கால்பந்து கோச் சு. மாரியப்பன்
அந்தப் பெண்களில் சிலருக்குத் தந்தை இல்லை. சிலருக்குத் தாய் இல்லை. சிலருக்கு இருவருமே இல்லை. மற்றும் சிலருக்கோ உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. வறுமையான சூழலில் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கிப் படித்து வந்தனர் ஆனால், அவர்களுக்கு ஒரு கனவு மட்டும் இருந்தது. கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவு. யாரை அணுகுவது, அப்போதுதான் 'அவர்' வந்தார். அவர்கள் கனவை நிறைவேற்றும் 'நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய்,' தந்தையாய் நின்று அவர்கள் கனவு நிறைவேற வழிகாட்டினார். அவர்களின் பலம், பலவீனங்களைக் கண்டறிந்தார். கடும் பயிற்சி கொடுத்து, பலவீனங்களைப் போக்கி, பலத்தைக் கூட்டினார். உடலளவிலும் மனதளவிலும் உறுதிப் படுத்தினார். அயராத பயிற்சி மற்றும் முயற்சியின் விளைவு, அந்த மாணவிகளின் கைகளில் வெற்றிக் கோப்பை. இது சினிமாக் கதை அல்ல; நிஜம். அந்த ஹீரோ கால்பந்து விளையாட்டுப் பயிற்சியாளர் கடலூர் சு. மாரியப்பன் அவர்கள்தான். வாருங்கள் அவரோடு பேசலாம்.

அந்த 17 பேர்
அப்பா சுப்பிரமணியம் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். தாய் மனோரஞ்சிதம். இருவருமே இயலாதவர்களுக்குத் தம்மாலானதைச் செய்யும் குணம் படைத்தவர்கள். நான் உயர்கல்வியை முடித்துவிட்டு 1978ம் ஆண்டில் உடற்கல்வி இயக்குநராகப் பணி சேர்ந்தேன். என்னிடம் படித்த பல மாணவ, மாணவியர் தாழ்த்தப்பட்ட, வறுமைக் கோட்டுக்குக் கீழ்நிலையில் உள்ளவர்கள். பள்ளியிலும் வீட்டிலும் கணக்கற்ற பிரச்சனைகள். அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயார்படுத்துவேன்.

திரைப்படப் போஸ்டரல்ல, நிஜம்!



எனது சிந்தனை மற்றும் குறிக்கோளில் முழுமையாக மாற்றியமைத்தது கடலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி. 2003ம் ஆண்டில் முதல் முறையாக 25 மாணவிகள் கடலூர் ஆதரவற்றோர் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர். அதில் பலர் பெற்றோரை இழந்து, மிக ஏழைமை நிலையில் இருந்தவர்கள். சமுதாயம் மற்றும் ஆசிரியர்களால் வெறுப்புணர்வோடு பார்க்கப்பட்ட மாணவிகள். அவர்களைப் பார்த்து என் மனம் வலித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அம்மாணவியரில் 17 பேர் என்னிடம் வந்து, கால்பந்துப் பயிற்சி கொடுக்க முடியுமா என்று கேட்டனர்.

கால்பந்தின் சிறப்பு
கால்பந்து விளையாடுவதே ஒரு தனிச்சிறப்புதான். உலகிலேயே அதிகமான ரசிகர்களைக் கொண்டது கால்பந்துதான். கால்பந்தில் நாட்டமில்லாத, விளையாடாத நாடு என்று எதுவும் இல்லை. மிக எளியவர்களுக்கும் கைகூடும் விளையாட்டு. "கால்பந்தாட்டத்தில் கடவுளைக் கண்டேன்" என்பது மாமனிதர் விவேகாநந்தரின் கூற்று. பன்னாட்டுக் கால்பந்து கூட்டமைப்புதான் (FIFA) அதிக உறுப்பு நாடுகளை உறுப்பினராகக் கொண்ட அமைப்பு. இதிலிருந்தே கால்பந்து ஆட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
சு.மாரியப்பன்


இந்திய அணியில் இடம்!
அதுவரை நான் மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன். ஓரமாக நின்று இம்மாணவிகள் வேடிக்கை பார்ப்பார்கள். அவர்களுக்குள் இப்படி ஒரு கனவு இருப்பது எனக்குத் தெரியாது. "நீங்கள் எங்களுக்குச் சொல்லித் தந்தால் நாங்கள் இவர்களைவிடச் சிறப்பாக விளையாடிக் காண்பிப்போம்" என்றனர். அவர்கள் மன உறுதி என்னைக் கவர்ந்தது. மறுப்புச் சொல்லாமல் சம்மதித்தேன். அவர்களுக்குப் பிடித்த விளையாட்டையே ஒரு கருவியாக்கி, அவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கி, ஏன் ஒரு நல்ல எதிர்காலத்தைத் தரக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.

