மரபணு மாற்றத்தின் மர்மம்!
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே, க்ரிஸ்பர் முறையால் எவ்வாறு மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தைக்கூட மாற்றி நோய்களை நிவர்த்திக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும் முடியும் என்று விளக்கினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களைப் பற்றி விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாகச் செயல்படுவதாகவும் சொன்னார். சூர்யா அவரது தலைமை விஞ்ஞானி விக்ரம் அளவுக்கு மீறிய செலவாளி என்று அறிந்தார். நிதித்துறைத் தலைவர் ஷான் மலோனி தன் நண்பர்களிடம் பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதால் மிக்க கவலையில் ஆழ்ந்துள்ளதை உணர்ந்தார். அடுத்து ஹான் யூ என்னும் இன்னொரு மரபணு நிபுணர் தொழில் பொறாமை கொண்டுள்ளதை ஊகித்தார். மேலும் பீட்டர் ரெட்ஷா என்னும் மூலதனமிட்டவர் இந்தப் பிரச்சனையால் கவலை மிகக் கொண்டுள்ளார் என்றுணர்ந்தார். மேற்கொண்டு பார்ப்போம்!

★★★★★


பீட்டரின் கவலையைப்பற்றி விசாரித்த பிறகு சூர்யா அளித்த சமிக்ஞையை உணர்ந்த கிரண் ஷாலினியுடன் அங்கிருந்து நாசூக்காக நழுவியதை மற்றவர்கள் கவனிக்கவில்லை! திடீரெனத் தான் விசாரித்த அனைவரையும் முன்னறையில் கூட்டுமாறு என்ரிக்கேயிடம் சூர்யா கோரவே, என்ரிக்கே, பீட்டர், ஹான் மூவரும் சூர்யாவுடன் விரைந்தனர்.

செல்லும் வழியில், என்ரிக்கே கைபேசியில் விக்ரம், ஷான் மலோனி இருவரையும் முன்னறைக்கு வருமாறு கூறினார். அங்கே சூர்யா நீள மேஜையின் முன்பக்கத்தின் மேல் சாய்ந்துகொண்டு மற்ற அனைவரையும் நாற்காலிகளில் அமருமாறு சைகை செய்தார். மேஜையைச் சுற்றி அமர்ந்த ஐவரும் சூர்யாவைக் கேள்விக்குறியோடு பார்த்துவிட்டு, எதற்கு இங்கு கூடியுள்ளோம் என்னும் குழப்பத்தோடு தமக்குள் பார்வை பரிமாறிக்கொண்டனர்.

சூர்யா ஒன்றும் பேசாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்ததால் என்ரிக்கே மௌனத்தைக் கலைத்தார். "ஓ! சூர்யா, என்ன ஷாலினியும் கிரணும் இங்க வரலையே. எங்க போயிட்டாங்க? அவங்க இங்கே தேவையில்லயா? எதுக்கு எங்க எல்லாரையும் இங்க வரவழைச்சிருக்கீங்க? நிறைய வேலை இருக்கு, சீக்கிரம் சொல்லுங்க?"

குழுவினர் தலையசைத்து என்ரிக்கேவை ஆமோதித்தனர். சூர்யா விளக்க ஆரம்பித்தார். "ஷாலினியும் கிரணும் ஒரு அவசர வேலையைக் கவனிக்கப் போயிருக்காங்க. கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. அதுக்குள்ள நாம பேச வேண்டியது நிறைய இருக்கு ..."

பீட்டர் இடைமறித்தார். "ஹே சூர்யா, எனக்குத் தலைபோற வேலை இருக்கு. என்ரிக்கேவோட சில நிமிஷம் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன். பாத்தா உக்கார வச்சு, இப்படி இழுத்தடிச்சா எப்படி? என்ன சொல்லணுமோ சீக்கிரம் சொல்லித் தொலைங்க. நான் கிளம்பணும்."

