இசைக்கலைஞர் துரை ஸ்ரீனிவாசன்
கர்நாடக இசை, ஃப்யூஷன், திரையிசை, பேண்டு என்று இசையின் பல பரிமாணங்களிலும் ஆர்வமுள்ள இளைஞர் துரை ஸ்ரீனிவாசன். பாரம்பரிய இசைக்குடும்பம். மிகச்சிறிய வயதில் தந்தையை இழந்தார். முயற்சியாலும் அயராத பயிற்சியாலும் இன்று சாதனை இளைஞராக உயர்ந்து நிற்கிறார். லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட இவரது யூ ட்யூப் சானல் மிகவும் பிரபலம். ஆஸ்திரேலியா சாய் சிவா விஷ்ணு ஆலயத்தில் வழங்கப்பட்ட 'சங்கீத ஞானமூர்த்தி நிதி', நாரதகான சபா வழங்கிய 'கே.எஸ். மகாதேவன் எண்டோமென்ட் விருது', தென் ஆப்பிரிக்காவில் வழங்கப்பட்ட 'நாத கலாரத்னா', மலேசியாவில் வழங்கப்பட்ட 'சர்ட்டிஃபிகேட் ஆஃப் மெரிட்', தென்னாப்பிரிக்காவின் கலை, கலாசாரத் துறை வழங்கிய 'சர்ட்டிஃபிகேட் ஆஃப் ஆனர்' எனப் பல கௌரவங்கள் பெற்றவர். கச்சேரி, ஒலிப்பதிவு, இசைப்பயிற்சி என்று சுழன்று கொண்டிருந்தவரிடம் உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து...

இசையில் தொடங்குதம்மா...
வீட்டில் அம்மா, அப்பா என்று எல்லாருமே இசை அறிந்தவர்கள். அதனால் தனியாக இசை கற்கவேண்டும் என்ற நிலை இல்லை. காலையில் இருந்து ஏதாவது ஒரு கச்சேரி ஓடிக்கொண்டே இருக்கும். அப்பாவின் நண்பர்களான கலைஞர்கள் வீட்டுக்கு வருவார்கள், அதனால் விவாதங்களும் இருக்கும். முதலில் நான் வாய்ப்பாட்டு கற்க ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 4 வயது. ஏ.எஸ். முரளி அவர்கள் என் முதல் குரு. அவர் ஏ கிரேடு இசைக்கலைஞர். கீதம் வரைக்கும் அவரிடம் கற்றேன்.

வயலினுக்கு முதல் குரு என் அப்பா திரு துரை சுவாமிநாதன். அப்பா என்பதால் ரொம்பச் செல்லம். தினமும் வாசிப்பேன். சில சமயம் வாசிக்க மாட்டேன். எனக்கு 9 வயது இருக்கும்போது ஒரு விபத்தில் அப்பா உயிரிழந்தார். அது எனக்குப் பேரிழப்பு. அதன் பிறகு ஒழுங்காக உட்கார்ந்து பயிற்சி செய்வது நின்றுவிட்டது. மெல்ல மெல்லத்தான் அதிலிருந்து மீண்டேன். எனது சித்தப்பா திரு துரை பாலசுப்பிரமணியனும் அப்பாவின் நண்பர்களும், பல இசைக் கலைஞர்களும் என் குடும்பத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். அம்மா வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பாற்றினார். அப்படித்தான் கல்லூரிவரை படித்து படிப்படியாக முன்னேறினேன்.



முதலில் சிறு சிறு கோவில் விழாக்களில் வாசித்தேன். பின் சித்தப்பாவுடன் சேர்ந்து கச்சேரிகளில் வாசித்தேன். சோலோ, டூயட் என்று அது தொடர்ந்தது. இப்படியே வளர்ந்து, பெரிய சபாவான நாரதகான சபாவில் கச்சேரிக்குப் பக்கவாத்தியம் வாசித்தேன்.

என் தந்தை,பிறகு என் சித்தப்பா ஆகியோரிடம் கற்றதைச் சொன்னேன். அவர் தற்போது லண்டனில் இருக்கிறார். பிறகு புல்லாங்குழல் கலைஞர் கே.வி. ராமானுஜம் அவர்களிடம் சேர்ந்தேன். அதன் பின் திரு வி.வி. ஸ்ரீனிவாச ராவ் ஆல் இந்தியா ரேடியோவின் டாப் ஆர்ட்டிஸ்ட், அவரிடம் சில காலம் கற்றேன். வெவ்வேறு காரணங்களால் அதையும் தொடர முடியவில்லை.