என் கவனம் முழுவதும் அவர்களை நல்ல விளையாட்டு வீரர்கள் ஆக்குவதில் குவிந்தது. அவர்களும் மிகக்கடுமையாக உழைத்தார்கள். சிறு சிறு வெற்றிகள் அவர்களுக்கு உத்வேகத்தைத் தந்தன. தொடர் போட்டிகளும் அவற்றில் பெற்ற வெற்றிகளும் அவர்களுக்குள் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. குவிந்த பாராட்டும், ஊக்கச் சொற்களும் அவர்களுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மையை நீக்கியது. சாதிக்க முடியும் என்ற எண்ணம் வலுப்பட்டது. ஒரே வருடத்தில் அவர்களில் ஆறு பேர் இந்திய அணியில் விளையாடும் தகுதியைப் பெற்றார்கள்!

நீங்களும் உதவலாம்
உதவ விருப்பமுள்ளவர்கள் பார்க்க: mamaniam.org


வந்தது சுனாமி
அப்போதுதான் சுனாமியின் கோரத் தாக்குதல் நிகழ்ந்தது. பல ஏழைக் குடும்பங்கள் மிக மோசமாக அதனால் பாதிக்கப்பட்டன. அதில் ஆதரவிழந்த மாணவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் வலுப்பட்டது. எனது குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பும் எனக்குக் கிடைத்தது. ஏழை மாணவிகள், பெற்றோர்களை இழந்தவர்கள், ஆதரவற்றவர்கள், 18 வயது பூர்த்தியானதால் காப்பகத்திலிருந்து வெளியே செல்ல நேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் 33 பேரை எனது சொந்த மகள்களாகத் தத்தெடுத்தேன். அவர்களுக்கெனத் தனிவீடு பார்த்து அதில் தங்கவைத்து, உணவு, உடை, கல்வி, விளையாட்டு என்று இன்றுவரையில் என்னால் ஆனதை இன்றைக்கும் செய்து கொண்டிருக்கின்றேன்.

அனைத்திந்தியப் பல்கலைக்கழகங்கள் சேம்பியன்



கால்பந்து: சில சவால்கள்
கால்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை நிறையச் சவால்கள் உள்ளன. பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் ஒத்துழையாமையை முக்கியமாகச் சொல்லலாம். அனைத்துத் தட்ப வெப்பத்துக்கும் ஏற்ற ஆடுகளம் இங்கே இல்லை. போதுமான கட்டமைப்பு கிடையாது. வயதுக்கேற்பப் பயிலத் தேவையான உபகரணங்கள் இல்லை. கால்பந்தாட்டத்துக்கெனத் தனி ஆடுகளம் கிடையாது. வயதுவாரிப் போட்டிகளைப் போதுமான எண்ணிக்கையில் நடத்த வாய்ப்பில்லை. கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பள்ளி கல்லூரிகள் விளையாட்டுக்குக் கொடுப்பதில்லை. அரசும் இந்த விளையாட்டை அதிகம் கண்டுகொள்வதில்லை. ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை.

கல்வி நிலையங்களிலும் கால்பந்து சங்கங்கள் மற்றும் கால்பந்து சம்மேளனத்திடமும் போதுமான புரிதலும், ஒத்துழைப்பும் இல்லாமையினால் மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்புக் கிடைத்தும் பயன்படுத்த இயலாத நிலை இருக்கிறது. போட்டி சமயத்திலேயே தேர்வுகளும் வருவது அதிகம். மாணவர்கள் எதற்குப் போவதென்று பார்த்தால் பரிட்சை என்றுதான் வரும். ஆடுகளங்களில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி வசதிகள் இருப்பதில்லை. இப்படி நிறையச் சொல்லலாம்.

நானும் ஆசிரியப் பணியும்
33 ஆண்டுகால ஆசிரியர் பணியில் 27 ஆண்டுகாலம் உடற்கல்வி இயக்குநராகவும், ஆறாண்டுக் காலம் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறேன். 2011ல் பணி ஓய்வு பெற்றேன். கால்பந்து மட்டுமின்றி மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் தடகள வீரர்களை உருவாக்கியுள்ளேன். தலைமையாசிரியராகப் பணியாற்றிய பள்ளிகளில் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட தேர்ச்சி சதவீதத்தை எஸ்.எஸ்.எல்.சி மற்றும் +2 பொதுத்தேர்வில் பெற உழைத்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகள் 2009-2010, 2010-2011 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி விழுக்காட்டில் 99% பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற வைத்துள்ளேன்.
சு. மாரியப்பன்


இந்தச் சிக்கல்கள் தீர...
கல்விக்கு இணையான முக்கியத்துவம் விளையாட்டுக்கும் அளிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்.

