கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழாளர். பத்திரிகையாளர், குழந்தை இலக்கியப் படைப்பாளி, கல்வி ஆலோசகர், பதிப்பாளர் எனப் பல தளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர் மு. முருகேஷ். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கோகர்ணத்தில் பிறந்தவர். இளவயதில் வாசித்த இதழ்களும், நூலகமும் அறிதலுக்கான கதவுகளைத் திறந்துவிட்டன. பள்ளியில் கற்கும்போதே கவிதை ஆர்வம் துளிர்விட்டது. நண்பர்களுடன் 'விடியல்' என்ற தட்டச்சிதழை நடத்தினார். அதற்கு ஆதரவு பெருகவே அச்சிதழாகக் கொண்டு வந்தார். இயந்திரவியலில் பட்டயம் பெற்றாலும் ஆர்வத்தால் முதுகலை பயின்று தேர்ந்தார். இளமுனைவர் பட்டமும் பெற்றார். கவிதை ஆர்வம் ஹைக்கூ கவிதை மீதான காதலானது. மூன்றே வரிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் குறுங்கவிதை வடிவம் இவரை மிக ஈர்த்தது.
அப்துல்ரகுமான், ஈரோடு தமிழன்பன், மித்ரா, அமுதபாரதி, அறிவுமதி போன்றோரின் கவிதைகள் இவரைக் கவர்ந்தன. சிற்றிதழ்களில் ஹைக்கூ நிறைய எழுத ஆரம்பித்தார். கம்பன் கழகம், கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகளில் பங்கேற்றதன் மூலம் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரின் அறிமுகமும் நட்பும் ஏற்பட்டது.
1993ல் 'விரல் நுனியில் வானம்' என்ற தனது முதல் ஹைக்கூ நூலை வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததுடன் வண்ணதாசன், பழமலய், பாரதி கிருஷ்ணகுமார் போன்றோரின் பாராட்டும் கிடைத்தது. தொடர்ந்து, 66 கவிஞர்களின் ஹைக்கூக்களைத் தொகுத்து, 'கிண்ணம் நிறைய ஹைக்கூ' என்ற நூலைக் கொண்டுவந்தார். அதுவே தமிழின் முதலாவது ஹைக்கூ தொகுப்பு நூலாகக் கருதப்படுகிறது. இதற்குக் கிடைத்த சிறந்த வரவேற்பு மேலும் இம்மாதிரி நூல்களைத் தொகுத்து வெளியிடும் எண்ணத்தைத் தந்தது. நண்பர் மற்றும் பதிப்பாளர் பா. உதயகண்ணனுடன் இணைந்து, 500 கவிஞர்களின் தொகுப்பாக 'வேரில் பூத்த ஹைக்கூ', 'நீங்கள் கேட்ட ஹைக்கூ', 'திசையெங்கும் ஹைக்கூ', 'இனியெல்லாம் ஹைக்கூ' போன்ற நூல்களைக் கொண்டுவந்தார். 'இனிய ஹைக்கூ' எனும் கவிதை இதழைத் தொடங்கி, இளங்கவிஞர்களை ஊக்கினார்.
முருகேஷ் புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்தின் கலைக்குழுவில் இணைந்து செயல்படத் துவங்கினார். அதன் செயல்பாடுகளில் நீண்ட அனுபவம் பெற்றார். இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் தகவல் தொடர்பாளர், 'ஊர்கூடி' என்னும் இயக்கச் செய்தி இதழின் உதவியாசிரியர் எனப் பல பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றினார். இயக்கம் சார்பாகத் தமிழகம் முழுவதும் பயணித்து பல்வேறு பணிகளைச் செய்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்தும் பல சமூகப்பணிகளை முன்னெடுத்தார். கவிஞரும், எழுத்தாளருமான அ. வெண்ணிலாவின் நட்பு காதலாக முகிழ்க்க அவரை மணம் செய்துகொண்டார். அதுவரை புதுக்கோட்டையில் இருந்து தனது சமூக, கலை, இலக்கியப் பணிகளை முன்னெடுத்து வந்தவர், திருமணத்திற்குப் பின் மனைவி வசித்த வந்தவாசியை மையமாகக் கொண்டு செயல்படத் துவங்கினார்.
அறிவொளி இயக்கச் செயல்பாடுகளின்போது கிராம மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு முருகேஷுக்குக் கிடைத்தது. கிராமத்துப் பழமொழிகள், விடுகதைகள், சொலவடைகள் என நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. 'ஊர்கூடி' இதழில் அவற்றைத் தொடர்ந்து பதிந்தார். நண்பர்களின் வலியுறுத்தலால் அது 'மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்' என்ற தலைப்பில் நூலானது. அந்த நூலில் குழந்தைகளின் கைவண்ணம் வெளிப்படும்படி, அதில் அவர்களே எழுதிப் பார்க்கும் வகையில் புதுமையாய் வடிவமைத்திருந்தார் முருகேஷ். அந்த நூலுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதுவரை அந்நூல் நான்கு பதிப்புகளுக்கு மேல் கண்டுள்ளது.