பள்ளியில் வந்த வாய்ப்பு
பி.எஸ். ஹையர் செகண்டரியில் படிக்கும்போது, திருமருகல் தினேஷ்குமார், திருமருகல் கணேஷ்குமார் என்று இருவர் படித்தனர். அவர்களின் தந்தை பெரிய தவில் வித்வான். அவர்கள் இருவரும் வயலின் கலைஞர்கள். எனது டீச்சர் ஒருமுறை, "இங்கே இரண்டு வயலின் கலைஞர்கள் படிக்கிறார்கள். நீயும் அவர்களுடன் சேர்ந்து வாசி" என்று சொன்னார். எனக்கு அப்போது மிகுந்த கூச்ச சுபாவம் என்பதால் நானாகப் போய் அவர்களிடம் பேசவில்லை. தொடர்ந்து வயலினைக் கற்க முடியாத சூழல். ஆனால் அவர்களோ கன்யாகுமரி அம்மாவின் மாணவர்கள். அதிகம் கற்காத நான், ஆசிரியர் சொன்னபடி அவர்களுடன் வாசித்தால், அப்பாவின் பெயர் கெட்டுவிடுமோ என்று பயந்தேன்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுடன் அறிமுகம் ஆனபோது, அவர்கள் எனக்கு உறவுமுறை என்பது தெரியவந்தது. தினேஷ் வீட்டுக்குச் சென்று பழகி, அவர் கூறவே நான் கன்யாகுமரி மேடத்திடம் மாணவனாகச் சேர்ந்தேன். எந்த மறுப்பும் சொல்லாமல் என்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டார். அதை ஒரு பெரிய பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு கச்சேரிக்காகப் போன அந்த நாள் முதல் இன்றுவரை நான் வயலின் மேதை கலைமாமணி, சங்கீத கலாநிதி கன்யாகுமரி மேடம் அவர்களின் மாணவன் தான். அவரது சீடன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமை.



கல்லூரியும் இசையும்
படித்துக் கொண்டிருந்த காலத்தில் படிப்புச் சுமை காரணமாக என்னால் இசை வகுப்புகளுக்குச் சரியாகப் போக முடியவில்லை. அதைச் சமன் செய்வதற்காக நிறையக் கச்சேரிகளைக் கேட்டுக் கற்பேன். அதன்பின்பு நேரம் கிடைத்தபோது வகுப்புகளுக்குச் சென்றேன். வயலினின் தொடர்பு விட்டுப்போன உணர்வு வந்ததே கிடையாது. புதிதாகக் கற்கமுடியாமல் போனாலும், அதுவரை கற்றுக் கொண்டவற்றையே வாசித்து வாசித்து மேம்படுத்திக் கொண்டேன்.

கர்நாடக சங்கீதம், திரையிசை என்று எதை எடுத்துக் கொண்டாலும் சிரத்தையும், வாசிப்புப் பயிற்சியும் இருந்தால் போதாது. நிறைய கேள்விஞானம் இருக்கவேண்டும். பெரியவர்கள் எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எங்கு பயணித்தாலும் என்னுடன் இசை வடிவில் லால்குடி, எம்.எஸ்.வி., எல். சுப்பிரமணியன் போன்றோர் உடன் வந்துவிடுவார்கள். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பயிற்சி செய்வேன். இப்படிக் கேட்பதனால் பல பயன்கள். முதலில், நிறையக் கற்கமுடியும். இரண்டாவது, என்னென்ன ஏற்ற இறக்கம் செய்கிறார்கள், எப்படி ஒரு பாட்டைப் போஷித்து மெருகேற்றியிருக்கிறார்கள், ஒரு ராகத்தை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவரும்.

எனது இசை முயற்சிகள்
நான் ப்யூஷன் இசைக்கு வந்ததற்குக் காரணம் நண்பர் திரு. ராகவ் அவினாஷ். அவர் காலேஜில் என் சீனியர். நான் அவரது வீட்டுக்குப் போய் வாசிப்பேன், ரெக்கார்டு செய்வேன். இப்போது சாஃப்ட்வேரில் இருக்கிறார். முறையாக இசை கற்காவிட்டாலும், இசையமைக்கும் திறமை கொண்டவர். அப்போதுதான் சவுண்ட் க்ளவுட், ஃபேஸ்புக் எல்லாம் வந்து பாப்புலராகிக் கொண்டிருந்த நேரம்.

