தமிழ்நாட்டில் உள்ள திருத்தலம் திருவக்கரை. திண்டிவனத்தில் இருந்து பேருந்து உண்டு. விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி போகும் பேருந்துப் பாதையில் திருக்கனூர் என்ற இடத்தில் இறங்கி 5 கி.மீ. வடக்கு நோக்கிச் சென்றால் திருவக்கரையை அடையலாம்
தலப்பெருமை தொண்டை நாட்டில் உள்ள 32 சிவஸ்தலங்களுள் இது 30வது சிவஸ்தலம். இறைவனின் நாமம் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர். அம்பாளின் நாமம் : அமிர்தாம்பிகை. தீர்த்தம்: சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி. ஆறு: வராக நதி என்னும் சங்கராபரணி ஆறு. தலவிருட்சம்: வில்வம். ஞானசம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர், சேக்கிழார், ராமலிங்க சுவாமிகள் போன்றோர் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். வக்ரகாளி, வரதராஜப் பெருமாள் தனிக் கோயிலில் எழுந்தருளி உள்ளனர்.
இத்திருக்கோவில் ஆதித்த சோழனால் செங்கற்களால் கட்டப்பட்டது. பின்னர் முதலாம் பராந்தக சோழனின் மகனான ராஜாதித்த சோழனால் கோயிலுக்கு நிதி அளிக்கப்பட்டு, அவன் தம்பி கண்டராதித்த சோழனால் கோயில் கோபுரம் கட்டுவிக்கப்பட்டது. அவன் பெயரிலேயே கண்டராதித்தன் திருக்கோபுரம் என்று வழங்கப்பட்டதாகச் சைவசமய வரலாறு கூறுகிறது.
கோயிலில் வக்ரகாளி அம்மன் திருவுருவம் தனிச்சிறப்புடையது. ராஜகோபுரம், துவஜஸ்தம்பம், நந்தி, கருவறையில் இருக்கும் சுவாமி ஆகிய அனைத்தும் மற்ற ஆலயங்களைப் போல் ஒரே நேர்கோட்டில் இல்லாமல், ஒன்றை விட்டு ஒன்று விலகி வக்கிரமாக இருப்பதாலும், இங்கு சனி பகவானின் வாகனமான காகம் இடதுபக்கம் அமைந்து வக்கிரமாகக் காட்சி அளிப்பதாலும் திருவக்கரை என்ற பெயருடன் விளங்குகிறது. வக்ரகாளி, வக்ரசனி பகவானை வழிபடுவதால் நவக்கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும்போது ஏற்படும் தொல்லைகள், தோஷங்கள் நீங்குவதாகத் தல வரலாறு கூறுகிறது.
கோயில் அமைப்பு ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் கோயில் பெரிய ராஜகோபுரத்துடன் 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. கோயில், உட்கோயில்கள், மண்டபங்கள், சுற்றுச்சுவர்கள், கோபுரம் யாவும் தனிச் சிறப்பை உடையன. சந்திரமௌலீஸ்வரர் மும்முக லிங்கமாக கர்ப்பகிரகத்தில் காட்சியளிக்கிறார். இது மிகவும் அற்புதமான காட்சி ஆகும். கோயிலின் உட்பகுதியில் இடதுபுறம் வக்ரகாளியம்மன் சன்னிதி உள்ளது. வக்ராசூரன் என்னும் அரக்கன், சிவபெருமானைத் தொண்டையில் வைத்து பூஜை செய்து தவ வலிமையால் சாகாவரம் பெற்றான். உடன் மமதையில் தேவர்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், மகாவிஷ்ணுவை அழைத்து அசுரனை வதம் செய்யும்படிக் கூறினார். விஷ்ணுவும் வக்ராசுரனுடன் போரிட்டு, ஸ்ரீசக்ரத்தை அவன்மீது பிரயோகம் செய்து அவனை அழித்தார். வக்ராசூரனின் தங்கை துன்முகியும் அண்ணனைப் போலவே அனைவருக்கும் துன்பம் விளைவித்து வந்தாள். அரக்கியை வதம் செய்யுமாறு பார்வதிக்குக் கட்டளையிட்டார் சிவபெருமான்.
