறை இருந்தது, மறுபுறம் கட்டப்படாத வெளியாக விடப்பட்டிருந்தது. சாளரங்களுக்கு வெளியே ஜெருசலேம் நகரம் ஆங்காங்கே மின்னும் விளக்கொளியோடு தூங்குவதுபோல பாவனை செய்து கொண்டிருந்தது.

பஸ்கா பண்டிகைக்கு வந்திருந்த வெளியூர் மக்களும் மாக்களும் வந்திறங்கியிருந்தும் பண்டிகைக்குரிய குதூகலமில்லை. வானம் கருமையைக் குழப்பி அடித்தது போல இருண்டிருந்தது. பெளர்ணமி நிலவு எங்கோ காணவில்லை. இளவேனிற் மேகங்கள் மறைத்ததோ இல்லை நிலவுக்கு அன்று மனிதத்தைக் காண மனமில்லையோ? கூதல் வாடைக் காற்றடித்தாலும். ஒருவித இறுக்கமும் புழுக்கமும். கண்ணெல்லாம் திகுதிகுவென எரிந்தது. முதுகு விண்விண் என வலித்தது அவளுக்கு.

அறையில் சற்றுத் தள்ளி மண்டியிட்டு முனகியபடிக் கிடந்தாள் வயதான பெண் ஒருத்தி, இன்னும் சற்றுத் தள்ளிப் புனித வேதாகமத்தைக் கட்டிக்கொண்டு கண்ணை இறுக்கி மூடியபடி முழங்காலில் மற்றொரு பெண்.

இதயத்தை யாரோ பிடுங்கி எடுத்தது போல மூச்சுத் திணறலோடு ஒரு வலி அவள் நெஞ்சில் பரவியது. கணப்பொழுதில் அந்த ஞாபகம்! அவள் பெரிதும் நேசித்த கருணையையே மொழியாய், செயலாய் வாழ்ந்த அவள் மரியாதைக்குரிய ரபீ, அவள் ஆசான் நாசரேயனாகிய இயேசு கிறிஸ்து நேற்றுச் சிலுவையில் அறையப்பட்டார்.

அங்கே முனகியபடி கிடப்பவள் அவரைப் பாராட்டி வளர்த்த அவருடைய தாய் மரியாள். தேவதூதன் அருளிய வாக்கின்படிப் பிறந்த அவரை, விடிவெள்ளி ஒன்று மூன்று வருடங்கள் வானில் நின்று வாழ்த்தியதே! அத்தகைய அருமைச் செல்வத்தைத் தொலைத்த அவளது துயரத்தை எந்த வார்த்தையில் வடிக்கலாகும் என்று எண்ணிக்கொண்டாள்.

பக்கத்தில் இருப்பவள் சலோமே. அவரை நேசியாதவர் எவருண்டு இங்கே? அவளும் மனமுடைந்து கிடந்தாள் ஏதேதோ அரற்றியபடி.

அடுத்து என்ன என அயர்ந்து அவர்களைப் பார்த்தபடி உட்கார்ந்தாள் மகதலேனாவின் சீமாட்டியான இந்த மரியாள். அவளுடையது செழிப்பான குடும்பம். சாயப் பட்டறைகளும், நெசவும்தான் அவர்கள் பரம்பரைத் தொழில்.

யாருடைய பாவமோ எந்தச் சாபமோ மகதலேனாள் பதின் வயதிலேயே மிகுந்த மன உளச்சலும், மனச்சிதைவும் இன்னும் பல நோய்களும் பிடித்தவளாய் எந்த மந்திரவாதியின் மாயமும் எந்தவித வைத்தியரின் பக்குவமும் குணப்படுத்த முடியாதவளாய், கைவிடப்பட்டவளாய் கரடுகளைச் சுற்றித் திரிந்தாள். அவளை விரட்டியவர்கள், பரிகசித்தவர்கள், அவளைக் கண்டு பயந்தவர்கள் எனப் பலருண்டு. ஆனால் அவர் மனமுருகி ஆசிர்வதித்த கணத்தில் அத்தனை பிணிகளும் அவளை விட்டு நீங்கின!

அதுமுதல் அவருடைய முதன்மைச் சீடராய் அவரைப் பின்தொடர்ந்தாள்; அவருடைய நேசத்திற்குரிய பன்னிரண்டு சீடர்கள் கூடப் புரிந்துகொள்ள முடியாத வேத ரகசியங்கள் மிகத் துல்லியமாய் விளங்கும் ஞானம் பெற்றவளாய் இருந்தாள். அவளுக்கு அவரது காலடியில் அகிலத்தின் ஞானமெல்லாம் ஒன்றுமில்லாதிருந்தது. அவர்பால் கொண்ட பக்தியினால் அவள் வீட்டை விட்டிருந்தாள். எத்தனை அருமையான நாட்கள்? எண்ணிப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள்.

வெறுமையான மனிதர்களுக்கு அவருடைய வார்த்தை அருமருந்தாய் இருந்தது. யூதர்களோ, வெளியாட்களோ எவரையும் பாகுபாடில்லாமல் ரட்சித்த இறையின் அன்பின் ஒளிவிளக்கு நேற்று அணைக்கப்பட்டதே. இனி நாங்கள் என்ன செய்வோம்?

எல்லாருக்கும் நேசத்தையும், சக மனிதரிடையில் பாசத்தையும், மன்னிப்பின் பேராற்றலையும் எடுத்து விளம்பிய அன்பருக்குக் கிடைத்தது என்னவோ கசையடிகளும், முட்கிரீடமும், சிலுவை மரணமும்தான்.