அவர் வீட்டில் ஒரு ட்ராக் ரெகார்ட் செய்தோம். நான் கிளம்பும்போது அவர் அந்த ட்ராக்கை ஓடவிட்டார். அதைக் கேட்டு, நான் வாசித்ததா என்று ஆச்சரியமாக இருந்தது. அதை அவர் Journey with Nalinakanthi என்ற தலைப்பில் சவுண்ட் க்ளவுடில் பகிர்ந்தார். (கேட்க) அது பயங்கர ஹிட் ஆகி விட்டது. ஏகப்பட்ட லைக்ஸ். லண்டன் பி.பி.சி.யில் இருந்து "இது மிகவும் நன்றாக இருக்கிறது, நீங்க இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்ட்டா?" என்று கேட்டார்கள். அதன் பிறகுதான் எனக்கு ஃப்யூஷன் மியூசிக்கில் நிறையச் செய்யலாம் என்ற எண்ணம் வந்தது.

சித்தப்பா திரு துரை பாலசுப்பிரமணியன் தனது எலக்ட்ரிக் வயலினை எனக்குக் கொடுத்தார். வாங்க வசதியில்லாத சூழலில் அது எனக்கு வரம்போலக் கிடைத்தது. அதில் வாசித்து நிறைய ட்ராக் போட ஆரம்பித்தோம். மீடியாக்கள் மூலம் படிப்படியாக என்னைப் பற்றி வெளியே தெரிய வந்தது. திரையிசை, ஃப்யூஷன் எல்லாம் வாசித்தேன். பலரும் என்னைத் தங்கள் குழுவில் வாசிக்க அழைத்தனர். முதன் முதலாக நான் திரையிசையை 'பீட்ஸ்' என்ற இசைக்குழுவிற்கு வாசித்தேன். காரைக்குடி மணி சாரின் மாணவரான சூர்யா கனகரத்னம் அவர்களுடைய பேண்டு அது.

விநாயக்ராம் மாமாவின் தம்பி சுபாஷ்சந்திரன். அவருடைய மகன் கிருஷ்ணா கீபோர்டு வாசிப்பார். அவரது குழுவில் நிறைய வாசித்திருக்கிறேன். கடம் உமாசங்கர், கடம் கிஷன் எனப் பலருக்கு வாசித்திருக்கிறேன். டிரம்ஸ் சிவமணி சாரின் தம்பி ப்ரேமுடன் நிறைய ஃப்யூஷன் வாசித்திருக்கிறேன். அச்சுதா குமாரின் குழு, யுகத்வனி இசைக்குழு எனப் பலருக்கு வாசித்திருக்கிறேன்.
துரை ஸ்ரீனிவாசன்




இசையே வாழ்க்கை
எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் கச்சேரி செய்ய ஆரம்பித்தேன். ஆனாலும், படித்து முடித்துவிட்டு உடனடியாக நல்ல வேலைக்குப் போகும் எண்ணத்தில்தான் இருந்தேன். அம்மா மட்டுமே அப்போது சம்பாதித்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒரு தங்கை. அவர் மாணவி. நான் வேலைக்குப் போகிற எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருந்தது.

ஆனால் என் அப்பாவின் அம்மா எங்களுடன் வசித்து வந்தார். அவருக்கு இரண்டு கண்களும் தெரியாது. அவர் நான் வாசிப்பதைக் கேட்டுவிட்டு ஊக்குவிப்பார். "உனக்கு நன்றாக வாசிக்க வருகிறது. நீ பிரமாதமாக வாசிக்கிறாய்" என்றெல்லாம் சொல்வார். "நீ விடாம வாசி. நன்றாக இருப்பாய். நீ எங்கேயோ போவாய்" என்பார். இன்றைக்கு நான் இசைத்துறையில் நன்றாக இருக்கிறேன் என்றால் அதற்கு அவரது ஆசி ஒரு முக்கியக் காரணம்.

எஞ்சினியரிங் முடித்ததும் வெளிநாட்டிற்குச் சென்று மேலே படிக்கும் எண்ணமும் எனக்கு இருந்தது. என் அப்பாவின் மாணவர் திரு நாகராஜ ஐயர், எனக்கு அண்ணாவைப் போன்றவர். அப்பா மறைந்தபின் பலவிதங்களில் எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார். அவர் அப்போது ஆஸ்திரேலியாவில் இருந்தார். அவர் என்னிடம், "நீ மேற்படிப்பை ஆஸ்திரேலியாவில் படிக்கலாம்; நீ வா. நான் அதற்கான முயற்சிகளைச் செய்கிறேன்" என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். விசாவுக்கு விண்ணப்பித்தேன், ரிஜெக்ட் ஆகிவிட்டது. நமக்கு அங்குச் சென்று படிக்க வாய்ப்பில்லை என்று விட்டுவிட்டேன்.

