மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 22)
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே, க்ரிஸ்பர் முறையால் எவ்வாறு மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தைக்கூட மாற்றி நோய்களை நிவர்த்திக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும் முடியும் என்று விளக்கினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களைப் பற்றி விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாகச் செயல்படுவதாகவும் சொன்னார். சூர்யா அவரது தலைமை விஞ்ஞானி விக்ரம் அளவுக்கு மீறிய செலவாளி என்று அறிந்தார். நிதித்துறைத் தலைவர் ஷான் மலோனி தன் நண்பர்களிடம் பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதால் மிக்க கவலையில் ஆழ்ந்துள்ளதை உணர்ந்தார். அடுத்து ஹான் யூ என்னும் இன்னொரு மரபணு நுட்ப விற்பன்னரை சந்தித்து ஆராய்ச்சிக் கருவிகளைப் பார்வையிட்டார். பிறகென்ன நடந்தது?

★★★★★


ஆராய்ச்சிக்கூடத்தின் சுத்த அறையில் இருந்த நுண்ணிய கருவிகள் க்ரிஸ்பர் முறைக்கு மட்டுமே பயன்படுவதாகவும், மற்ற முன் தயாரிப்புக்கள் வெளியறைகளில் நடப்பதாகவும் ஹான் கூறினார். அப்படியானால் அக்கருவிகளே பிரச்சனைக்குக் காரணமா என்று சூர்யா கேட்டார். கருவிகளை மாற்று வழிமுறைகள் மூலமாகச் சோதித்ததில் அவை சரியாகவே வேலை செய்வதாக ஹான் கூறினார்.

சூர்யா ஆழ்ந்த யோசனையுடன், "சரி இங்கு பார்க்க வேண்டியது ஆயிற்று வெளியில் போய்ப் பேசலாம் வாருங்கள்" என்றதும் அனைவரும் கூடத்தின் வெளிப்பகுதிக்கு வந்தனர்.

திடீரென ஒரு இடிக்குரல் கேட்டது. "ஹஹ்ஹஹ்ஹா! என்ரிக்கே, நீங்க இங்கதான் ஒளிஞ்சிட்டிருக்கீங்களா? ஹை ஹான்! நான் பக்கத்துலதான் ஒரு வேலையா வந்தேன். இங்க எப்படி இருக்குன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன். நீங்க உங்க அலுவலறையில இருப்பீங்கன்னு போய்ப் பாத்தேன் ஆளைக் காணோம்! அப்புறந்தான் உங்க வரவேற்பாளினி நீங்க இங்க இருக்கலாம்னு சொன்னாங்க. சரி இங்கயே பாக்கலாம்னு வந்துட்டேன். வெரி குட்!" என்று ஓர் ஆஜானுபாகுவான மனிதர் என்ரிக்கேவின் கையைப் பிடித்து பலமாகக் குலுக்கினார்!

என்ரிக்கே பயபக்தியுடன் "ஹலோ பீட்டர், வாங்க வாங்க! நானே உங்களைப் பாத்துப் பேசணும்னு இருந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி நீங்களே வந்துட்டீங்க..." என்று கூறித் தொடருமுன் பீட்டர் குறுக்கிட்டார்.

"ஓ! பாத்தீங்களா, நான் என் நாகரீகத்தையே மறந்துட்டேன். வெரி ஸாரி. புதுசா பாக்கறவங்களுக்கு அறிமுகம் செஞ்சுக்கலை" என்ற பீட்டர் சூர்யா, கிரண், இருவருடனும் பலமாகக் கை குலுக்கிவிட்டு, ஷாலினியின் கையை மென்மையாகப் பிடித்து சற்றே தூக்கிவிட்டு பவ்யமாகக் குனிந்து வணங்கி, "நான் பீட்டர் ரெட்ஷா. என்ரிக்கேயின் முதல் மூலதன கர்த்தா!"

கிரண் உற்சாகமாக இடைமறித்தான். "ஓ! நீங்கதான் அந்த பீட்டர் ரெட்ஷாவா! மின்வலை நிறுவன மூலதனங்கள் மூலமா பிரபலமானவர். இப்ப சமீபத்துல மூடிட்டாங்களே அந்த ரத்தப் பரிசோதனை நிறுவனத்துலகூட நிறைய மூலதனமிட்டதா செய்தி. நான் கிரண். நிதித்துறை ஆளு, அதான் உங்க மூலதன விவரமெல்லாம் தெரியும்... ரொம்ப ஸாரி, பீட்டர். அது ஒரு பேரிழப்பு போலிருக்கே?"

பீட்டர் தோள்களை அலட்சியமாகக் குலுக்கினார். "அ... விட்டுத் தள்ளு. அதெல்லாம் ஒரு இழப்பா? எவ்வளவோ பணம் போடறோம். வின் ஸம் லூஸ் ஸம், மை ஸன்! அவ்வளவுதான்! நோ ப்ராப்ளம். சரி அது கிடக்கட்டும், இவங்க யாருன்னு இன்னும் சொல்லயே என்ரிக்கே."

என்ரிக்கே முறுவலுடன், "எங்க சொல்ல விட்டீங்க?! நீங்களே அறிமுகத்துல முந்திட்டீங்க" என்று தொடங்கி எல்லோரையும் அறிமுகப்படுத்தினார். பீட்டர் முகத்தில் குழப்பம் மூண்டது. "தொழில்நுட்பப் பிரச்சனைன்னு ஷான் மலோனி ஏற்கனவே சொல்லிட்டார். ஆனா உங்களாலயே தீர்க்க முடியாத க்ரிஸ்பர் பிரச்சனையை ஒரு துப்பறிவாளரான இவர் எப்படி ..." என்று இழுத்தார்.

என்ரிக்கே பதிலளிப்பதற்குள் சூர்யா புகுந்து ஒரு அதிர்வேட்டு வீசினார். "பீட்டர், இழப்பைப் பத்திக் கவலையில்லைன்னீங்க, ஆனா இதே நினைப்பா டாலஸ்லேந்து ஸான் ஹோஸேவுக்கு அரைமணி நேரம் முன்னாடிதான் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்ல வந்திருக்கீங்க. களைப்பா இருப்பீங்களே, வாங்க என்ரிக்கே அறையிலயே போய் வசதியா உக்காந்து பேசலாம்!"

பீட்டரின் முகம் இருண்டது, கோபம் தலைக்கேற வெடித்தார். "ஓ! என்ரிக்கே, துப்பறிவாளரை வரவழைச்சதுமில்லாம உங்க முக்கிய மூலதனத்தார் எங்க போய் வராங்க, என்ன செய்யறாங்கன்னு பாக்க ஆளனுப்பிட்டீங்களா? மோசமா இருக்கே? என்ன இது!"

என்ரிக்கே அவசர அவசரமாக மறுத்தார். "சே, சே அப்படியெல்லாம் இல்லை. உங்களைப்பத்தி நாங்க பேசக்கூட இல்லை. சூர்யா உங்களைப் பாத்தவுடனே எதோ கவனிச்சு சட்டுனு யூகிச்சிட்டார் போலிருக்கு. விளக்கிடுங்க சூர்யா!"

சூர்யா முறுவலுடன் "இது ஒண்ணும் பெரிய யூகமேயில்லை! பீட்டரோட கோட் பாக்கெட்ல போர்டிங் பாஸ் வச்சிருக்கார். அதுல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சின்னமும் ஃப்ளைட் எண்ணும், இன்னிக்குத் தேதியும் தெரியுது. அதை வச்சு என் கைபேசி மின்வலையில தேடினதுல டாலஸ்லேந்து ஸான் ஹோஸேக்கு அரைமணி முன்னால வந்ததுன்னு இருக்கு அவ்வளவுதான்!"

பீட்டர் மீண்டும் வெடிச்சிரிப்புடன் பாராட்டினார். "ஓ, அதானா. ஓகே ஓகே. வெரி குட் வெரி குட். பாத்த சில நொடிகளுக்குள்ளயே நுணுக்கமா கவனிச்சு, மின்வலையில தேடி! பிரமாதம். உங்களைக் குறைச்சு மதிப்பிட்டுட்டேன் போலிருக்கு! சரியான ஆளைத்தான் வரவழைச்சிருக்கீங்க என்ரிக்கே!"

சூர்யா பவ்யமாகத் தலைகுனிந்து பாராட்டை ஏற்றுக் கொண்டு வினாவினார். "நீங்க எப்போ இந்த நிறுவனத்துல முதலிட்டீங்க? அப்படி மூலதனமிட உங்களுக்கு ஏன் தோணிச்சு?"

