வரமாகிப்போன சாபம்
இந்திரன் சொல்லியிருந்ததைப் போல, அர்ஜுனனை இந்திரலோகத்துக்கு அழைத்துச் செல்வதற்காக பத்தாயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் அவனுடைய தேரை, சாரதி மாதலி கொண்டுவந்தான். ராவண வதத்துக்காக ராமன் ஏறிய தேர் அது. மாதலி, "இந்திரன் மகனே! தேரில் ஏறுக! இந்திரன் உன்னைப் பார்ப்பதற்கு விரும்புகிறான். இந்திரனுடைய கட்டளைப்படி தேவலோகத்துக்கு வந்து அஸ்திரங்களைப் பெற்றுக்கொள்" என்று அழைத்தான். அர்ஜுனன் தானிருந்த மந்தரம் என்ற மலையிடத்தில் விடை பெற்றுக்கொண்டு அந்தத் தேரில் ஏறி தேவலோகத்துக்குப் புறப்பட்டு அமராவதி என்று அழைக்கப்படும் தேவலோகத்தைச் சென்றடைந்தான். தன் மகனான அர்ஜுனனுடைய கைகளைப் பற்றிக்கொண்ட இந்திரன் அவனை தேவர்களுக்கு எதிரில், தன்னுடைய இந்திராசனத்தில் அமரச் செய்தான். தும்புருவைத் தலைவனாகக் கொண்ட கந்தர்வர்கள் வேதகீதங்களை இசைத்தார்கள். அந்தச் சபையிலே தேவர்களும் முனிவர்களும் திரண்டார்கள். க்ருதாசி, மேனகை, ரம்பை, பூர்வசித்தி, ஸ்வயம்ப்ரபை, ஊர்வசி போன்ற பல்வேறு அப்ஸரஸ்களும் கூடினார்கள். இந்திரனுடைய எண்ணப்படியே அர்ஜுனனைப் பலவகையாலும் பூஜித்தார்கள். அர்ஜுனன் இந்திரனிடமிருந்து எய்வதற்கும் திரும்பி வாங்குவதற்கும் உரிய முறைகளோடு இந்திரனுடைய வஜ்ராயுதத்தைப் பெற்றுக்கொண்டான். பாண்டவ வனவாசத்தின் இறுதிப் பகுதியில்தான் கர்ணன் தன்னுடைய கவச குண்டலங்களுக்கு பதிலாக இந்திரனிடமிருந்து சக்தியாயுதத்தைப் பெறப்போகிறான். அதைக்காட்டிலும் அதிக ஆற்றல் கொண்ட வஜ்ராயுதம் இப்போதே அர்ஜுனனுடைய கைக்கு வந்துவிட்டது. "இந்திரனுடைய உத்தரவின்படி ஸுகியாக (நல்ல சுகத்துடன்) ஐந்து வருஷங்கள் வசித்தான்" என்கிறது வியாச பாரதம். (இந்திரலோகாபிகமன பர்வம், அத். 43, பக். 166).