ஒரு சில விஷயங்கள் நம்மையும் மீறி நடக்கும் என்பார்கள். அப்படித்தான் இதுவும் நடந்தது. ஆஸ்திரேலியாவில் சிட்னி இசைவிழா மிகப் பிரபலம். அதை ஏற்பாடு செய்யும் பொறுப்பில் இருந்த திரு ஜெயேந்திரன் என் அப்பாவின் நண்பர். 1990லேயே அவரது அழைப்பின் பேரில் அப்பா அங்கு சென்று நிறையக் கச்சேரிகள் நடத்தியிருக்கிறார். ஜெயேந்திரன் எதேச்சையாக நாகராஜ ஐயரிடம் போனில் பேசும்போது என்னைப்பற்றி விசாரித்திருக்கிறார். "ஸ்ரீனிவாசனுக்கு விசா ரிஜெக்ட் ஆகிவிட்டது; வர முடியவில்லை" என்று நாகராஜ ஐயர் சொல்லியிருக்கிறார். உடனே இருவருமாக ஆலோசித்து என்னை ஓர் இசைக்கலைஞராகப் பங்கு கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவிற்கு அழைத்தார்கள். விசாவும் கிடைத்தது. ஒரு மாதம் டூர் நிகழ்ச்சி ஏற்பாடு ஆனது. ஆனால் அது மூன்று மாதங்கள் கான்செர்ட் டூராக நீண்டது. இதை ஒரு தெய்வ ஆசிர்வாதமாகவே நான் நினைக்கிறேன்.



ஆஸ்திரேலியாவில்...
ஆஸ்திரேலியாவில் நான்கு நாட்டிய அரங்கேற்றங்களுக்கு வாசித்தேன். சிறு சிறு கச்சேரிகளுக்கு வாசித்தேன். தொடர்ந்து அங்கேயே நிறையக் கச்சேரிகளுக்கு வாசிக்கும் வாய்ப்பு வந்தது. அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. காரணம், நான் ஆர்ட்டிஸ்டாகப் போயிருந்தாலும் அங்கே உள்ள கல்லூரிகளில் எம்.ஈ, எம்.எஸ்., எம்.பி.ஏ. என்று ஏதாவது மேலே படிக்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், அங்கே கிடைத்த கச்சேரி வாய்ப்புகளும், ஊக்குவிப்புகளும் எனது எண்ணத்தை மாற்றிவிட்டன. கச்சேரிகள் செய்தேன்,வகுப்புகள் எடுத்தேன். எப்போதும் வயலினும் கையுமாக பிஸியாகவே இருந்தேன். மேற்படிப்பு படிக்கும் நினைப்பே என்னை விட்டுப் போய்விட்டது.

நிகழ்ச்சி முடிந்து இந்தியா திரும்பினேன். அதற்குள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றால் எனது கச்சேரிகள் பற்றிய செய்திகள் நன்கு பரவிவிட்டிருந்தன. எனது தந்தையைப் பல கலைஞர்களுக்கு நன்கு தெரியும். அவரது மகன் நான் வாசிக்கிறேன் என்பது தெரிய வந்ததும் பலரும் ஊக்குவித்தனர். நிறையக் கச்சேரி வாய்ப்புகள் வரத் துவங்கின. இதோ இன்றைக்கு ஏழு வருடம் ஆகிவிட்டது. திரும்பிப் பார்க்கும்போது இதெல்லாம் ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்றுதான் புரிந்து கொள்கிறேன். ஓர் ஆசிர்வாதமாகத்தான் கருதுகிறேன். இப்போது இசையைத் தவிர எனக்கு வேறு எந்த நினைவும் இல்லை.

மறக்க முடியாத கச்சேரிகள்
நான் எனது சித்தப்பாவுடன் வாசித்த இரண்டாவது இரட்டையர் கச்சேரியை மறக்க முடியாது. அது திடீரென்று ஏற்பாடானது. ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் பக்கவாத்தியம் வாசித்தார். அதற்கு முந்தைய நாள் மாலை நான் சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு கச்சேரி வாசிக்கச் சென்றிருந்தேன். அதை முடித்துவிட்டு வந்து இதைச் செய்ய முடியுமா என்று சந்தேகமாகவே இருந்தது. கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு பஸ், ட்ரெயின் என்று மாறி மாறிப் பயணித்துச் சென்று இந்தக் கச்சேரியைச் செய்தேன். அதை மறக்க முடியாது.