சூர்யா முறுவலுடன் ஒரு அதிர்வேட்டை வீசினார்!. "உங்களுக்கு நிறைய வேலை இருக்கு, இன்னும் பல பிரச்சனையுள்ள, நீங்க மூலதனமிட்டுள்ள நிறுவனங்களைப் போய் சோதனை செய்யணும்னு தெரியும். ஆனா இந்த நிறுவனத்தின் பிரச்சனை தீரவேண்டிய வேளை வந்தாச்சு. பிரச்சனை என்ன, அதுக்குக் காரணகர்த்தா யாருன்னு கொஞ்ச நேரத்துல வெட்ட வெளிச்சமாயிடும். அது முக்கியமில்லையா பீட்டர்?"

அனைவரும் தத்தம் நாற்காலிகளிலிருந்து குதித்தெழுந்து ஒரே சமயத்தில் பேசத் துவங்கவே ஒரே களேபரமாகிவிட்டது! சில நொடிகளுக்குப் பிறகு என்ரிக்கே கையை உயர்த்தி அமைதிப் படுத்திவிட்டு அடக்கிக்கொள்ள முடியாத பரபரப்புடன் சூர்யாவை வினவினார். "சூர்யா, என்ன சொல்றீங்க! பிரச்சனை என்னன்னு தெரியுமா? காரணகர்த்தா யாருன்னும் தெரியுமா? அப்போ பிரச்சனையைத் தீர்த்துடலாங்கறீங்களா! நம்பவே முடியலையே! அப்படி மட்டும் ஆயிட்டா... வாவ், எவ்வளவு பிரமாதமாயிருக்கும்! உடனே மேலே விளக்குங்க!"

சூர்யா பவ்யமாகத் தலை குனிந்துவிட்டு, அனைவரையும் அமருமாறு சைகை செய்தார். சூர்யா கைகளைத் தலைக்குப் பின் கட்டிக்கொண்டு முன்னும் பின்னும் மேஜையின் தலைப்புறத்தில் நடந்துவிட்டு, திடீரென என்ரிக்கே பக்கம் திரும்பி கை நீட்டி சுட்டிக் காட்டினார். "ஆமாம் என்ரிக்கே. பிரச்சனையை நிவர்த்திக்க முடியும். அதை இங்க, இதே அறையில இருக்கற காரணகர்த்தாவே மனசு வச்சு செய்யலாம். இல்லன்னா உங்க நிபுணர்கள்கூட அவர் உதவியில்லாமகூட செய்ய முடியும்..."

அதற்குள் மீண்டும் அறையில் களேபரம்! மற்ற ஐவரும் எழுந்து கேள்விக் கணைகளை வீசினர். "என்ன! என்ன சொல்றீங்க?"; "இந்த அறையிலிருக்கற காரணகர்த்தாவா? யாரு?"; "சரியா யோசிச்சுதான் பேசறீங்களா?"

பலதரப்பட்ட கேள்விகள் ஒரே சமயத்தில் எழவே, என்ரிக்கே மீண்டும் கைகளைக் காண்பித்து அமைதிப்படுத்தினார். "அமைதி, அமைதி! நானே விசாரிக்கறேன். சூர்யா! நீங்க அணுகுண்டு மாதிரி ஒரு பெரிய குற்றச்சாட்டை இந்தக் குழுமேல வீசியிருக்கீங்க. ஜீரணிக்கவே முடியலையே! சரியா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கீங்களா? சரியான ஆதாரங்கள் இருக்கா? விளக்குங்க ப்ளீஸ். இல்லன்னா எங்க எல்லாருக்குமே தலை வெடிச்சுடும் போலிருக்கு!"

சூர்யா தலையசைத்துவிட்டுத் தொடர்ந்தார். "இப்போதைக்கு என் யூகத்தால்தான் சொல்றேன். முதல்ல அதை விளக்கறேன். ஆனா கூடிய சீக்கிரம் ஆதாரம் கிடைக்கும். அப்ப அதையும் வச்சு நிரூபிக்கலாம்."

ஷான் மலோனி இகழ்ந்தார். "அடச்சே வெறும் யூகந்தானா. அதை வச்சா எங்கள்ள ஒருத்தரே பிரச்சனைக்குக் காரண கர்த்தான்னு வீணா குற்றம் சாட்டறீங்க? வேஸ்ட் ஆஃப் டைம்!"

