சின்ன வயிறும் பெரிய மனசும்
பார்வதி நேற்றுதான் கவனித்தாள்.

"திவ்யாவா இப்படி செய்கிறாள்..? என்னாச்சு இவளுக்கு...?"

"இதுவரை இவள் இப்படி செய்ததில்லையே..? நலம் தன் வீட்டிலேயே ஏன் இதை இவ்வளவு தயக்கத்தோடு செய்கிறாள்...?"

யோசிக்க யோசிக்கப் பார்வதிக்கு குழப்பம்தான் மிஞ்சியது. ஆனாலும், திவ்யாவிடம் எதுவும் கேட்கவில்லை. எதையும் பார்க்காதது மாதிரியே இன்றைக்கும் இருந்துவிட்டாள்.

அடுத்த நாளும் கவனித்தாள். திவ்யா நேற்று செய்ததையே மறுபடியும் செய்தாள். திவ்யாவின் இந்தச் செய்கை பார்வதிக்குப் புதிதாக மட்டுமில்லை, புரியாத புதிராகவும் இருந்தது.

"எப்போதும் எதையும் மனம்விட்டு, ஒரு தோழியிடம் பேசுவதுபோல் என்னிடம் பேசும் என் மகள் திவ்யாவா... இப்படி..!?"

என்ன செய்வதென்று பார்வதிக்கு ஒன்றும் புரியவில்லை .

மஞ்சப்பட்டு ஒரு சிறிய கிராமம்.

அதுதான் திவ்யா பிறந்த ஊர். அவள் பக்கத்து ஊரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.

தினமும் அவளாகவே எழுந்து தயாராகி விடுவாள். அவள் படிக்கும் பள்ளிக்குப் போவதாக காலை ஏழுமணிக்கெல்லாம் அரசுப் பேருந்தொன்று ஊருக்குள் வரும். அதில் ஏறி பள்ளிக்குச் செல்வாள்.

வீட்டிலிருந்து சீக்கிரமாகவே கிளம்புவதால், காலைச் சிற்றுண்டியையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விடுவாள். பள்ளியில் வைத்துதான் அதையும் சாப்பிடுவாள்.

அம்மா பார்வதிதான் திவ்யாவுக்கு தினமும் சாப்பாட்டு டப்பாவில் காலைச் சிற்றுண்டியை எடுத்து வைப்பாள். அம்மா நான்கு இட்லிகளை டப்பாவில் வைப்பாள்.

திவ்யா மறுபடியும் டப்பாவை எடுத்து, ஒரு இட்லியை மட்டும் எடுத்து, "எனக்கு இது போதும்..!" மூன்று இட்லிகளை மட்டும் டப்பாவில் எடுத்துக்கொண்டு போவாள். இதுதான் வழக்கம்.

"ஏம்மா வளர்ற புள்ளே. இப்படி மூணு இட்லி சாப்பிடலாமா..?" என்று அம்மா கேட்பாள்.

அதற்கு அவள், "மூணு இட்லி சாப்பிட்டா எவ்ளவு வளர்றேனோ... அவ்வளவு வளர்றேன்..! ஓகே.வா...?" என்று பதில் சொல்வாள்.

அப்படிச் சொல்லிப் போகிற திவ்யா ஏன் இரண்டு நாட்களாக இப்படிச் செய்கிறாள்?

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்..? திவ்யா சொல்லும்வரை அவளிடம் எதுவும் கேட்கக் கூடாதென்றுதான் மௌனமாய் இருந்தாள் பார்வதி.

எத்தனை நாள்தான் அவளே வந்து சொல்லட்டுமென்று பொறுமையாக காத்திருப்பது...?

ஆறாம் நாள் பார்வதி சமையலறையை விட்டு வெளியே வந்தாள்.

அப்போது சாப்பாட்டு டப்பாவை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் திவ்யா. பார்வதி சன்னலோரமாய் ஒதுங்கி நின்றபடி, திவ்யா என்ன செய்கிறாள் என்பதைக் கவனித்தாள்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என இட்லிகளை டப்பாவில் போட்டு அடுக்கினாள் திவ்யா. பிறகு, சிரமப்பட்டு டப்பாவை மூடினாள்.

"ஏம்மா, நான் வேணா வேற பெரிய டப்பாவா தரவா..?" என்று கேட்டுக்கொண்டே பார்வதி சமையலறைக்குள் நுழைந்தாள்.