ஆஸ்திரேலியாவில், நாட்டிய அரங்கேற்றம் ஒன்றிற்கு வாசிப்பதற்காக மெல்பர்னில் ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அவர்களுக்கு எனது பழக்கவழக்கங்கள், கச்சேரி செய்யும் விதம் எல்லாம் பிடித்துப் போய் அந்த அரங்கேற்றம் முடிந்ததும் எனக்காக மற்றொரு கச்சேரி ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அதை மறக்கவே முடியாது. பாம்பே சிஸ்டர்ஸுக்கும் எனக்கும் நேரடி அறிமுகம் இல்லாதிருந்தும் எங்கோ நான் வாசித்ததைக் கேட்டுவிட்டு, விசாரித்து அறிந்து, அவர்களாகவே தொடர்புகொண்டு, என்னைத் தமது கச்சேரிக்கு வாசிக்க அழைத்ததைப் பெரிய விஷயமாக நினைக்கிறேன்.



சீர்காழி சிவசிதம்பரம் அவர்களுக்கு நிறைய வாசித்திருக்கிறேன். ஒருமுறை டெல்லியில் அவருக்கு வாசித்துவிட்டு ஸ்பெஷல் ஃப்ளைட் பிடித்து வந்து இறுதியாண்டுப் பரிட்சை எழுதியிருக்கிறேன். சிக்கில் குருசரண் அவர்களுக்கு வாசித்தது, மலேசியாவில் வாசித்தது என்று பல மறக்கமுடியாத கச்சேரிகள் இருக்கின்றன.

இன்றைக்கு எவ்வளவோ மேம்பட்ட நுணுக்கங்கள் வந்துவிட்டன வயலினில். 5 நரம்பு வயலின், டியோ, எக்கோ, டிலே, பெடல், ஆர்ம் என்று எல்லாம் வந்துவிட்டன. இருப்பதிலேயே மிகவும் கஷ்டமானது அகோஸ்டிக் வயலின் வாசிப்பதுதான். ஆனால், அந்தக் காலத்தில் இதெல்லாம் எதுவுமே இல்லாமல் அற்புதமாக லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றோர் வாசித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது மாதிரி அவர்கள் செய்துவிட்டுப் போய்விட்டார்கள். எல். சங்கரின் 'சக்தி' என்று ஒரு ஆல்பம் இருக்கிறது. மிகவும் பிரபலமான ஆல்பம். 5 ஸ்டிரிங்கில் அதனை வாசிப்பதே மிகவும் கடினம். அவர் அநாயசமாக 4 ஸ்ட்ரிங் வயலினில் வாசித்திருக்கிறார். எனக்கு ஃப்யூஷனில் ஈடுபாடு வந்ததற்குக் காரணமே சக்தி ஆல்பமும், கணேஷ்-குமரேஷின் வயலின் டோனும்தான்.

அதுபோல ராஜேஷ் வைத்யா இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போதைய சீனியரான நாகை ஸ்ரீராம், வரதராஜன் அண்ணா, எம்பார் கண்ணன், சஞ்சீவ் ஆகியோரின் இசை பிடிக்கும். லிடியன் நாதஸ்வரம்கூட எனக்கு ஒருவிதத்தில் இன்ஸ்பிரேஷன் தான்.

பாபாவும் அப்பாவும் - படம் சொல்லும் கதை
கடந்த ஆறு வருடங்களாக எனது தந்தை காலமான டிசம்பர் 10 அன்று, டி.என். ராஜரத்தினம் ஹாலில் எனது அப்பாவின் நினைவு தினத்தை நான் கொண்டாடி வருகிறேன். நினைவு தினத்தை ஒட்டி எனது அப்பாவின் படங்கள் சிலவற்றை ஒரு சமயம் ஃபேஸ்புக்கில் இட்டேன். அதில் இந்தப் படமும் இருந்தது. (பார்க்க: படம்) அது மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தவறிப்போன தருணம். பலரும் இதனைப் பகிர்ந்து வைரல் ஆகிவிட்டது.