சிறிதுகாலம் கழித்து, "இந்திரன் அர்ஜுனனை நோக்கி, ஓ கௌந்தேய! நர்த்தனத்தையும் பாட்டையும் சித்திரஸேனனிடமிருந்து அடைவாயாக. ஓ கௌந்தேய! மனிதலோகத்தில் இல்லாததும் தேவர்களால் செய்யப்பட்டதுமான வாத்யத்தையும் அவனிடமிருந்தே கற்றுக்கொள். உனக்கு நன்மையுண்டாகும்' என்று சொன்னான். இந்திரன் இவனுக்கு நண்பனாக சித்திரஸேனனையும் கொடுத்தான்." (மேற்படி இடம்). இந்த சித்திரஸேனன் அர்ஜுனனுக்குப் பழைய நண்பன். அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்து ஏகசக்ரபுரத்தில் வசித்த காலத்தில், பாஞ்சாலியின் சுயம்வரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு குந்தியும் பாண்டவர்களும் அந்த நிகழ்வுக்குச் செல்லும் வழியில் கங்கையைக் கடக்கும்போது இந்தச் சித்திரஸேனன் என்ற கந்தர்வர்களின் தலைவன் பாண்டவர்களை வழிமறித்துப் போருக்கழைத்தான். அப்போது அர்ஜுனன் தன்னுடைய வில்லாற்றலால் அவனை வென்றான். எப்போதும் எண்ணிக்கையில் குறையாத நூறு வெள்ளைக் குதிரைகளை சித்திரஸேனன் அர்ஜுனனுக்குக் கொடுத்திருந்தான். அதன் பிறகு இருவரும் நண்பர்களானார்கள். இசையிலும் நடனத்திலும் வல்லவர்களான கந்தர்வர்களுடைய தலைவனான அந்தப் பழைய நண்பனிடத்தில்தான் இப்போது அர்ஜுனன் நடனத்தையும் பாடுவதையும் கற்றுக்கொள்ளப் போகிறான். இந்தக் காலகட்டத்தில் அர்ஜுனனுக்கு அடிக்கடி தன்னுடைய சகோதர்கள், தாய் ஆகியோருடைய எண்ணம் தோன்றும்; சகுனியும் சூதாட்ட சபையும் துரியோதனன் துச்சாஸனன் முதலானவர்களை அழிக்கவேண்டிய நினைவும் ஏற்படும். ஆகவே அவன் மனதளவில் சந்தோஷமாக இருக்கவில்லை. “சகோதர்களையும் மாதாவான குந்தியையும் நினைத்துக்கொண்டு (மனத்தில்) ஸுகத்தையடையவில்லை" என்கிறார் வியாசர். (மேற்படி, பக். 167).

இந்திரன் இதையெல்லாம் கவனித்திருந்தான். சபையில் அர்ஜுனன் அடிக்கடி ஊர்வசியைப் பார்த்துக்கொண்டிருந்ததையும் கவனித்தான். சித்திரஸேனனை ரகசியமாக அழைத்தான்: "One day, knowing that Arjuna's glances were cast upon Urvasi, Vasava, calling Chitrasena to himself, addressed him in private saying, 'O king of Gandharvas, I am pleased; go thou as my messenger to that foremost of Apsaras, Urvasi, and let her wait upon that tiger among men, Phalguna. Tell her, saying these words of mine, 'As through my instrumentality Arjuna hath learnt all the weapons and other arts, worshipped by all, so shouldst thou make him conversant with the arts of acquitting one's self in female company.'" (கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்ப்பு. வாசவன் என்பது இந்திரனையும், பல்குணன் என்பது அர்ஜுனனையும் குறிக்கும் பெயர்கள்.) இந்திரனுடைய உத்தரவுப்படி ஊர்வசியை அடைந்த சித்திரஸேனன், அவளிடத்தில் அர்ஜுனனுடைய மேன்மையான குணங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி "Arjuna, is known to thee. O Urvasi, know thou that hero is to be made to taste the joys of heaven. Commanded by Indra, let him today obtain thy feet. Do this, O amiable one, for Dhananjaya is inclined to thee." 'இது இந்திரனுடைய உத்தரவு' என்பதைத் தெரிவித்தான். ஆனால் ஊர்வசிக்கே அர்ஜுனன்மீது அப்படியொரு அபிப்பிராயம் இருந்தது. 'நானே அர்ஜுனனால் வசமிழந்திருக்கிறேன்' என்று சித்திரஸேனனிடத்தில் தெரிவித்தாள். கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பில் ஊர்வசியின் மறுமொழி இவ்விதம் தரப்பட்டுள்ளது: "Hearing of the virtues that should adorn men, as unfolded by thee, I would bestow my favours upon any one who happened to possess them. Why should I not then, choose Arjuna for a lover? At the command of Indra, and for my friendship for thee, and moved also by the numerous virtues of Phalguna, I am already under the influence of the god of love. Go thou, therefore, to the place thou desirest. I shall gladly go to Arjuna."