அம்மாவின் குரல் கேட்டுச் சட்டென ஒருகணம் திடுக்கிட்டாள் திவ்யா.

அவளால் எதுவும் பேசமுடியவில்லை. உடம்பு வேறு லேசாய் வெடவெடத்தது.

"நான் ஒண்ணும் தப்பா ஏதும் சொல்லலம்மா. எத்தனை வேணும்னாலும் எடுத்துட்டுப் போ..! இது நம்ம வீடுதாம்மா!" என்று சொல்லியபடி திவ்யாவின் தோள்பட்டையை ஆறுதலாகப் பற்றினாள் பார்வதி.

"வெரி ஸாரிம்மா. நான் சொன்னா நீ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு நானாதாம்மா தப்பா நெனச்சிக்கிட்டேன். உன்கிட்டே எதையும் மறைக்கணும்னு நான் அப்படிச் செய்யலம்மா..!" என்று சொல்லும்போதே திவ்யாவின் கண்கள் கலங்கிவிட்டன.

"பரவாயில்லைடா.... செல்லம். உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா...? நீ எது செஞ்சாலும் சரியாத்தான் செய்வே. உனக்கு எப்ப என்கிட்டே சொல்லணும்னு தோணுதோ, அப்ப வந்து சொல்லு. சரியா..?" என்று பார்வதி திவ்யாவை ஆறுதல்படுத்தினாள்.

உடனே, "எனக்கு இப்பவே உங்கிட்டே சொல்லணும்னு தோணுதும்மா...!" என்றாள் திவ்யா .

"உனக்குத் தோணுச்சுன்னா உடனே சொல்லிடு...!" என்றாள் அம்மாவும்.

"அம்மா... எங்க ஸ்கூல் வாசல்ல ஒரு வயசான பாட்டி நெல்லிக்காய் விக்கிறாங்கம்மா. பாவம், அந்தப் பாட்டி தெனமும் காலையிலே எதுவும் சாப்பிடாம வர்றாங்கபோல. போன வாரம் நெல்லிக்காய் வித்துக்கிட்டிருக்கும் போதே மயக்கம்போட்டு விழுந்திட்டாங்க. நாங்கதான் போய்த் தூக்கினோம். பாட்டிக்கு பிஸ்கெட் வாங்கிக் கொடுத்தோம்..!" என்ற திவ்யா, லேசாய் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலும் தொடர்ந்தாள்.

"அந்தப் பாட்டியோட பசங்க ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். பாட்டி மட்டும்தான் தனியா இருக்காங்களாம். தெனமும் நெல்லிக்காய் வித்தா கிடைக்கிற பத்தோ, இருபதோதான் பாட்டியோட வருமானமாம். சில நாள்ல எதுவுமே விக்காமப் போனா பட்டினிதான்னு சொன்னாங்க. எனக்கு கேக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சும்மா. நான்தான் அந்தப் பாட்டிகிட்டே போயி, தெனமும் நான் எங்க வீட்டிலேர்ந்து இட்லி கொண்டுட்டு வர்றேன். நம்ம ரெண்டு பேருமே சேர்ந்து சாப்பிடலாம் பாட்டின்னு சொன்னேன். அந்தப் பாட்டியும் சரின்னு சொன்னாங்கம்மா. உன்கிட்டே அப்புறமா இதைச் சொல்லலாம்னு நான் நினைச்சேம்மா. அந்தப் பாட்டியோட சேர்ந்துதாம்மா இந்த அஞ்சு நாளா சாப்பிடுறேன். ப்ளீஸ்... ஸாரிம்மா!" என்று திவ்யா சொல்லி முடிப்பதற்குள்,

"செல்லம்... நீ செய்யிறதுதான் சரி. அப்படியே செய்ம்மா..!" என்று சாப்பாட்டு டப்பாவை புத்தகப் பைக்குள் வைத்தபடி சிரித்தாள் பார்வதி.

அப்படியே சிறுகுழந்தைபோல் தாவி, அம்மாவின் முதுகில் ஏறிக்கொண்டு... "அம்மான்னா அம்மா, தங்கமான அம்மா..!" என்று அம்மாவின் கன்னத்தைச் செல்லமாய் கிள்ளிக் கொஞ்சினாள் திவ்யா.

(நன்றி: வானம் பதிப்பகம்)

மு.முருகேஷ்

© TamilOnline.com