உலக இறகுப்பந்து ஜூனியர் சேம்பியன்ஷிப்
கார்த்திக் மற்றும் மாளவிகா
ரஷ்யாவின் கஜன் நகரில் 2019 அக்டோபர் 7 முதல் 13 வரை நடந்த உலக இறகுப்பந்து ஜூனியர் சேம்பியன்ஷிப் போட்டிகளில் கார்த்திக் கல்யாணசுந்தரமும் மாளவிகா இளங்கோவும் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றனர். உலக ஜூனியர் சேம்பியனைத் தீர்மானிக்கும் இந்தப் போட்டிகளில் 60 நாடுகளின் உச்சநிலை வீரர்கள் பங்கேற்று, ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் ஆடினர்.

இதில் பங்கேற்கும் வீரர்கள் எவரெனத் தீர்மானிக்கும் தகுதிப் போட்டிகள் 2019 ஜூன் மாதத்தில் கலிஃபோர்னியாவின் லிவர்மோரில் நடைபெற்றன. அமெரிக்க ஒற்றையர்களில் இரண்டாவதாக வந்ததன் மூலம் கார்த்திக் கல்யாணசுந்தரம் உலகப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் தகுதி பெற்றார். கலிஃபோர்னியாவின் சன்னிவேல் பகுதியில் வசிக்கும் கார்த்திக், தற்போது இர்வைனில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் முதலாண்டு மாணவர். சென்ற ஆண்டும் இவர் கனடாவில் நடபெற்ற உலக ஜூனியர் போட்டிகளில் அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பங்கேற்றமை குறிப்பிடத் தக்கது.

தகுதிப் போட்டிகளில் மூன்றாவதாக வந்த மாளவிகா இளங்கோ, ரஷ்யாவில் பங்கேற்று மகளிர் ஜூனியர் ஒற்றையர் பிரிவில் ஆடினார். இவர் கலிஃபோர்னியாவின் டேன்வில் பகுதியில் வசிக்கிறார். சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் இவர் உயிரியல் பட்டவகுப்புப் படிக்கிறார்.

கார்த்திக், மாளவிகா இருவருமே இறகுப்பந்து ஆட்டத்தை 8 ஆண்டுகளாக, சிலிக்கான் வேலியில் உள்ள பிண்டாங் பாட்மின்டன் பள்ளியில் பயிற்சி செய்து வருகின்றனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com