'மோகவசப்பட்டிருக்கும் நான் அர்ஜுனனிடத்தில் மகிழ்ச்சியுடன் செல்கிறேன்' என்று கூறி சித்திரஸேனனை வழியனுப்பிய ஊர்வசி மெல்லிய ஆடைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டும் வாசனை திரவியங்களைப் பூசிக்கொண்டும் "தீவினை செய்தவர்களால் மனத்தாலும் அடைய முடியாதவளும் அழகிய புன்னகையுள்ளவளுமான (அவள்) பாண்டு புத்திரனான அர்ஜுனனுடைய வீட்டை (இரவு நேரத்தில்) அடைந்தாள்". அவள் வந்திருப்பதை வாயில் காப்போர் அர்ஜுனனிடத்திலே தெரிவித்தார்கள். அவளிருந்த நிலையில் அவளை ஏறெடுத்துப் பார்க்கவும் வெட்கப்பட்ட அர்ஜுனன், குருவை வணங்குவதுபோல அவளை வணங்கினான். "உத்தமமான அப்ஸரஸுகளுள் சிறந்தவளே! உன்னைத் தலையால் வணங்குகிறேன். நீ வந்த காரியம் என்ன? யாவற்றையும் உள்ளபடி சொல்லுவாய். ஓ தேவி! என்ன கட்டளையிடுகிறாய்? நான் உனக்கு வேலைக்காரனாகி வந்திருக்கிறேன்" என்று சொன்னான். அர்ஜுனனுடைய மறுமொழியால் அவனுடைய மனத்தில் ஆசையில்லை என்பதை ஊர்வசி உணர்ந்துகொண்டாள். ஆனால் தேவலோக ஒழுக்க முறைகள் வேறுமாதிரியானவை. தானே விரும்பி அர்ஜுனனைத் தேடிவந்த அப்ஸரஸான ஊர்வசிக்கு இது ஏமாற்றம் மட்டுமல்லாமல் அவமதிப்பாகவும் போய்விட்டது. "நீ என்னை விரும்புவதாக என்னிடத்தில் உன் தந்தையாருடைய உத்தரவுப்படி சித்திரஸேனன் வந்து சொன்னான். சபையில் அத்தனை அப்ஸரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தபோது, நீ வைத்தகண் வாங்காமல் என்னையே பார்ப்பதை நானும் கவனித்தேன். பிறகு நான் அந்த உன் பிதாவினால் கட்டளையிடப்பட்டவளாகி உன்னிஷ்டப்படி நடப்பதற்காக உன் சமீபம் வந்தேன். ஓ வீர! இந்திரனால் அனுப்பப்பட்டு மட்டும் நான் இங்கு வந்தேனல்லேன். இந்த விருப்பமானது என்னாலும் வெகுகாலமாக விரும்பப்பட்டதே" என்றாள். தேவனுக்கு ஒப்பான அர்ஜுனன் அவள் அவ்விதம் சொல்லியதைக் கேட்டு, மிக்க லஜ்ஜையுள்ளவனாகிக் கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு சொல்லலானான், "நான் உன்னைப் பார்த்தது உண்மைதான். நீ எனக்கு குந்தியையும் இந்திராணியையும் போலத் தாய்முறை ஆகவேண்டியவள். உன்னை நான் 'குரு ஸ்தானத்தில்' வைத்திருக்கிறேன். (ஒரு மனிதனுக்கு பெற்றோர் இருவரும் முதல் இரண்டு குருமார்கள். தாய், தந்தை, ஆசான், மூத்தவன், அரசன் இந்த ஐவரும் ஒருவனுக்கு குரு ஆகிறார்கள்.) 'நீ என்னுடைய வம்சத்தை விருத்தி செய்தவள்' என்ற முறையில் எனக்கும் என் வம்சத்துக்கும் தாய் ஆகிறாய்" என்று கூறி அவளை மீண்டும் வணங்கினான். இது குறித்த வரலாறு ஸம்பவ பர்வத்தில் (பக்கம் 258-259) வருகிறது. தேவை கருதி, மிகச் சுருக்கமாக இந்த வரலாற்றைப் பார்ப்போம்.

