தீபிகா ஜெயசேகர் காட்டும் சொர்க்கத் தீவு
தீபிகா ஜெயசேகருக்கு வயது 14தான். ஆனால், இதற்குள் 'The Trip to Paradise Island' என்ற தனது முதல் நாவலை எழுதி வெளியிட்டுவிட்டார். அதுவும் தன்னைப் போன்ற சிறார்களுக்கான நாவல் என்பது இதில் பெருமைப்படத் தக்க விஷயம்.

இதை வாசிக்கும் பல குழந்தைகளுக்கு வகுப்புத் தோழியாக தீபிகாவைத் தெரிந்திருக்கலாம். காரணம், இவர் எல்.கே.ஜி., முதல், 3ம் வகுப்பு வரை, அமெரிக்காவில் படித்தவர். பின் சென்னைக்கு வந்து 6ம் வகுப்பு வரை படித்தார். மீண்டும் அமெரிக்காவிற்கு வந்து 7, 8 வகுப்புகளைப் படித்தார். தற்போது மீண்டும் சென்னையில்ஒன்பதாம் வகுப்புப் பயிலும் தீபிகா, தனது பலநாள் எழுத்துக் கனவை நனவாக்கியிருக்கிறார்.



சிறு வயதிலிருந்தே கதைப் புத்தகங்கள், காமிக்ஸ் மீது நாட்டமுண்டு தீபிகாவுக்கு. அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த தந்தை விதவிதமான புத்தகங்களை வாங்கித் தந்தார். எழுதவும் ஊக்குவித்தார். ஏழு வயதில் துவங்கியது தீபிகாவின் எழுத்துப் பயணம். சிறுசிறு கதைகள் எழுதி வந்த, இப்போது தீபிகா தனது முதல் நாவலை எழுதி வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்குவிக்கும் Notion Press இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. புத்தகத்தின் அட்டை, விளம்பரத்திற்கான வீடியோ என அனைத்தையும் தீபிகாவே உருவாக்கியிருக்கிறார். மீன் வளர்ப்பிலும், கடல்வளம் மீதும் ஆர்வம் கொண்டவர் தீபிகா. புத்தகத்தின் அட்டைப்படம் அதை அழகாக வெளிப்படுத்துகிறது.

"பெற்றோர்களின் ஆதரவும் ஊக்குவிப்புமே நாவல் எழுதும் இந்த முயற்சியைச் சாத்தியமாக்கியது" என்கிறார் தீபிகா. The Writing Shrine என்ற வலைப்பக்கத்தில் தன் கவனத்தைக் கவரும் விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார்.



ஜெனிஃபர், ஜூலி, லாரி மற்றும் ஜோ என்னும் நான்கு சிறார்கள் ஓர் அதிசயத் தீவிற்கு மேற்கொண்ட பயணமும், அவர்கள் செய்த சாகசங்களும்தான் விறுவிறுப்பான இந்த நாவலின் கதை. குழந்தைகளுக்காக ஒரு குழந்தையே எழுதிய இந்தப் புத்தகத்தை வாங்க விருப்பமா?

இங்கே வாங்கலாம்: amazon.com

சிசுபாலன்

© TamilOnline.com