பீட்டரும் கைகடிகாரத்தை தட்டிக் காட்டி, "யெஸ், மொத்த வேஸ்ட்!" என்றார்.

என்ரிக்கை தலையசைத்து மறுத்தார். "இல்லை ஷான், பீட்டர். இது வரைக்கும் சூர்யா யூகிச்சு விளக்கினப்போ ஒவ்வொரு முறையும் அவர் சொல்றது உண்மையாவேதான் இருந்திருக்கு. அதெல்லாம் சின்ன விஷயம், இது தலைபோற பெரிய விஷயம்னு நானும் ஒத்துக்கறேன். ஆனா சூர்யாவின் விளக்கத்தை நாம் பொறுமையாக் கேட்கறது நல்லதுன்னு எனக்குத் தோணுது. கொஞ்சம் இருங்க. மேல சொல்லுங்க சூர்யா."

சூர்யா மீண்டும் அதிர்வேட்டு ஒன்றை வீசினார். "முதல்ல நான் இங்க வந்து என்ரிக்கேவை சந்திச்சு பிரச்சனை என்னன்னு கேட்டேன். அவ்வளவு நல்லா வேலை செஞ்ச நுட்பம் திடீர்னு கெட்டுப் போச்சு, இத்தனை நிபுணர்களாலயும் காரணமோ நிவாரணமோ கண்டுபிடிக்க முடியலைன்னதும், என்ரிக்கேவே மத்தவங்களையெல்லாம் தள்ளிவிட்டு, தான் மட்டுமே பலனைத் தக்க வச்சுக்கலாம்னு செஞ்சிருக்கலாம்னு..."

என்ரிக்கே குதித்தெழுந்து வெடித்தார். "என்ன... என்ன இது? சுத்திச் சுத்தி வந்து என் தலைமேலயே இடி போடறீங்க? அப்படிச் செஞ்சிருந்தா உங்களை ஏன் நான் வரவழைக்கணும்? பைத்தியக் காரத்தனமா இருக்கே?"

சூர்யா முறுவலுடன் இரு கைகளையும் உயர்த்தி மன்னிப்புக் கோரினார். "சாரி என்ரிக்கே. நான் அப்படி சந்தேகப்பட்டது, ஒவ்வொரு பிரச்சனையும் ஆரம்பிக்கும்போது கணிச்சுப் பாக்கறதுதான். ஓரிரு முறை என் சந்தேகம் சரியாவும் இருந்திருக்கு. ஆனா இந்தப் பிரச்சனையில் அப்படி இருக்க முடியாதுன்னு வெகு சீக்கிரமே முடிவுக்கு வந்தேன். இந்த மரபணு நுட்பத்தை பொதுநன்மைக்குப் பயன் படுத்துவதற்கான உங்க ஆர்வமும், அது சரியா வேலை செய்யாமப் போனதுனால நீங்க துயரத்துல தவிக்கறதும் வேஷமில்லைன்னு நான் சீக்கிரமே உணர்ந்துட்டேன். என் சந்தேகத்தை அழிச்சிட்டு மத்தவங்களை விசாரிக்க ஆரம்பிச்சேன்."

அமைதியடைந்த என்ரிக்கே பெருமூச்சுடன் தொப்பென தன் நாற்காலியில் விழுந்துவிட்டு வினவினார். "ஓகே, பரவாயில்லை, உங்க வழிமுறையில எல்லாரையும் சந்தேகிக்கணும் போலிருக்கு. ஆனா மத்த இவங்கள்ல ஒருத்தர் காரணகர்த்தாங்கறீங்களே அதை ஒத்துக்க முடியலை. இவங்க என்னோட சேந்து எப்படி உழைச்சிருக்காங்க, பீட்டர் மூலதனம் மட்டுமில்லாம எத்தனை விதமா உதவியிருக்கார்? சே! இருக்கவே முடியாது. மேற்கொண்டு விளக்குங்க. நீங்க என்னதான் சொல்றீங்கன்னு பார்ப்போம்!"

மற்றவர்கள் சூர்யாவை எரித்துவிடுவது போல் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். சூர்யா மேலே பேசினார்....

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com