இந்தப் படத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. புட்டபர்த்தியில் ஒரு கச்சேரி நடந்தது. மாண்டலின் ஸ்ரீநிவாஸ், அவரது தம்பி ராஜேஷ், என் தந்தை துரை சுவாமிநாதன், தஞ்சாவூர் முருகபூபதி ஆகியோர் பங்கேற்ற கச்சேரி அது. பாபாவுக்கு அன்று மிகவும் சந்தோஷம். மாண்டலின் ஸ்ரீநிவாஸிற்கு ஒரு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தாராம். அவர்கள் எல்லாரையும் தொட்டுப் பேசி ஆசிர்வதித்தாராம். அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடு இந்தப் படத்தில் தெரியும். புன்னகையுடன் கச்சேரி செய்தவர்களின் கரங்களைக் கோத்துக்கொண்டு பாபா இருப்பார்.

தென் ஆப்பிரிக்கா டூருக்கு என்னைத் தில்லைஸ்தானம் சூரியநாராயணன் பரிந்துரைத்திருந்தார். அவர் இந்தப் படத்தையும் சேர்த்து அனுப்பி இவரது மகன்தான் இங்கே வாசிக்க வருகிறார் என்று சொல்லியிருந்தார். காரணம், அங்கே பாபா பக்தர்கள் மிக அதிகம். பாபாவுக்கு நிறையக் கோயில்கள் அங்கே இருக்கின்றன. வீடுகளில் ஒரு தனி அறையையே ஒதுக்கி அதனை பாபாவின் ஆலயமாக வழிபடுவர். சில இடங்களில் விபூதி விழும். சில இடங்களில் பூ வந்திருக்கும். பொருட்கள் தானாகவே நகர்ந்திருக்கும். சில அற்புதங்களை அங்கு சென்றபோது நானே பார்த்து வியந்திருக்கிறேன்.

இந்தப் படம் அங்கே வைரல் ஆகிவிட்டது. அந்தப் பையனைப் பார்க்க வேண்டும், எப்போது வருவார் என்று கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். அதைச் சூரி மாமா சொன்னபோதுதான் இந்தப் படத்தின் மகிமையும் பாபாவின் ஆசிர்வாதம் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதும் எனக்குப் புரிந்தது. நான் அங்கு சென்றபோது எல்லாரும் பாபாவுடனான எனது தந்தையின் படம் பற்றி, பாபாவுடனான அவரது அனுபவம் பற்றி எல்லாம் விசாரித்தார்கள். பாபாவை நான் நேரில் சந்தித்ததில்லை. அவர்முன் வாசிக்கும் பாக்யம் கிடைக்கவில்லை. ஆனால், அவரது பூரண ஆசிர்வாதம் எனக்கு இருப்பதாக நான் உணர்கிறேன்.

துரை ஸ்ரீனிவாசன்


"இவனை மன்னித்துவிட்டேன்!"
நாராயணன் ரவிசங்கர், இப்போது சூப்பர் சிங்கரில் பாடிக் கொண்டிருக்கிறார், 2013ல், நாரதகானசபாவில் நடந்த அவரது கச்சேரி ஒன்றிற்குக் கடைசி நேரத்தில் ஆர்ட்டிஸ்ட் வரமுடியாததால் திடீரென என்னை அழைத்தார். கச்சேரி ஆரம்பிக்கும் மாலை 4.00 மணிக்குத்தான் உள்ளே நுழைதேன். நான் லேட்டாகப் போனதால் சபா செயலர் கிருஷ்ணசாமி மாமாவுக்கு என்மீது கோபம். கச்சேரிக்கு என் அம்மாவும் வந்திருந்தார். கச்சேரி முடிந்ததும் அவரிடம் கிருஷ்ணசாமி மாமா, "இவன் லேட்டாக வந்ததால் மிகவும் கோபத்தில் இருந்தேன். ஆனால், இவன் வாசித்ததைக் கேட்டதும் அந்தக் கோபம் எல்லாம் பறந்து போய்விட்டது. இவனை மன்னித்துவிட்டேன்" என்று சொன்னார். அதை மறக்க முடியாத பாராட்டாக நான் நினைக்கிறேன்.

சாய்சரண் என்ற முதியோர் இல்லம் சோழிங்கநல்லூரில் இருக்கிறது. அங்கே வருடா வருடம் நவராத்திரியின் போது நானும் எனது நண்பன் தினேஷ் குமாரும் வாசிப்போம். ஒருமுறை அங்கே நான் எலக்ட்ரிக் வயலின் வாசித்தேன். அங்கே 90 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர், கச்சேரி முடிந்ததும் எங்களை அழைத்தார். நான் வாசித்த வயலினைப் பார்க்கவேண்டும் என்றார், காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு, "ரொம்ப நன்றாக வாசிக்கிறீர்கள் இருவரும். நானும் ஒரு வயலினிஸ்ட்தான்" என்றார். "இங்கு நடந்த கச்சேரிகளிலேயே உங்கள் கச்சேரி நன்றாக இருந்தது" என்று சொல்லிப் பாராட்டி, ஆசிர்வதித்தார்.



