செப்டம்பர் 7, 2019 அன்று, மைத்ரி நாட்யாலயா, குரு ஷிர்ணி காந்தின் மாணவியும் மல்லிக் மமிடிபகா - ரேகாவின் புதல்வியுமான, ஷ்ரீயா மமிடிபகாவின் குச்சுப்புடி நடன அரங்கேற்றம் சான்ட க்ளாராவில் உள்ள மிஷன் சிட்டி சென்டரில் நடைபெற்றது.
திரு. பாலமுரளி கிருஷ்ணாவின் ஆரபி ராகத்தில் அமைந்த ஹனுமன், விநாயகர், கிருஷ்ணரைப் போற்றும் திரிதேவ ஸ்துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின் தன்யாசியில் சிவபெருமானைப் போற்றும் "சிவாய நமோ" பாடலுக்கு ஷ்ரீயாவின் நடனம் நுணுக்கமான பாத வேலைகளுடன் விறுவிறுப்பாக அமைந்தது. குரு வேம்பட்டி சின்ன சத்யம் அவர்களின் நடன அமைப்பில் 'கோவர்த்தன கிரிதரா' என்ற பாரம்பரிய தரங்கம் வெகு அழகு.
இடைவேளைக்குப் பின் ஷ்ரீயா ஆடிய பிரஹலாத பட்டாபிஷேகம் மற்றும் நரசிம்ம அவதார நடனங்கள் மனதைக் கவர்ந்தன. சைந்தவி ராகத்தில் 'ஜாவாளி சகஸமலு' நடனம் மிக நேர்த்தி. நிறைவுப் பகுதியாக பஜஸ்வ ஸ்ரீ திரிபுரசுந்தரி, தில்லானா மற்றும் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம் அமைந்தன. நடன இயக்குநர் திருமதி ஷிர்ணி காந்த் 'நாட்ய மைத்ரி' என்னும் பட்டத்தை ஷ்ரீயாவிற்கு வழங்கினார்.
குரு ஷிர்ணி காந்த் (நட்டுவாங்கம்), டாக்டர் எஸ். மாதவன் (வாய்ப்பாட்டு), அஸ்வின் கிருஷ்ணகுமார் (மிருதங்கம்), நயனதாரா நரசிம்மன் (வயலின்) ஆகியோரின் பக்கவாத்தியத் துணையுடன் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. |