பத்மஸ்ரீ கதிரி கோபால்நாத்
சாக்ஸபோன் மூலமே நமது உள்ளங்களைக் கவர்ந்துவிட்ட கதிரி கோபால்நாத் (69) காலமானார். இவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள மிட்டகெரே என்ற கிராமத்தில் 1950ல் பிறந்தவர். தந்தை நாதஸ்வரக் கலைஞர். அவரிடம் நாதஸ்வரம் கற்றார். தந்தையுடன் ஒரு சமயம் மைசூர் அரண்மனைக்குச் சென்றிருந்தபோது, அங்கு வெளிநாட்டுக் கலைஞர்கள் வாசித்த சாக்ஸபோன் இசை இவரைக் கவர்ந்தது. தானும் அதனைக் கற்றுக்கொள்ள விரும்பி, கோபால கிருஷ்ண ஐயர் என்பவரின் சீடரானார். அவரிடமிருந்து சாக்ஸபோனில் நன்கு தேர்ந்தார்.

இசைமேதை டி.வி.ஜி. என அன்போடு அழைக்கப்படும் டி.வி. கோபாலகிருஷ்ணனிடம் சேர்ந்து பயின்ற பின் உலகமெங்கும் சென்று கச்சேரி நடத்தத் துவங்கினார். இவரது இசை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இசைக் கலைஞரான ஜாஸைக் கவர்ந்தது. இருவரும் இணைந்து பல கச்சேரிகள் செய்தனர். அது கதிரி கோபால்நாத் வாழ்வின் திருப்புமுனையானது. தொடர்ந்து கச்சேரிகள், ஃப்யூஷன் இசை, திரையிசை என்று பயணப்பட்டார்.

இவரது இசையால் ஈர்க்கப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான், தான் இசையமைத்த 'டூயட்' படத்தில் இவரைப் பயன்படுத்திக் கொண்டார். தமிழகத்தின் பட்டிதொட்டியிலும் இவரது 'சாக்ஸபோன்' ஒலி கேட்டது. தமிழகமெங்கும் ஆலயத் திருவிழாக்களில் இவரது கச்சேரிகள் நடைபெற அது காரணமானது.

கர்நாடக அரசின் 'கர்நாடக கலாஸ்ரீ', தமிழக அரசின் 'கலைமாமணி', இந்திய அரசின் 'பத்மஸ்ரீ', 'நாத கலாநிதி', 'சங்கீத கலாசிகாமணி', 'சாக்ஸபோன் சாம்ராட்', 'சங்கீத வாத்ய ரத்னா' எனப் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மகன் மணிகாந்த் கதிரி இசையமைப்பாளர். மற்றொருவர் குவைத்தில் பணி செய்கிறார். தென்றலின் உளமார்ந்த அஞ்சலி.

© TamilOnline.com