K. ராதிகா, K. சுமித்ரா, இந்துமதியுடன் கோச் மாரியப்பன்



இன்னும் பலர் நிதி ஆதரவு தர முன்வர வேண்டும்.
வயதிற்கேற்பப் பயிற்சி, போட்டிகள், ஆடுகள அமைப்பு, சிறப்புப் பயிற்சியாளர்கள் தனித்தனியாக நியமிக்கப்படுதல் வேண்டும்.

சமுதாயம், கல்வி நிலையங்கள், கால்பந்தாட்டச் சங்கங்கள், சம்மேளனம், அரசு அனைத்தும் இணைந்து சரியான திட்டமிடல் மூலம் அனைத்துத் தடைகளையும் களைய முடியும்.

எனது மாணவர்கள்
இதுவரை 400க்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் 127 மாணவிகளுக்கும் பயிற்சி அளித்துள்ளேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் 153 பேர் பல்கலைக் கழகத்திற்காகவும், 67 பேர் மாநிலத்திற்காகவும் தேசியப் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளனர். மூன்று மாணவர்கள் இந்திய அணிக்குத் தேர்வு பெற்றுள்ளனர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.

பிகில்
பிகில் படத்தை எனது பிள்ளைகளோடு சேர்ந்து பார்த்தேன். கால்பந்து தொடர்பான படமாக இருந்தாலும் பெண்கள் எந்தத் துறையானாலும், தோல்வியையோ, தடைகளையோ கண்டு துவளாமல், மேலும் சாதிக்க சமுதாயத்தின் ஆதரவோடு சாதனையாளராக மிளிர்வார்கள் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். படத்தில் கால்பந்து வீராங்கனைகளின் உரையாடல்கள் எனது பிள்ளைகள் புதிய தலைமுறை, தினமணி, தீக்கதிர் போன்ற இதழ்களுக்கு அளித்திருந்த பேட்டிகளை அப்படியே பிரதிபலித்திருந்தது. எனது பிள்ளைகளில் ஒருவரான கே. இந்துமதியைப் போலவே, இந்திய அணியின் தலைசிறந்த வீராங்கனை கதாபாத்திரத்தில் ஒருவரைக் காட்டியிருப்பதை ரசித்தேன்.
சு. மாரியப்பன்


எனது மாணவிகள்
2003ம் ஆண்டு முதல் மாணவிகளுக்கு மட்டுமே சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறேன். 127 மாணவிகளில் 67 பேர் பல்கலைக்கழகத்திற்காகவும், மாநில அணிக்காகவும் தேசியப் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளனர். 11 மாணவிகள் இந்திய அணியில் தேர்வுபெற்றுப் பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளனர்.

எனது பிள்ளைகள் கலந்துகொண்ட முக்கியப் போட்டிகள்: ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக் 2020ன் தகுதிச்சுற்று, SAFF GAMES தெற்காசிய கால்பந்து சம்மேளனப் போட்டிகள் அடங்கும். இதில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.



2012ம் ஆண்டு முதல் 2018 வரையில் அகில இந்திய பல்கலைக்கழகக் கால்பந்துப் போட்டிகளில் 7 ஆண்டுகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்று நான்குமுறை தங்கப்பதக்கமும், மூன்றுமுறை வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளனர். அணியில் 18 பேர் எனது மாணவியர். ஆறுமுறை தமிழக பல்கலைக்கழகப் போட்டியில் முதலிடம் வென்றுள்ளனர். ஐந்துமுறை தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாநிலப் போட்டியில் முதலிடம் வென்றுள்ளனர். இந்திய அணியின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் எனது கீழ்க்கண்ட பிள்ளைகள் இடம்பிடித்துள்ளனர்.

கே. இந்துமதி - Best Player National Award - 2016, 2017, and 3 Times SAFF Games Gold.
கே. சுமித்ரா - Best Player National Award - 2018 ; SAFF Game Gold 2016, 2017, 2018
கே. ராதிகா - Best National Player Award, புதிய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் விருது (2013).
வி. வினிதா - மூன்று முறை - SAFF Game Gold - 2016, 2017, 2018
ஆர். சந்தியா - இரண்டு முறை - SAFF Game Gold - 2016/17, 2017/18

இவர்களில், ராதிகாவைத் தவிர மற்ற நால்வரும், முதல் முறையாக இந்திய அணியின் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இரண்டாம் சுற்றினை அடைந்து சரித்திரம் படைத்துள்ளனர். தமிழ்நாட்டில் வேறெந்த அணியும் சாதிக்காததைக் கடந்த எட்டு ஆண்டுகளாக மாநில, தேசிய, பன்னாட்டளவில் எனது மாணவியர் தொடர்ந்து சாதித்து வருகின்றனர்.

ஐந்து சப்-இன்ஸ்பெக்டர்களை உருவாக்கிய கோச், சிலிகுரியில் SAFF சேம்பியன்ஷிப் தங்கமங்கையர், விருதுகள்



வேலைவாய்ப்பு
கால்பந்தாட்ட வீரர்களுக்கு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. ஒரு சில துறைகளில் மட்டுமே கால்பந்தாட்ட வீரர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு காவல்துறை மற்றும் ரயில்வே தவிர பிற துறைகளில் ஒதுக்கீடு இல்லை. இவர்களும் மிகச்சிறிய அளவிலேதான் ஒதுக்கீடு செய்கின்றார்கள்.

விருதுகள்
திரு. சு. மாரியப்பன் அவர்களைத் தேடிவந்த விருதுகள்
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது (2006, 2008)
சிறந்த மானுட சேவைக்காக சென்னை ரோட்டரி வழங்கிய Vocational Excellency Award (2015)
சமூக சேவைக்கான ராமானுஜாச்சார்யா அம்பேத்கார் விருது (2017)
சன் டி.வி. வழங்கிய நம்ம ஊரு நாயகன் விருது (2018)
கலர்ஸ் டி.வி. வழங்கிய மக்கள் நாயகன் விருது (2019)
மக்கள் நீதி மையம் வழங்கிய சான்றோன் விருது (2019)
இவை தவிர்த்து பல்வேறு அமைப்புகள் இவரையும், இவரது மாணவிகளையும் பாராட்டி விருதளித்துச் சிறப்புச் செய்துள்ளன.


கே. இந்துமதி கூறுகிறார்...
முன்னாள் இந்தியக் கால்பந்து வீரர் மாரியப்பன் சாரிடம் பயிற்சியைத் தொடங்கினேன். எனக்கு ஊக்கம் அளித்த அவரது பயிற்சியிலேயே முறையான கால்பந்து வீராங்கனையாக மாறினேன். பள்ளி, கல்லூரி அணிகளைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட அணிக்காகவும், அதன்பிறகு, புதுச்சேரி அணிக்காகவும் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தேசிய அளவிலான போட்டிகளில் புதுச்சேரிக்காக 10 ஆண்டுகள் விளையாடினேன். தெற்காசிய கால்பந்து சம்மேளனப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் விளையாடினேன். குடும்பச்சூழல் காரணமாக பணிக்குச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோதும், தொடர்ந்து விளையாடி வருகிறேன்.
கே. இந்துமதி (காவல் நிலைய ஆய்வாளர், சர்வதேச கால்பந்து வீரர், இந்திய கால்பந்து அணி சாம்பியன்)


எனது பிள்ளைகளில் ஐந்து பேர் (வினிதா, இந்துமதி, சரண்யா, தேன்மொழி, பத்மாவதி), தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகச் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இரண்டு பேர் ரயில்வேயில் பணியாற்றி வருகின்றனர். பலர் இளங்கலை, முதுகலைப் படிப்புகளை முடித்திருப்பதுடன் எம்.ஃபில்., பிஎச்.டி.யும் முடித்துள்ளனர்.

எனது குடும்பம்
என்னுடையது கூட்டுக் குடும்பம். என் அக்கா எங்களுடன் வசித்து வருகிறார். எனது மனைவி - ஆஷா லதா மாரியப்பன் செவிலியாக இருக்கிறார். இரண்டு மகன்கள் மா. செந்தில்குமரன், மா. ஓம்பிரகாஷ். ஒருவர் என்ஜினியர். மற்றொருவர் பேராசிரியர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மனைவி, பேரக் குழந்தைகள், நான் தத்தெடுத்திருக்கும் எனது மகள்கள் என எல்லாரும் இணைந்து கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம்.