பீட்டர் பெருமிதத்துடன் பதிலளித்தார். "என்ரிக்கே மாதிரி திறன்வாய்ந்த தொழில்முனைவோரைக் (entrepreneurs) கண்டுபிடிச்சு அவங்க மேல மூலதனப் பந்தயமிட்டு வெற்றி காண்றதுல எனக்கு ரொம்ப ஆனந்தம். என்ரிக்கேயின் ஆராய்ச்சியைப் பத்திக் கேள்விப்பட்டு நான்தான் அவரை முதலில் கூப்பிட்டுப் பேசினேன். அவர் நிறுவனத்தை ஆரம்பிக்கலாம்னு நெனச்சப்போ நானே ஷான் மலோனியை அறிமுகப் படுத்தினேன், முதல் மூலதனமும் இட்டேன்."

சூர்யா பாராட்டினார். "வெரி குட்" என்று கூறிவிட்டு கிரணுக்கு கண்ணாலேயே சமிக்ஞை செய்ய, அவன் தலையாட்டிவிட்டு ஷாலினியை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

சூர்யா தொடர்ந்தார். "நிறுவனப் பிரச்சனையைப் பத்தி ஷான் மலோனி குறிப்பிட்டதா சொன்னீங்க. இந்த மாதிரி நிலவரத்தைப் பத்தி நீங்க பல நிறுவனங்களில சந்திச்சிருப்பீங்களே, பிரச்சனை தீரலன்னா வழக்கமா என்ன செய்வீங்க?"

பீட்டர் சற்றுத் தடுமாறினார். "ஹூம்... என்ன... செய்வோமா? ஒவ்வொரு நிறுவன நிலவரமும் ஒவ்வொரு மாதிரி. ஒரே மாதிரி இப்படித்தான் செய்யணுங்கறதில்லை. சில சமயம் இன்னும் அதிக மூலதனமிடுவோம். சில சமயம் இன்னும் சில திறன் வாய்ந்தவர்களை நிறுவனத்துல சேர்ப்போம். சில சமயம் பக்கபலமா நானே நிறுவனத்துல சேர்ந்து கவிழ இருக்கும் கப்பலை நேர்ப்படுத்தி, துறைமுகத்துல கொண்டு சேர்ப்போம். பல வழிமுறைகள் இருக்கு."

சூர்யா அழுத்தி வினாவினார். "அப்படின்னா இப்ப இந்த நிறுவனத்துக்கு எந்த வழியில போகலாம்னு நினைக்கறீங்க? அதுக்குத் தானே அவசரமா வந்திருக்கீங்க?"

பீட்டரின் முகம் இருண்டது. "அதுக்குத்தான் அவசரமா வந்திருக்கேன்னு சொல்லமுடியாது. என்ன வழின்னும் இன்னும் தீர்மானிக்கலை. ஆனா ஷான் சொன்னதைக் கேட்டுக் கவலையாயிடுச்சு, அது உண்மைதான். அதுனாலதான் இங்க வந்து என்ரிக்கேயொட கலந்தாலோசிச்சு அடுத்த மேல்நடவடிக்கை என்ன எடுக்கலாம்னு முடிவெடுக்கப் புறப்பட்டு வந்தேன். அவ்வளவுதான்."

சூர்யா யோசனையில் சில நொடிகள் மூழ்கினார். பிறகு திடீரென மௌனத்தைக் கலைத்தார். "என்ரிக்கே எல்லோரோடும் தனித்தனியா பேசியாச்சு. இப்போ அடுத்து நாம சந்திச்ச எல்லோரையும், பீட்டர் உட்பட, ஒரே சமயத்துல கலந்தாலோசிச்சா நல்ல தடயம் கிடைக்கும்னு தோணுது. எல்லாரையும் அந்த பெரிய கூட்ட அறைக்குக் கூப்பிடறீங்களா?"

சூர்யாவின் திடீர்க் கோரிக்கையால் வியப்படைந்த என்ரிக்கே, தலையாட்டி, "சரி சூர்யா. அப்படியே செய்வோம். பீட்டர், ஹான் நீங்க ரெண்டு பேரும் என்னோட வாங்க. மத்தவங்களை நான் கூப்பிடறேன்." என்று கூறி முன்னறைக்கு சூர்யாவுடன் விரைந்தார். பீட்டரும் ஷானும் பின்தொடர்ந்தனர். சூர்யா மிக அவசரப்படுத்தியதில், கிரணும் ஷாலினியும் தங்களுடன் வராததை அவர்கள் உணரவில்லை!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com