வளைகுடாப் பகுதியில் மாதா அமிர்தானந்தமயி
2005 ஜூன் 7 முதல் 19-ம் தேதிவரை வளைகுடாப் பகுதியில் உள்ள சான் ரமோன் பகுதிக்கு 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி வந்திருந்தார். தினமும் தரிசனம், ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் பஜனை ஆகியன நடைபெற்றன. ஆன்மிக முகாமில் (retreat) ஆன்மிக வகுப்பு, சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

அம்மாவின் சொற்பொழிவுகளில் இருந்து...

"கணவனின் அன்பை எதிர்பார்க்கும் மனைவியும், மனைவியின் அன்பை எதிர்பார்க்கும் கணவனும் இணைந்த திருமணம், அன்பிற்காக ஏங்கும் இரண்டு யாசகர்களின் சங்கமத்தைப் போன்றது. கணவன்-மனைவி இருவரும் மனம் திறந்து தங்களது அன்பையும், ஆசையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு மனம் திறந்து பகிராத அன்பு, கல்லுக்குள் அடைப்பட்டிருக்கும் தேனைப் போன்றது. அதனால் யாருக்கும் பயன் இல்லை."

"ஒரு வியாபாரிக்குப் பெரிய இழப்பு என்பது, தனது முதலை இழப்பதாகும். நம் வாழ்க்கையில் பெரிய இழப்பு என்பது அன்பை இழப்பதாகும். அன்பே வாழ்க்கையின் உண்மையான சேமிப்பு. எனவே நாம் அன்பை நம் இதயத்தில் சேமிக்க வேண்டும்."

"நமது வாழ்க்கையில் சுனாமி எப்போதும் வரலாம். ஒரு நொடியில் நமது குடும்பம், பணம், வீடு, சொத்து அனைத்தும் அழிந்து போகலாம் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். அத்தகைய எண்ணம், நம்மை இந்தக் கணத்தில் வாழ உதவும். அடுத்த கணம் நமது கையில் இல்லை. கடந்த காலம் என்பது ரத்து செய்யப்பட்ட காசோலையைப் போன்றது - அதற்கு மதிப்பு இல்லை. நாளை என்பது நம் கையில் இல்லை. எனவே இந்த கணத்தில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்."

"சனாதன தர்மத்தில், படைத்தவரும் படைப்பும் வெவ்வேறல்ல. ஒன்றே. கடலும் அலைகளும் வேறல்ல, தங்கமும் நகைகளும் வேறல்ல, மண்ணும் பானைகளும் வேறல்ல. அதேபோல் படைத்தவரும் படைப்புகளும் வேறல்ல. இறைவன் என்பவர், மேகங்களிடையே தங்க நாற்காலியில் அமர்ந்திருப்பவர் அல்ல. எல்லாப் படைப்புகளிலும் நிறைந்திருப்பவரே இறைவன். எல்லாவற்றிலும், எல்லோரிடத்திலும் இறைவனைக் காண வேண்டும்."

அம்மா ஜூலை மாதத்தில் வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சான்டா ·பீ 06.27 - 07.01
டாலஸ் 07.03 - 07.04
·பேர்பீல்ட் 07.06 - 07.07
சிகாகோ 07.09 - 07.10
வாஸிங்டன் டி.சி. 07.12 - 07.14
நியுயார்க் 07.16 - 07.18
பாஸ்டன் 07.20 - 07.23
டொரன்டோ, கனடா 07.25 - 07.28

மேலும் விபரங்களுக்கு:
www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com