கடல் கடந்த கச்சேரிகள்
ஆஸ்திரேலியா பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். இரண்டாவது டூர் கனடா. டாக்டர் பி. உமாசங்கர் நன்மங்கலத்தில் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பெரிய சங்கீத பரம்பரையைச் சேர்ந்தவர். டி.கே. கோவிந்தராவ் மாமாவிடம் கற்றுக் கொண்டு இப்போது பாம்பே சகோதரிகளின் மாணவராக இருக்கிறார். அவர்மூலம் எனக்கு டாக்டர் நர்த்தகி நட்ராஜ் அவர்களது அறிமுகம் கிடைத்தது. அவர் கனடா சென்றபோது உமாசங்கர் அண்ணா பாடினார். நான் வயலின் வாசித்தேன். காரைக்குடி மணியின் மாணவர் நாகை நாராயணன் அவர்கள் மிருதங்கம் வாசித்தார். 50 நாட்கள் அங்கே இருந்தோம். அதுதான் நாட்டியத்திற்காக என்று நான் சென்ற முதல் டூர்.

தில்லைஸ்தானம் சூரிய நாராயணன் மிகப்பெரிய மிருதங்க வித்வான். அவர் சொல்லி, திரு. அபிலாஷ் கிரி பிரதாப் கச்சேரிக்கு வயலின் வாசிக்க நான் தென்னாப்பிரிக்கா போனேன். டர்பனிலேயே தங்கி நிறையக் கச்சேரிகளுக்கு வாசித்தேன். அபிலாஷ் வாய்ப்பாட்டிற்கு நான் வயலின் வாசித்தேன். திரு ராஜாராம் புல்லாங்குழல் வாசித்தார். ஹரிஹர சுப்பிரமணியம் கடம், தில்லைஸ்தானம் சூரியநாராயணன் மிருதங்கம் வாசித்தார்கள். எனது தந்தையாரின் பழைய நண்பர் கார்த்திகேசு பிள்ளை தென்னாப்பிரிகாவில் இருக்கிறார். அவர் டி.என். சேஷகோபாலனின் மாணவர். நல்ல சங்கீத ஞானமுள்ளவர். அவரது கச்சேரிக்கு நான் வாசித்தது பெருமைக்குரிய விஷயம். என் அப்பாவின் நெருக்கமான நண்பர்கள் பலரை அங்கு நான் சந்தித்தேன். எனது தந்தையார் சுவாமி ஹரிதாஸ் கிரிக்கு நிறைய வாசித்திருக்கிறார். அவருடன் பல நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார்.

அதுபோல மலேசியா டூரையும் மறக்க முடியாது. லைவ் ஆர்க்கெஸ்ட்ராவுடன் நடனத்தை அவர்கள் பார்த்ததில்லை. அவர்களில் பலர் அழுது, உணர்ச்சிவசப்பட்டு எங்களிடம் பேசினார்கள். சாக்ஸபோன் ஜனார்த்தனனுடன் கச்சேரிக்காக ரீயூனியன் தீவுக்குச் சென்று பத்து நாட்கள் தங்கி வாசித்திருக்கிறேன். சாக்ஸபோன் + வயலின் காம்போவை அவர்கள் மிகவும் ரசித்தார்கள். மிகப்பழைய சர்ச் ஒன்றில் கர்நாடக இசை என்றால் என்னவென்றே தெரியாத வெளிநாட்டவர்கள், கச்சேரியை ரசித்துப் பார்த்தார்கள். முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ரம்யா ராம்நாராயணன் என்னும் நடனமணி நியூ ஜெர்சியில் இருக்கிறார். நாட்டியப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மூன்றாண்டுகளாக அவருக்காக நான் அமெரிக்கா வந்து கச்சேரி செய்கிறேன்.



