கீதா அருணை நெருங்க, நெருங்க அருணின் தன்னம்பிக்கை வளர்வதை உணர்ந்தாள். அவனுக்காகக் கீதா எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயாராக இருந்தார். அந்த முதியவள் ஏதாவது பேசி அருணின் மனதைக் காயப்படுத்தி இருந்தாலும் அவனை உற்சாகப்படுத்தித் தேற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
"சரி இளைஞனே, உன்னுடைய அறிவுரையை ஏற்று அடுத்தமுறை வேறு கடையில் ஆப்பிள் வாங்குகிறேன்" என்று அந்த மூதாட்டி சொல்லிவிட்டுச் சென்றாள். அவர் முகத்தில் போலியான ஒரு புன்னகை. அருண் பதிலுக்குப் புன்னகைத்தான். முதியவள் வேகமாக அருணிடமிருந்து தப்பினால் போதும் என்கிற மாதிரி அங்கிருந்து கிளம்பினார்.
"யார் அருண் அது, ஆப்பிளைப் பத்தி நீ சொன்னதை அவர் கேட்டுக் கொண்டாரா?' பிடித்ததா என்ன?" என்று கீதா கேட்க, அருண் தளர்வைக் காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தான். "அம்மா, அந்தப் பாட்டி ஏதோ அவசரத்தில் இருந்தார். வேகமா கிளம்பிட்டார். எப்படியோ வயதானவர்கள் தாங்கள் உண்ணும் உணவில் கவனம் எடுத்தால் நல்லது தான். பாதிப் பேருக்கு அது தெரிவதில்லை" என்றான்.
கீதா அருகில் வந்து அவனை அணைத்துக் கொண்டாள். என்ன நடந்தாலும் உனக்குத் துணையாக நான் இருப்பேன் என்று அது உணர்த்தியது.
"அருண், நீ ஒருத்தன் மோதுவதைவிட இருவர் செய்வது மிகவும் எளிதானது" என்று கீதா அருணை உற்சாகப்படுத்தினார். "அம்மா, உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நான் உங்கள் கண் எதிரிலேயே என் திட்டப்படி வேலை ஆரம்பிக்கிறேன். தேவையானால் மட்டும் நீங்கள் உதவிக்கு வாருங்கள்" என்று அருண் கேட்டுக் கொண்டான்.
அருணின் தன்னம்பிக்கை கீதாவுக்குப் புதிதல்ல. "சரி, நான் சற்றுத் தள்ளி உன் பார்வையில் படும்படி நிற்கிறேன். நீ என்ன அந்தப் பாட்டி கிட்ட பேசின மாதிரி பேச்சுக் கொடுக்கப் போகிறாயா? திட்டம் என்ன? கடையில வேலை செய்யறவங்க அதை விரும்ப மாட்டாங்களே" என்று சொன்னார்.
"நீங்க கவலைப்படாதீங்க அம்மா. உங்க கவலை எனக்குப் புரியுது. அப்படியே போனா என்ன செய்வாங்க? என்னை இந்த இடத்தை விட்டுப் போகச் சொல்வாங்க, அவ்வளவு தானே. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று அருண் சொன்னான். கீதா தன் வீட்டுக்காகச் சில பொருட்களை வாங்க அங்கிருந்து நகர்ந்தார்.
சில நிமிடங்களில் அருண் சிலரிடம் பேசிக் கொண்டிருப்பதை ஆவலுடன் தூரத்திலிருந்து கவனித்தார். சிலருக்கு அவன் பேசுவது பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்காத மாதிரி இருந்தது. இருபது வயதை நெருங்கும் ஒரு இளைஞன் அருணைக் கடுமையான வார்த்தைகளால் கோபித்தான். கீதா தன் கையில் இருந்து கூடையைத் தரையில் வைத்துவிட்டு பாதுகாப்பாக அருண் இருந்த இடத்திற்கு விரைந்தார்.
அரைமணி நேரம் சென்றது. சாதகமாக ஏதும் நடக்கவில்லை. ஆப்பிள் விஷயத்தை அருண் பேசியது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆனது. அருணுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. "நான் முயற்சித்துப் பார்த்துவிட்டேன், அம்மா. யாருமே கண்டுகொள்ளவில்லை. உன் நேரத்தை வேறு வீணடித்துவிட்டேன். மன்னிச்சிரும்மா" என்று சோகமாக கீதாவிடம் சொன்னான். "வாங்க போகலாம், வீட்டுக்கு."
யாராவது ஒருவர் தான் சொல்வதைக் கவனிப்பார்கள், ஆப்பிள் விஷயத்தை அறிந்து உதவுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்த அருணுக்கு அன்றைய நடப்பு வேதனையை அளித்தது. கீதாவும் அருணின் கையைப் பிடித்தபடி தன் கூடை இருந்த இடத்துக்கு வந்தாள். அதைத் தூக்கும்போது அருண் அதற்க்குள் ஒரு கவர் கிடப்பதைப் பார்த்தான். அதில் அவன் பெயர் இருந்தது. தாமதிக்காமல் அந்த கடிதத்தை எடுத்தான். அந்த மர்மக் கடிதத்தை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அதை ஆவலுடன் எடுத்துப் படித்தான்.