மக்கள் பள்ளி இயக்ககத்தின் மாநிலக் கருத்தாளராகப் பணியாற்றிய அனுபவமும் முருகேஷுக்கு உண்டு. தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - யுனிசெஃப் இணைந்து செயல்படுத்திய வகுப்புகளுக்குப் பின் திட்டப்பணியில் (Afterschool Programme) மாநிலப் பயிற்றுநராகப் பணிபுரிந்தார். தொடர்ந்து யுரேகா கல்வி இயக்கத்தில் 2014வரை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். இவற்றை இவரது வாழ்வின் திருப்புமுனையான காலகட்டம் எனலாம். குழந்தைகளுடன் நெருங்கிப் பணியாற்ற முடிந்ததுடன், குழந்தைகளைப் பற்றி, அவர்களது அக உலகை, அவர்கள் எண்ணங்கள், ஏக்கங்கள், விருப்பங்கள் பற்றி மிக விரிவாக இவரால் அறிந்துகொள்ள முடிந்தது. பிற்காலத்தில் பல்வேறு குழந்தைகளுக்கான படைப்புகள் வெளிவர இந்த அனுபவங்கள் உதவின.
முருகேஷ் செய்திருக்கும் கல்விப் பணிகளில் குறிப்பிடத் தக்கவையாக சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்றதையும், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புப் பாட நூல்கள் உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்ததையும் சொல்லலாம். ஒன்றாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் வெளியாகியிருந்த 'யானை வருது டோய்' பாடலை மிகவும் பாராட்டி, "குழந்தைகளுக்கான பாடல்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று கலைஞர் மு. கருணாநிதி கூறியதை தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறார் முருகேஷ். கிராமப்புறக் குழந்தைகளின் தமிழ் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு பக்க படக்கதை அட்டைகளைத் தயாரித்து அளித்திருக்கிறார். இவரது 'குழந்தைகள் சிறுகதைகள்' எனும் நூல், தமிழக அரசின் 'புத்தகப் பூங்கொத்து' திட்டத்தில் தேர்வானதுடன், தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரி, சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஆகியவற்றின் பாடத்திட்டத்திங்களில் இடம்பெற்றுள்ளன.
2009ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற 'உலக ஹைக்கூ கிளப்' மாநாட்டில் தமிழகப் பிரதிநிதியாக பங்கேற்றிருக்கிறார். அம்மாநாட்டில் நடைபெற்ற உலகு தழுவிய பன்மொழிக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றார். இவரது ஹைக்கூக்கள் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கவிதைகள் 'நிலா முத்தம்' எனும் பெயரில் தொகுக்கப்பட்டு தனிநூலாகவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது. இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளிலுள்ள இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரில் சென்று உரையாற்றியிருக்கிறார். சாகித்திய அகாதமி ஏற்பாட்டில் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், கர்நாடகாவின் மைசூரு, ஆந்திரத்தின் விஜயவாடா ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார்.
குழந்தைகளுக்கான இவரது படைப்புகள் 'துளிர்', 'வண்ணக் கதிர் - குழந்தைகள் பூங்கா', 'வெற்றிப்பாதை', 'பென்சில்', 'தி இந்து - மாயாபஜார்' போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. 'இருளில் மறையும் நிழல்' இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. 'தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்' என்னும் இவரது கட்டுரை நூல் முக்கியமானது. தமிழில் கடந்த ஒரு நூற்றாண்டில் ஹைக்கூ குறித்த அனைத்துத் தரவுகளும் ஒரு ஆவணமாகத் தொகுக்கப்பட்டு இதில் பதியப்பட்டுள்ளது. 'குழந்தைகள் உலகம் – உள்ளே வெளியே' என்பது குழந்தைகளின் அகவுலகம் சார்ந்த கட்டுரை நூல். இதற்கு 2012ம் ஆண்டில், திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் 'சிறந்த சிறுவர் இலக்கிய நூல் விருது' கிடைத்தது. இதே நூலுக்கு தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத்தின் 'சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது' கிடைத்திருக்கிறது. புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய 'ஹைக்கூ வித்தகர்', புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் வழங்கிய 'செம்பணிச் சிகரம்', உலகச் சான்றோர் சங்கம் வழங்கிய 'இலக்கியச் சான்றோர்' , 'ஹைக்கூ சுடர்' உள்படப் பல விருதுகளை முருகேஷ் பெற்றுள்ளார்.