இதுதான் உண்மையெனில் அவர் வணங்கிய, வணங்கச் சொல்லித் தந்த அரும்பெரும் இறையின் ஆற்றல் ஒன்றுமில்லை என்றாகுமே. அவர் பிறந்த தினத்தில் வானில் தோன்றிய அந்த வெள்ளிக்கு அர்த்தமென்ன! இன்று காணும் வானம்போல மனம் இருளில் மறுகுதே! இனி எங்கள் வாழ்க்கைக்கு எதை ஆதாரமாய்க் கொள்வோம். எனக்கு நிகழ்ந்த முழுமையான சுகம், மனமாற்றம் அவர் கையினால் தானே வந்தது.

லாசரூவை உயிரோடு எழுப்பிய மெஸையாதானே அவர். இடிக்கப்பட்ட கோவிலை நான் மீண்டும் எழுப்புவேன் என்றாரே அதன் பொருள் என்னவென விளங்குமுன் எடுத்துக் கொள்ளப்பட்டாரே. எத்தனை அதிசயங்கள், எத்தனை அற்புதங்களை அவர் கரம் புரிந்தது. அதை நானே கண்டேனே.

அவள் இதயத்தில் ஓராயிரம் கேள்விகளும், வருத்தமும் சேரச் சோர்ந்து போனாள்.

யாரோ வரும் சத்தம் கேட்டது யோசேப்பு வந்தார். அரிமத்தியாவைச் சேர்ந்த தனவந்தர். அவர்தான் ரோமாபுரி அரசிடம் மன்றாடித் தனக்கென்று வைக்கப்பட்ட கல்லறையைக் கொடுத்தார். கிறிஸ்துவை மெல்லிய துணியினால் சுற்றி நல்லடக்கம் செய்தாயிற்று. இன்று காலை அவருடைய உடலில் மூலிகைகளைப் பூசிப் பாடம் செய்யவேண்டும்.

விலையுயர்ந்த மூலிகைகளைத் தருவித்திருந்தார் யோசேப்பு. இயேசு பெருமானிடம் மிக அதிகமான அன்பும் மரியாதையும் கொண்டிருப்பவர். மூன்று பெண்களும் அமைதியாக மூலிகைகளைத் தரம் பார்த்து, பிரித்து தயராக்கினார்கள். பின்னர் இளமஞ்சள் ரேகைச் சூரியன் வருமுன்னே கல்லறையை நோக்கிப் பயணப்பட்டனர்.

பொல்லாத யூதத் தலைவர்கள் எங்கே இயேசுவின் சீடர்கள் அவர் உடலைத் திருடி விடுவார்களோ என் எண்ணிக் கல்லறைக்கு காவல் வேறு வைத்திருந்தனர். மகதலேனாள்தான் முதலாவதாகக் கல்லறையை அடைந்தாள். அங்கே கல்லறையின் வாயிலில் அடைக்கப்பட்டிருந்த பருமனான கல் அகற்றி வைக்கப்பட்டிருந்தது.

சற்று கலக்கமடைந்தவளாகப் பதற்றத்துடன் உள்ளே ஓடினாள், கல்லறை காலியாகக் கிடந்தது. அவள் நெஞ்சம் பதைபதைத்து அவர் உடலைக் காணாது குழப்பமடைந்தவளாய் வெளியே ஒடினாள் அங்கே தோட்டத்தில் நடுநாயகமாக நின்று கொண்டிருந்தவரிடம் கண்ணீர் மல்க "ஐயா தோட்டக்காரரே, உங்களுக்கு இயேசுபிரானை எந்த இடத்திற்கு எடுத்துச் சென்றார்கள் சொல்ல இயலுமா? நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன்" என்றாள்.

அவர் தன் தலையிலிருந்த துணியைச் சற்று விலக்கித் தமது முகத்தைக் காட்டி "மரியாளே!" என்றழைத்தார்.

ஒரு கணம் அவளுக்கு உலகம் நின்றுபோனது போலப் பிரமை ஏற்பட்டது. அப்படியெனில் அவர் இறக்கவில்லை. உயிர்த்தெழுந்து விட்டார். அவர் கூறியதுபோலவே அந்த கோயில் மறுபடியும் கட்டப்பட்டது.

"ரபூனி!" (போதகரே) என்று கூவியழைத்து அவர் கால்களில் விழுந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள். அவர் பரிவோடு அவளிடம் "எழுந்திரு , நான் உயிர்தெழுந்தேன் என்று சீடர்களிடம் போய்ச் சொல். அவர்களைக் காண ஆவலாய் இருப்பதாகச் சொல். முக்கியமாக பேதுருவிடம் சொல்" என்றார்.

உற்சாகம் தொற்றிக்கொள்ள, உலகிலேயே முதன்முதலாகத் தேவ சமாதானத்தின் நற்செய்தியை உரைக்க மகதலேனாள் ஓடினாள்.

இன்றும்கூட எத்தனையோ அன்பு பொங்கு மகதலேனாள்கள் உலகெங்கும் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் அவர் காட்சி தருகிறார், நாடி வருகிறார். அன்பும் நம்பிக்கையும் உள்ள இடத்திலெல்லாம் ஆட்சி செய்கிறார் அதிசயம் புரிகிறார் அண்ட சராசரங்களைப் படைத்த அருட்பெரும் இறையின் மகன் இயேசு!

தேவி அருள்மொழி,
இல்லினாய்

© TamilOnline.com