அன்னை பார்வதி சீற்றம் கொண்டு, காளி அவதாரம் எடுத்து, துன்முகியின் வயிற்றைக் கிழித்து, அவள் வயிற்றில் இருந்த சிசுவைத் தன் வலது காதில் குண்டலமாக அணிந்து துன்முகியை வதம் செய்தாள். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளி என்று பெயர் பெற்று அங்கேயே அமர்ந்து அன்னை பராசக்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
நவக்கிரகங்களுக்கும் ஒவ்வோர் அதிதேவதை உண்டு. அதன்படி, ராகு, கேது இரண்டிற்கும் அதிதேவதை வக்ரகாளி ஆவார். கோயிலை வலம்வருவதானால், வலமாக ஐந்து முறையும், இடமாக ஐந்து முறையும் செல்ல வேண்டும். காளியின் வலப்புறம் யோகேஸ்வர லிங்கம், இடப்புறம் வலம்புரி கணபதி உள்ளனர். காளி கோயிலின் வலப்புறத்தில் நான்கு துவாரபாலிகைகள் உள்ளனர். கோயிலை அடுத்து தீபலட்சுமி, ஆத்மலிங்கக் கோயில்கள் உள்ளன. நீண்ட நாளாகத் திருமணம் ஆகாதவர்கள் தீபலட்சுமியின் திருக்கோயிலில் ராகு காலத்தில் திருவிளக்கேற்றி, அம்மனைத் தொழுது, மாங்கல்யம் கட்டிவிட்டு வந்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். ஆத்மலிங்கக் கோயிலை வக்ராசூரன் பூஜித்ததால் வக்ரலிங்கம் என்பதும் பெயர். கோயிலில் தனியாக, மிகப்பெரிதாக உள்ள நந்தி, கருவறைக்கும் துவஜஸ்தம்பத்திற்கும் நேராக இல்லாமல் வலதுபுறமாக விலகி வக்கிரமாக உள்ளது.
அடுத்து திருக்கல்யாண மண்டபம். இதில் பிரம்மோற்சவத்தின் போது திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் கிளிக்கோபுரம். அடுத்து உள்மண்டபக் கருவறையில் மூலவரான சிவபெருமான் மும்முக லிங்கமாகக் காட்சி அளிக்கிறார். இது எங்கும் காணமுடியாத அற்புதம். முக லிங்கத்தில் கிழக்கே தத்புருட முகம், வடக்கே வாமதேவ முகம், தெற்கே அகோர முகம் அமைந்துள்ளன. அகோர முகத்தில் வாயின் இருபுறமும் கோரைப்பற்கள் உள்ளதை இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்யும்போது காணலாம்.
ஈசனின் வலப்புறம் நடராஜர் கோவில். இங்கு நடராஜர் வக்ர தாண்டவம் ஆடுகிறார். வலப்புறம் 16 பட்டை லிங்கம். இடப்புறம் வீரபத்திரர். கருவறையின் உள்சுற்றில் சமயக் குரவர் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், விஷ்ணு துர்க்கை, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். கருவறையின் தெற்கே குண்டலி மாமுனிவர் ஜீவசமாதி உள்ளது. கருவறையின் பின்புறம் வக்ராசூரனை அழித்த வரதராஜப் பெருமாள் ஆறடி உயரத்தில் காட்சி தருகிறார். பெருமாள் சன்னிதியின் உட்புறம் ராமர், கிருஷ்ணனாக பாமா-ருக்மணியான நாராயண தேவியுடன் கையில் வில்-அம்பு ஏந்திக் காட்சி தருகிறார். எதிரில் கருடாழ்வார் உள்ளார். உலக நாயகியான அமிர்தாம்பிகை, கோயிலில் தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். சுந்தர விநாயகர் சன்னிதி தனிக்கோயிலாக உள்ளது.
இத்தலத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் மரங்களாக பூமியில் புதைந்த மரங்கள், கிளைகள் கூடிய தோற்றத்தோடு கல் மரங்களாக உள்ளன. இந்திய நிலவியல் துறையினர் மரக்கல் காடுள்ள திருவக்கரையில் தேசிய புதைபடிவப் பூங்கா அமைத்துள்ளனர். இவ்விடம் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. இந்தக் கல் மரங்களை கிராம மக்கள், பெருமாளால் சம்ஹாரம் செய்யப்பட்ட வக்ராசூரனின் எலும்புகள் எனக் கூறுகின்றனர்.
திருமணமாகாதவர்கள், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், துர்க்கை அம்மனை தரிசித்து, பிரார்த்தனை செய்து, ராகுகால அர்ச்சனை செய்து பலன் அடைகின்றனர். வக்ர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வக்ரகாளி, வக்ரலிங்கம், வக்ர சனி ஆகியோரைத் தரிசித்து வலம் வந்து வழிபட்டால், வாழ்வில் துன்பங்கள் நீங்கி உயர்வடைவர்.
பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி உற்சவம், ஆடிக் கிருத்திகை, கார்த்திகை தீபம், தைப்பூசம், காணும் பொங்கல், தைக் கிருத்திகை, தமிழ் வருடப் பிறப்பு, தெப்போற்சவம், பிரதோஷம் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வரதராஜப் பெருமாளுக்குச் சந்தனக்காப்பு, வக்ரகாளிக்குச் சந்தனக்காப்பு பௌர்ணமி தோறும் நடைபெறுகிறது.
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |