குதிரை வண்டித் தாத்தா
மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு போனபொழுது எனக்கு ஒரு பெரிய சோதனை காத்திருந்தது. அதுவரை அண்ணனோடதான் பள்ளிக்குப் போவேன். அவன் கடைக்குச் சென்றால் நானும் செல்வேன். அவன் விளையாடப் போனால் நானும் அவனுடன் விளையாடச் செல்வேன். அவன் இப்போது வேறு பள்ளிக்கு மாறிவிட்டான். இனி அவன்பின் திரிந்த காலம் போய் நான் தனியாகப் பள்ளிக்குப் போக வேண்டும்.

அப்போது நாங்கள் இருந்தது குமரன் நகர். குமரன் நகர் என்பதாலோ என்னவோ நிறைய ஆண்பிள்ளைகள் வசித்தார்கள். என்னுடைய தோழி இரண்டு தெரு தள்ளி இருந்தாள். அவள் குதிரை வண்டியில் பள்ளிக்குப் போவாள். எங்களுடையது கூட்டுக் குடும்பம். வீட்டில் அப்பா அம்மா அண்ணனைத தவிர சின்ன அத்தை, பெரிய அத்தை மகன்களும் இருந்தார்கள். பழகிய வழி என்பதால் என்னை யாரும் பள்ளிக்கு அழைத்து கொண்டு போய் விட்டு, திரும்ப அழைத்து வரமாட்டார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். நாளையிலிருந்து நான் தனியாகப் பள்ளிக்குச் செல்லவேண்டும். என்ன செய்வது எனத் தெரியவில்லை.

நான் என் தெரு ஆண்பிள்ளகளுடன் பள்ளிக்குப் போக ஆரம்பித்தேன். யாருடனும் பேசியதில்லை. அவர்களுக்கு இரண்டடி பின்னே நடப்பேன். அவர்கள் நின்று ஏதேனும் வேடிக்கை பார்த்தால் நானும் நின்று பார்ப்பேன். அவர்கள் விளையாடினால் நானும் தள்ளி நின்று அவர்களை வேடிக்கை பார்ப்பேன். போகும் வழியில் ஒரு குளம். அவர்கள் அதில் இருக்கும் மீன்களை எட்டிப் பார்த்தால் நானும் எட்டிப் பார்ப்பது, அவர்கள் நடந்தால் நானும் நடப்பது. இப்படியாகச் சில நாட்கள் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். அந்தக் குழுவில் இருந்த ஒரு பையன் என்னை கவனித்துவிட்டான் போல் இருக்கிறது. நான் அதை கவனிக்கவில்லை.

ஒருநாள் வழக்கம் போல் அவர்களை தொடர்ந்து சென்றபோது அந்தப் பையன் அவன் மற்றவர்களைப் பார்த்து, "ஏண்டா இந்தப் பொண்ணு நம்ம பின்னாடி வர்ரா?"எனக் கேட்டான். அத்துடன் நில்லாமல் என்னைத் திரும்பிப் பார்த்து, "நீ ஏன் எங்களுடன் வருகிறாய்?" எனக் கேட்டான்.

எனக்கு ரோசம் வந்துவிட்டது. "நான் ஒன்றும் உங்க பின்னால் வரல" என சொல்லிவிட்டு, முன்னே வேகமாக நடந்து சென்றேன் பல தரப்பட்ட சிந்தனைகளுடன்.

இனி இருப்பது ஒரு வழிதான். பள்ளி முடிந்தவுடன் என் தோழியின் குதிரை வண்டியைப் பின்பற்றி நடப்பதென முடிவு செய்தேன். அதன்படி குதிரை வண்டியின் பின்னே நடக்க ஆரம்பித்தேன். குதிரைவண்டித் தாத்தா அங்கங்கே நின்று பிள்ளைகளை அவரவர் வீட்டில் இறக்கிவிட்டார். நான் அவருடைய வண்டியைத் தொடர்ந்து வருவதைக் கண்டு, "நீ எங்க போகணும் பாப்பா?" எனக் கேட்டார். போகிற வழியில்தான் என் வீடு இருக்கிறது என்பது தெரிந்தவுடன், "வண்டியில் ஏறிக்கோ" என்றார்.

அதற்குமுன் குதிரை வண்டியில் பயணித்ததில்லை. என் தோழியை போல் நானும் குதிரை வண்டியில் போகவேண்டும் என ஆசை இருந்ததால் தாத்தா ஏறிக்கோ என்றவுடன் மிக சந்தோஷமாக இருந்தது.

குதூகலத்துடன் குதிரை வண்டியின் படியில் கால் வைத்தேன். எல்லாப் படிகளும் நாம் கால் வைத்தால் நிலையானதாகத்தானே இருக்கும். ஆனால் இந்தப் படியில் கால் வைத்தால் கீழே வந்தது. நிலை தடுமாறி ஒரு வழியாகச் சமாளித்து வண்டியில் அமர்ந்தேன். மெத்தை போட்டு இருந்ததால் அமருவதற்கு வசதியாக இருக்கும் என நினைத்தேன் அதற்கு மாறாக கட்டை மாதிரி இருந்தது. வண்டி பாரத்தால் சிறிது பின்னே சரிந்திருந்தது. நான் பின்னால் உட்கார்ந்ததால் சறுக்கு மரத்தில் சறுக்குவது போன்ற உணர்வு இருந்தது. நல்ல வேளையாகப் பிடிப்பதற்குக் கம்பி இருந்ததால் கீழே விழாமல் அமர்ந்தேன். ஆனாலும் வண்டி மேடு, பள்ளம் ஏறும்போது என் தலை மேலே இடித்தது. வலித்தாலும் இளித்தேன். என் தோழியுடன் குதிரை வண்டியில் பயணம் செய்தது புதிய அனுபவமாக இருந்தது. அது எனக்குப் பிடித்திருந்தது.

குதிரை வண்டித் தாத்தா என் வீட்டில் என்னை இறக்கிவிட்டார். தாத்தாவுக்கு நன்றி சொல்லிவிட்டு "நாளை அப்பா அம்மாவிடம் கேட்டுப் பணம் வாங்கித் தருகிறேன்" எனப் பெரியவர்கள் போலச் சொல்லிவிட்டு, தோழிக்குக் கையசைத்துவிட்டு வீட்டிற்குள் ஓடினேன்.

வீட்டில் எல்லோரிடமும் "நான் குதிரை வண்டியில் வந்தேன், குதிரை வண்டியில் வந்தேன்" எனப் பலமுறை பூரிப்புடன் கூறினேன். அப்பா அம்மாவிடம் தாத்தாவுக்குக் காசு கொடுக்கணும் எனச் சொன்னேன். ஏனோ அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. சிறிது வருத்தமாக இருந்தது. இனிமேல் காசு கொடுக்காமல் வண்டியில் போகமுடியாது எனப் புரிந்தது.

அதன் பின்தான் சிறிது சிறிதாக மனதில் தைரியம் வந்து நான் தனியாக பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தேன். இதோ இப்பொழுதும்கூடத் தனியாகக் காரில் வேலை நிமித்தமாக வெளியூருக்குச் செல்கிறேன். ஆனால் இன்றும் குதிரை வண்டி அனுபவத்திற்கு எதுவும் ஈடில்லை. அந்தத் தருணத்தில் தன்னால் முடிந்ததைச் செய்த தாத்தாவின் கருணையும் கனிவும் இப்போது நினைத்தாலும் என் மனது நெகிழ்கிறது.

சாரதா,
ஆண்டோவர், மாசசூஸட்ஸ்

© TamilOnline.com