இளை என்பவளின் புத்திரர் புரூரவஸ். கணக்குப் போட்டால் இவர் அர்ஜுனனுக்கு சுமார் ஐம்பது தலைமுறை முற்பட்டவர். இந்தப் புரூரவஸுக்கு ஊர்வசியிடத்தில் ஆயு, தீமான் முதலான ஆறு குமாரர்கள் பிறந்தார்கள். ஆயுவுக்கு நகுஷன் என்ற மகன் பிறந்தான். ஏணிகளும் பாம்புகளும் நிறைந்த பரமபத ஸோபான பட ஆட்டத்தில் மிகப்பெரிய பாம்பு நகுஷன். இவன் இந்திர பதவியை அடைந்து, இந்திராணியைப் பெறுவதற்காக முனிவர்களால் சுமக்கப்பட்ட பல்லக்கில் ஏறிச் சென்றான். சுமந்து சென்றவர்களுள் அகத்தியரும் ஒருவர். அவருடைய தலையில் உதைத்து (வேகம், வேகம் என்னும் பொருளில்) 'ஸர்ப்ப, ஸர்ப்ப' என்றான். பொறுமையை இழந்த அகத்தியர் அவனைப் பாம்பாகிப் போகும்படி சபித்தார். மலைப்பாம்பாக பூமியில் வந்து விழுந்தான் நகுஷன். மிக நீண்டகாலம் அப்படி விழுந்துகிடந்தவன், வனவாசத்துக்காகக் காட்டில் நுழைந்த பாண்டவர்களுள் பீமனைப் பற்றிக்கொண்டான். இறுதியில் நகுஷனுக்கு பீமனால் விமோசனம் கிடைக்கிறது. இது வன பர்வத்தில் 'ஆஜகர பர்வ'த்தில் சொல்லப்படுகிறது.

இந்த நகுஷனுடைய இரண்டாவது மகன் யயாதி. யயாதியின் ஐந்து புதல்வர்களில் முதல்வனான பூரு, தந்தையுடைய வயோதிகத்தைத் தான் வாங்கிக்கொண்டு தனது இளமையைத் தந்தைக்குத் தருகிறான். இந்தப் பூருவின் வம்சம் பௌரவ வம்சம். இந்த வம்சத்தில் பல தலைமுறைகளுக்குப் பிறகு துஷ்யந்தன்-சகுந்தலைக்கு பிறந்தவர் பரதர். இவருடைய பெயரால்தான் பாரத நாடு 'பரத கண்டம்' என்று அறியப்படுகிறது. பரதனுடைய மகன் குரு (Kuru). பூருவின் வம்சம் பௌரவ வம்சம் ஆனதுபோல குருவின் வம்சம் கௌரவ வம்சமானது. இந்த வம்ச பரம்பரை விவரத்தை விரிவாகத் தெரிந்துகொள்ள, பாகவத மகாபுராணத்தின் Book 9, Discourse 20 பார்க்க வேண்டும்.

அர்ஜுனன் தனக்குச் சுமார் ஐம்பது தலைமுறைகளுக்கு முற்பட்ட புரூரவஸுக்கும் ஊர்வசிக்கும் பிறந்த மக்களைப் பற்றியும் அறிந்திருந்தபடியால், ஊர்வசியைத் தன் தாயாகக் கருதினான். நாம் முன்னரே சொன்னதைப் போல தேவலோக நடைமுறைகள் நம்மிலிருந்து வேறுபட்டவை. அர்ஜுனன் சொன்னவை தேவலோகத்துக்குப் பொருந்தாதவை என்றாள் ஊர்வசி. "உங்கள் பூலோக நடைமுறைகளுக்கும் தேவலோக நடைமுறைகளுக்கும் தொடர்பில்லை. பூருவின் வம்சத்தில் பிறந்த மகன்களும் பேரன்களும் தங்களுடைய தவ வலிமையால் இங்கே வந்து எங்களைக் கலந்திருக்கிறார்கள். ஆகவே என்னை ஏற்றுக்கொள்" என்று வாதிட்டாள். இதை அர்ஜுனனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "நீ எனக்குக் குந்தியையும் மாத்ரியையும் ஸசியையும் (இந்திராணியையும்) ஒத்தவள். உன்னை என் தலையால் வணங்குகிறேன். இந்த இடத்தை விட்டுப் போ" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். அவன் மறுத்ததனால் ஊர்வசிக்கு சினம் அளவு கடந்தது. "உன் தந்தையின் கட்டளையாலும் தன் சுய விருப்பத்தாலும் உன்னைத் தேடிவந்த பெண்ணை நீ மறுதலிக்கிறாய். நீ பேடியாகக் கடவாய் என்று நான் உன்னைச் சபிக்கிறேன்" என்று அர்ஜுனனைச் சபித்த ஊர்வசி, தன் இருப்பிடத்துக்குத் திரும்பினாள்.