இவரது 'ஒல்லி மல்லி குண்டு கில்லி' என்ற சிறுவர் நூல், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 'தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது', ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் 'சிறந்த சிறுவர் நூல் விருது', புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் சிறந்த சிறுவர் நூலுக்கான பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளது. 'தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்' சிறுவர் கதை நூலுக்குக் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் சிறப்புப் பரிசு, 'கவிதை உறவு' அமைப்பின் சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசு போன்றவை வழங்கபட்டுள்ளன. இந்த நூலின் சிறப்பு கதைகளுக்கான ஓவியங்களைப் பள்ளி மாணவர்களே வரைந்திருப்பதுதான். 'பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும்' நூலுக்கு 2015ம் ஆண்டின், கு. சின்னப்பபாரதி குழந்தை இலக்கியப் பரிசு கிடைத்தது. 'நல்லமுத்து பாட்டிக்கு நாவல் மரம் சொன்ன கதை' குழந்தைகளால் மிகவும் விரும்பப்பட்ட சிறார் கதை நூலாகும். இவரது 'உயிர்க்குரல்' திருவண்ணாமலை மாவட்ட எக்ஸ்னோராவின் சிறந்த சுற்றுச்சூழல் நூலுக்கான 'பசுமை விருது' பெற்றுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய கவிதை நூலுக்கான விருதை இதுவரை மூன்று முறை பெற்றிருக்கிறார் முருகேஷ். இவரது 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' நூலின் ஒவ்வொரு கதைக்கும் தேவக்கோட்டை டி. பிரிட்டோ பள்ளி மாணவர்கள் படம் வரைந்திருக்கிறார்கள். இந்த நூலுக்கு சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான திருப்பூர் இலக்கிய விருது கிடைத்துள்ளது. தனது ஒவ்வொரு சிறார் நூலையும் ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் ஓவியங்களோடு கொணர்வதைக் கொள்கையாக வைத்திருக்கிறார் முருகேஷ். சிறுவர்களுக்கான 10 கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார்.
"கவிதை, கதை, கட்டுரை, விமர்சனம் எனப் படைப்பிலக்கியத்தின் பல தளங்களில் நான் இயங்கி வந்தாலும், குழந்தைகளுக்கு எழுதுவதிலுள்ள மனநிறைவை வேறெந்தப் படைப்பும் எனக்குத் தரவில்லை என்பதே உண்மை" என்கிறார் முருகேஷ். "நான் எழுதியுள்ள குழந்தைகளுக்கான படைப்புகள் என்பது, குழந்தைகளிடமிருந்து நான் கற்றவைகளில் கைத்துளி அளவே" என்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் 'செல்வன் கார்க்கி கவிதை விரு'தினை இரண்டுமுறை வழங்கிச் சிறப்பித்துள்ளது. கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது 'தலைகீழாகப் பார்க்கிறது வானம்' என்ற நூலுக்காகப் பெற்றிருக்கிறார். 2014ல் நெய்வேலி புத்தக் காட்சியில் அவ்வாண்டின் 'சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது' இவருக்கு வழங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் நூலக வளர்ச்சிக்காகச் சிறந்த முறையில் செயல்படும் நூலக வாசகர் வட்டத்திற்கு 'நூலக ஆர்வலர் விருது' வழங்கப்படும். அந்த வகையில் வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர் மு. முருகேஷிற்கு தமிழக அரசின் பொதுநூலகத் துறை சார்பில் 'நூலக ஆர்வலர் விருது - 2018' வழங்கப்பட்டது. 'இலக்கிய வீதி' அமைப்பின் 'அன்னம் விருது', குவைத் நாட்டில் இயங்கும் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கத்தின் 'குறுங்கவிச் செல்வர்' விருது, கவிப்பேராசான் மீரா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
சமீபத்திய மகுடமாக, கடலூர் தேசியப் புத்தகக் கண்காட்சியில் இவருக்கு 2019ன் சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை வாரிக் குவித்துவரும் முருகேஷ், இதுவரை கிட்டத்தட்ட 50 கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கிய, விமர்சன நூல்களை எழுதி உள்ளார். வந்தவாசியில் 'அகநி' பதிப்பகம் என்பதை நிறுவி அதன் மூலம் கருத்தாழமிக்க முக்கியமான நூல்களை வெளியிட்டு வருகிறார். வந்தவாசி அரசுக் கிளைநூலகத்தின் நூலக வாசகர் வட்டச் செயலாளர், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட நிர்வகித்து வரும் முருகேஷ், பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
அரவிந்த் |