என் அருமை மகன் அருணுக்கு,
உனக்கு மீண்டும் எழுதுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு சரியான பேனா எழுதக்கிடைக்காததால் கையில் கிடைத்ததை வைத்துக் கிறுக்கியிருக்கிறேன். என்னை மன்னிக்கவும்.
நீ கடையில் எல்லோரிடமும் பேசுவதைக் கவனித்தேன். நீ இவ்வளவு ஆர்வத்துடன், வைராக்கியத்தோடு இருப்பதையும் பார்த்தேன். இங்கே கடையின் மறுகோடியில் ஒரு வயதான அம்மா ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார். சிகப்புக் கலர் பட்டுப் புடவை அணிந்திருக்கிறார். அவர் கையில் சிவப்பு நிறப் பை ஒன்று உள்ளது. அந்த அம்மா மிகவும் செல்வாக்கு உடையவர். அவர், நீ இப்போது சந்தேகப்படும் ஆப்பிள் விஷயத்தில் உதவுவார். அவர் கிளம்பும் முன்னர் அவரிடம் போய்ப் பேசு. விட்டுவிடாதே, சீக்கிரம்.
P.S: உன் அருமை அன்னைக்கும் என் பாராட்டுக்கள்.
என்றும் உன்னை மதிக்கும், ...
அந்தக் கடிதத்தைப் படித்த கணமே அருண் தலைதெறிக்கக் கடையின் மறுகோடிக்கு ஓடினான். கீதா அவனருகே வந்து மெதுவாக ஒரு இடி இடித்தார். அருண் புரியாமல் விழிக்க, கீதா கண்ணால் அருணைப் பின்புறம் திரும்பிப் பார்க்கச் சொன்னார். அங்கே, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அம்மையார் தென்பட்டார். உடனே அருண் சற்றும் தாமதிக்காமல் அவரிடம் சென்று பேச ஆரம்பித்தான். கீதாவும் அருணோடு சேர்ந்துகொண்டார்.
"மேடம், இவங்கதான் என் அம்மா" என்று கீதாவை அந்த அம்மையாருக்கு அறிமுகப்படுத்தினான். கீதாவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, "மேடம், இதுக்கு முன்னால் இந்த ஊருல உங்களப் பார்த்ததே இல்லையே? நீங்க இந்த ஊருக்குப் புதுசா?" என்று கேட்டார்.
"அம்மா, இவங்க உலகம் பூராவும் சுற்றிப் பார்த்துட்டு, இப்ப நம்ம ஊருல தன் ஓய்வு நாளைக் கழிக்க வந்திருக்காங்க" என்று அருண் முந்திக்கொண்டு சொன்னான்.
"ஹலோ, நான் நீனா ரோஸ். உங்களைப் பார்ப்பதில் சந்தோஷம், கீதா. உங்கள் பையன் சொல்வது சரி. நானும் என் கணவரும் எல்லா தேசங்களிலும் இருந்துவிட்டு இப்போது இங்கு சந்தோஷமாக ஓய்வு நாளைக் கழிக்க வந்துள்ளோம்" என்று அந்த அம்மையார் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். "என் கணவர் அரசாங்கத்தில் விவசாயம் தொடர்பான ஒரு முக்கிய அதிகாரி" என்றார்.
"திருமதி ரோஸ், எங்கள் சிறுநகருக்கு நல்வரவு. என் மகன் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை என்று நம்புகிறேன்" என்றார் கீதா.
அம்மையார் ஒரு புன்னகையுடன் அருணைப் பார்த்து, "மகனே, இந்த உலகில் உன்னைப் போன்றவர்கள் தேவை. இந்தச் சின்ன வயதில் உனக்கிருக்கும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் அளவிட முடியாதவை.
கவலைப்படாதே. நான் என் கணவரிடம் சொல்லி இந்த ஆப்பிள் மேல ஏதாவது அரசாங்கம் அனுமதிக்காத எதையாவது பூசுறாங்களான்னு பாத்து, நடவடிக்கை எடுக்கச் சொல்றேன். ஹோர்ஷியானாவின் டேவிட் ராப்ளேயப் பார்த்தாலே என் கணவருக்கு எரிச்சல் வரும். அவ்வளவு மோசமான ஆளு ராப்ளே. அப்படி ஏதாவது சட்டத்தை மீறிப் பண்ணினா என் கணவர் அந்த ராப்ளேயை ஒரு வழி பண்ணிடுவாரு. வேடிக்கையைப் பாரு" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
★★★★★
மறுநாள் காலை கீதா எர்த்தாம்டனின் செய்தித்தாளைப் பார்த்தார். முதல் பக்கத்திலேயே, 'ஹோர்ஷியானா ஆப்பிளில் தீய ரசாயனம். டேவிட் ராப்ளே மீண்டும் பிரச்சனையில்' என்று கொட்டை எழுத்தில் இருந்தது. கீதா மகிழ்ச்சியில் கூவினார், "அண்ணி, அருண், இங்கே பாத்தீங்களா! நாம எதிர்பார்த்தது நடந்தேவிட்டது". அந்த இடத்தில் மகிழ்ச்சி ஒரு நதிபோல ஓடுவதை உணர முடிந்தது.
(முற்றும்)
கதை: ராஜேஷ் |