இந்தச் சாபத்தால் வருத்தமடைந்த அர்ஜுனன் அன்றிரவு முழுவதும் தனிமையில் கழித்துவிட்டு, பொழுது விடிந்ததும் தன்னைத் தேடிவந்த சித்திரஸேனனிடத்தில் நடந்ததை நடந்தவிதமாகத் தெரிவித்தான். அவன் இந்த விவரங்களை இந்திரனிடத்தில் தெரிவித்தான். அர்ஜுனன் ஊர்வசியைக் கண்கொட்டாமல் பார்த்ததற்கான முழு விவரத்தை அறிந்த இந்திரன் மகிழ்ச்சியடைந்தான். "உன் தாய் குந்தி, நீ பிறந்ததால் உத்தமமான மகனைப் பெற்றாள்" என்று பாராட்டினான். அர்ஜுனனைப் பார்த்து, ஊர்வசி உனக்குக் கொடுத்த சாபமும் பயனுள்ளதே. "குற்றமற்றவனே! வீர! பூதலத்தில் நீங்கள் (வனத்துக்கு வந்த) பதின்மூன்றாவது வருஷத்தில் அஞ்ஞாதவாஸம் செய்யவேண்டும். அப்பொழுது இந்தச் சாபத்தை நீ போக்குவாய் (அனுபவிப்பாய்.) அந்த நட்டுவ வேஷத்துடனும் அப்படியே அலித்தன்மையுடனும் ஒருவருஷம் முழுவதும் திரிந்து, பிறகு ஆண்தன்மையை அடைவாய்" என்று கூறினான். (மேற்படி அத். 44, பக். 173)

ஊர்வசி 'இனியெப்போதும் அலித்தன்மை உடையவனாய்த் திரிவாய்' என்று சொன்னதை 'ஒரு வருடத்துக்கு அப்படி இரு. உங்களுடைய பதின்மூன்றாவது அக்ஞாதவாச காலத்துக்கு இந்தச் சாபம் பயன்படும். அந்த ஒருவருட காலம் முடிந்ததும், நீ எப்போதும்போல் ஆண்தன்மை உடையவனாவாய்' என்று சாபத்தின் தன்மையை மாற்றி, அதை வரமாக்கினான் இந்திரன்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

★★★★★


ஹரி கிருஷ்ணனுக்கு விருது
அக்டோபர் 5, 2019 அன்று பெங்களூரு பாரதிய வித்யா பவனில் நடந்த விழா ஒன்றில் பெங்களூருவின் நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா தலைமையில் இண்டிக் அகாடெமியினர் #Grateful2Guru என்ற நிகழ்வில் பெங்களூரைச் சேர்ந்த 16 பேருக்கு சனாதன தர்மத்திற்குச் செய்த தன்னலமற்ற சேவைக்காக விருதளித்துப் பாராட்டினார்கள். அவர்களில் ஹரி கிருஷ்ணனும் ஒருவர். அவருக்குச் சிறப்புச் செய்யப்பட்ட போது எடுத்த படம். பெங்களூரின் 16 பேர் தவிர, உலக அளவில் 108 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

© TamilOnline.com