அரங்கேற்றம்: கீர்த்தனா & பிரார்த்தனா
ஆகஸ்ட் 3, 2019 அன்று, K.S.U. நடன அரங்கத்தில், வால்டன் உயர்நிலைப்பள்ளி மாணவிகளான கீர்த்தனா சத்யா மற்றும் பிரார்த்தனா சத்யாவின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. அரங்கில் புராதன வேலைப்பாடுகள் மிக்க கலைப்பொருட்களும், வானவில்லின் வர்ணங்கள் இழைத்த பட்டுக்களும் மலர்க் கோலங்களும் தேவலோகத்தில் இருக்கிறோமோ என்று மிரள வைத்தன.

தில்லைக்கூத்தன் நடராஜனுக்கு அஞ்சலி செலுத்திச் சலங்கை பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. புஷ்பாஞ்சலியை அடுத்து தேவியைப் போற்றிய நடனம், லயத்தையும், முக பாவத்தையும் கனகச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது.

சிவனைப் போற்றிய வர்ணம். தாளக்கட்டுடன் மின்னல்கொடி சகோதரிகள் ஆட, கைதட்டல் அரங்கம் அதிர்ந்தது.

பிரார்த்தனாவின் "திகட்டும்வரை வெண்ணை" என்ற பதத்துக்கு ஆடிய தனி நடனம், கிருஷ்ணனின் சுட்டிக் குறும்புகளை கண்முன் மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டியது. இருவருமாக ஆடிய 'ஆனந்த நடம் ஆடும் ஈசன்' கிருதி, தாளமும் லயமும் கைகோர்த்து நெஞ்சைக் கவர்ந்தது. கீர்த்தனா ஆடிய "ஜகதோதாரணா" தனிநடனம், யசோதை கிருஷ்ணனைச் சீராட்டி, பாராட்டி, திருஷ்டி எடுத்து கொஞ்சிக் கொஞ்சித் தாய்மையை வெளிப்படுத்திய அழகைச் சித்திரித்தது. தில்லானா முத்தாய்ப்பாய்க் களைகட்ட, மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

காயத்ரி வசந்தின் பாட்டும், காயத்ரி சுப்ரமணியம் (நிறுவனர், K.A. Academy of Indian Dance & Music) நட்டுவாங்கமும் மிகச் சிறப்பு. பக்க வாத்தியமாக கே. சுரேஷ் (மிருதங்கம்), சி.வி. சுப்பிரமணியன் (வயலின்), பிரசாந்த் கொல்லூர் (புல்லாங்குழல்), மாஸ்டர் அர்ச்சித் சுரேஷ் (கஞ்சிரா) ஆகியோர் நிகழ்ச்சியைக் களைகட்ட வைத்தனர். ஹம்சிகா ரமணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு அன்பளிப்பாக வந்த $6,000 தொகை, 'உதவும் கரங்கள்' என்ற இந்தியத் தொண்டு நிறுவனத்திற்கும், 'Access Life America' என்ற அறக்கட்டளைக்கும் பிரித்து வழங்கப்பட்டது

NRI Pulse நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான வீணா ராவ் சிறப்பு விருந்தினராக வந்திருந்து பாராட்டிப் பேசினார். காயத்ரி சுப்பிரமணியமும் அவர்களின் குரு பத்மினி ராதாகிருஷ்ணனும் நடன வடிவமைத்திருந்தனர்.

சுமங்கலி,
மேரியட்டா, ஜார்ஜியா

© TamilOnline.com