ஆல்பம்
நண்பர்கள் சிலர் சேர்ந்து இசைக்குழு ஒன்று வைத்திருக்கிறோம். நான் மெயின் வயலினிஸ்ட். திலீப் ஹானர் (Delip Horner) கீ போர்டு. ஆலன் பேஸ் கிடார் வாசிக்கிறார். இருவருமே சினிமாவில் நிறைய வாசித்துள்ளனர், இசையமைத்துள்ளனர். தபலா, இண்டியன் பெர்குஷன் வாசிப்பவர் தபலா சந்திரஜித்தின் சீடர் மார்ட்டின். டிரம்ஸ் வெற்றி. இவர் டிரம்ஸ் சிவமணி சாரின் மாணவர். நாங்கள் இணைந்து ஒரு ஆல்பம் வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறோம். அது விரைவில் வெளியாகும். இவர்களுடன், நல்ல நோக்கங்களுக்கு நிதி திரட்டச் சுமார் ஐம்பது கச்சேரிகளாவது செய்திருப்பேன். திருமணங்களுக்காக, கார்ப்பரேட் நிகழ்வுகள், கர்நாடிக் ஃப்யூஷன் கச்சேரி என்று நிறையச் செய்கிறோம்.

சில படங்களுக்கு, குறும் படங்களுக்கு வாசித்திருக்கிறேன். குறும்படங்களில் சில விருதுகள் பெற்றிருக்கின்றன. தனியார் இல்லங்களிலும் வாசித்திருக்கிறேன். விரைவில் எங்கள் ஆல்பத்தை நீங்கள் கேட்கலாம்.

பிற படைப்பார்வங்கள்
நான் ஒரு வயலின் செய்திருக்கிறேன். நான் வாசிப்பது அதைத்தான். நான் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படித்திருப்பதால் இதில் ஆர்வமிருக்கிறது. (பார்க்க: படம்) அதைத் தவிர 7 தந்தி கொண்ட வயலினைச் செய்திருக்கிறேன். ஆனால் இன்னமும் அதில் சில வேலைகள் இருக்கின்றன. அது முழுமையாகவில்லை.

வயலினிற்கான எஃபெக்ட்ஸ் எல்லாம் கிடார் எஃபெக்ட்ஸில் இருந்துதான் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். வயலினிற்கான எஃபெக்ட்ஸ் என்று தனியாக இல்லை. அதில் எது வயலினுக்குத் தேவை, எதைப் போட்டால் சரியாக இருக்கும் என்பது குறித்து ஆய்வுசெய்து வருகிறேன். என்னுடைய ஆர்வங்கள் எல்லாமே இசை சார்ந்தவைதாம்.

துரை ஸ்ரீனிவாசன்


எனது குடும்பம்
அப்பா பெரிய வயலின் கலைஞர். அம்மா பரதநாட்டியக் கலைஞர். கே.ஜி. சரசாவின் மாணவி. தற்போது ஊர்மிளா சத்தியநாராயணாவிடம் 15 ஆண்டுகளாக நடன ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். அப்பா, சித்தப்பா இரண்டு பேரும் 'சிதம்பரம் சகோதரர்கள்' என்ற பெயரில் அக்காலத்தில் மிகப்பிரபலம். கிருபானந்த வாரியாருக்கு வாசித்திருக்கிறார்கள். சுவாமி ஹரிதாஸ் கிரிக்கு இறுதிநிகழ்ச்சிகள் வரை வாசித்தது அப்பாவும் சித்தப்பாவும்தான். சித்தப்பா லண்டனில் 'துரைசாமி மியூசிக் ஸ்கூல்' என்ற பெயரில் பெரிய இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அம்மாவழித் தாத்தா வி.பி. ராமதாஸ் பெரிய மிருதங்க மேதை.

அப்பாவழித் தாத்தா துரைசாமி அவர்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசையாசிரியராக இருந்தவர். அவர் வயலின் மட்டுமல்லாமல் மிருதங்கம், ஹார்மோனியம் என்று பல கருவிகளை வாசிக்கும் திறமை பெற்றவர். எனது தந்தை டிசம்பர் 10, 2001ல் ஒரு விபத்தில் காலமானார். அது அவர் இசையுலகில் முன்னேறி வந்த தருணம். அன்று அவருக்கு 'நாத ஒளி' என்ற பட்டம் வழங்க ஏற்பாடாகி இருந்தது. அவரது ஆசிர்வாதம் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அவருடைய மகன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை.

துரை ஸ்ரீனிவாசனுக்குக் கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு. எப்போது மேட்ச் நடந்தாலும் பார்த்துவிடுவாராம். முடியவில்லை என்றால் ஹை லைட்ஸ் பார்த்துவிடுவாராம். "வாரந் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை ஒரு டீமில் விளையாடி வருகிறேன். மற்றப்படி வேறெதையும் செய்ய நேரமில்லை. இசைக்கே நேரம் சரியாக இருக்கிறது" என்கிறார். அவரது இசையின் உச்சங்களைத் தொட நமது வாழ்த்துக்களைத் தெரிவித்து விடை பெறுகிறோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com