மணிகண்டன் கூறுகிறார்....
ஐயா மாரியப்பன் ஆசிரியர் வீட்டில் நானும் எனது நண்பரும் தங்கிப் பயிற்சி பெற்றோம். அவர் தன் பிள்ளைகளைவிட எங்கள்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இந்தப் பிள்ளைகளுக்கு (தத்துப் பிள்ளைகள்) செய்த அனைத்தையும் எங்களுக்கும் செய்தார். விளையாட்டு மாணவர்களுக்காக கையேந்தவும் அவர் தயங்குவதில்லை. ஐயாவின் மனைவி அவருக்கும் எங்களைப் போன்றோருக்கும் வரம். தன் பிள்ளைகளைப் போல் கவனித்துக்கொள்வார். ஐயா, அம்மா, அய்யாவின் அக்கா அவர்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
மணிகண்டன், மாணவர்


நிதி ஆதாரம்
ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கை உயர்விற்காக ஆரம்பிக்கப்பட்ட மாமணியம் ட்ரஸ்ட்டின் விளையாட்டுப் பிரிவு IGAS. பணியில் இருந்தவரை எனது ஊதியத்தை எனது பிள்ளைகளின் வளர்ச்சிக்காகச் செலவழித்து வந்தேன். பணி நிறைவிற்குப் பிறகு நான் பெற்ற முழுப் பணப்பயன்கள் (47 லட்சம்), ஓய்வூதியப் பலன், ஓய்வூதியம், எனது குடும்பத்தினரின் உழைப்பின் ஒரு பகுதி, எப்பொழுதாவது நண்பர்கள் தரும் நிதி, சிறிய அளவிலான ரோட்டரி சங்கப் பொருள் உதவி - இவைதான் இந்த ட்ரஸ்ட்டின் நிதி ஆதாரம். இவற்றைக் கொண்டுதான் மாணவிகளுக்குத் தேவையான அனைத்தையும் சமாளிக்கிறேன். இந்த ட்ரஸ்ட் வருமான வரித்துறையின் வரிவிலக்குப் பெற்றது.

அரசு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து கொண்டு அரசு பள்ளி-கல்லூரிகளிலும் படிக்கும் நாங்கள் சின்ன வயதிலேயே அப்பா, அம்மாவை சுனாமியில் இழந்தோம். உறவினர்கள் புறக்கணித்தனர். பசிக்கொடுமை வாட்டியது. அப்போது எங்களை அரவணைத்து தன்னம்பிக்கையுடன் கால்பந்து விளையாட்டைக் கற்றுக்கொடுத்த மாரியப்பன் சாரை வெறும் 'கோச்' என்று கூறமாட்டோம். எங்கள் அனைவருக்கும் தாய், தந்தை, சகோதரர் அனைத்தும் அவரே. பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி மேற்படிப்புக்கும் தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து வளர்த்து, ஆளாக்கி, சமூகத்தில் நல்ல நிலைக்கு எங்களை உயர்த்தி இருக்கும் அத்தனை பெருமையும் அவருக்கே சொந்தமாகும். மாரியப்பனிடம் பயிற்சி பெற்ற மாணவியர்.


நலம் நாடும் நல்லோர்
நல்லெண்ணம் கொண்ட பலர் எங்களுக்கு உதவுகின்றனர். எங்கள் மாணவர்களுக்கு இலவசக் கல்லூரிக் கல்வியை கடலூர், புனித வளனார் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி வழங்குகிறது. முனைவர் அருட்தந்தை ஆர். ரட்சகர் மற்றும் அருட்தந்தை பீட்டர் ராஜேந்திரன் இருவரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். அதுபோல திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்கள் மாணவிகளுக்கு இலவசக் கல்வி தருகிறது.

தினமும் இரவில் இரண்டு முட்டைகளுடன் சத்துள்ள உணவினை நண்பர் துரை சீனுவாசன் அவர்கள் (முனியாண்டி விலாஸ், கடலூர்) கடந்த 13 ஆண்டுக் காலமாக நாள் தவறாமல் வழங்கி வருகின்றார். எனது நண்பர், IGAS அமைப்பின் தலைவர், அவரது வழிகாட்டுதலும் உதவியும் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. மற்றபடித் தனியார் அமைப்புகளிடமிருந்து சிறு சிறு உதவிகள் கிடைக்கின்றதே தவிர, அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. பலமுறை முயற்சித்தும் பலன் கிட்டவில்லை.

சன் டி.வி.யில் அடித்து ஆடும் வீராங்கனைகள், துணை நிற்கிறார் துரை சீனுவாசன்



"எனக்கு 66 வயதாகிறது. எனது பெண்கள் அனைவரும் சாதனைப் பெண்களாகி, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையும், வேலைவாய்ப்பும் அமையும்வரை எனக்கு ஓய்வு என்பதே இல்லை" என்கிறார், மாரியப்பன். அவரது குரலில் ஒலிக்கும் உறுதி 'இவர் செய்வார்' என்கிறது. அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com