திறமைகள் பல பெற்றிருக்கும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் இது. வீட்டுக்குச் சுமையாக இருக்கும் வயதான முதியவர்களை 'தலைக்கு ஊத்தல்' என்ற வழக்கத்தின்படி, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்தும், இளநீர் கொடுத்தும், ஜில்லென்ற தண்ணீரில் குளிக்க வைத்தும் இறக்க வைப்பது சில இடங்களில் வழக்கமாக உள்ளது. தன் தந்தையின் வேலை தனக்குக் கிடைக்க, அவர் இறக்க வேண்டும் என்று நினைக்கிறான் மகன். எவ்வளவோ உழைத்தும் கூட பாசம் காட்டாத, குடும்பத்தினரின் அன்பு கிடைக்காத தந்தை அதனை ஏற்றுக்கொண்டு, குடும்பத்திற்காகத் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார். இதுதான் படத்தின் கதை.
தந்தையாக எம்.எஸ். பாஸ்கர் நடித்திருக்கிறார். மலையாள எழுத்தாளர் சேதுவின் 'அடையாளங்கள்' என்ற நாவலின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது இப்படம். வேணு நாயர் இயக்குகிறார். "வீட்டில் மூத்தவர்களை மதிப்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஆனால் அது வேகமாக மாறி வருகிறது. தேவை முடிந்தவுடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் மனித உறவுகளுக்குள்ளும் வந்துவிட்டது. குடும்பத்தில் பணப் பிரச்சினை வரும்போது, குழந்தைகள் கூட வீதியில் விடப்படுகிறார்கள். இந்தத் தூக்கிப்போடும் கலாச்சாரம், அதிகரித்து வரும் நுகர்வோர் கலாச்சாரத்தின் தாக்கத்தால் உண்டானதே ஜலசமாதி திரைப்படம். பார்வையாளர்களுக்குப் பிரச்சனையின் உண்மைத் தன்மையை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காகவே இதில் கமர்ஷியல் விஷயங்கள் சேர்க்கப்படவில்லை" என்கிறார் நாயர். மலையாளத்தில் உருவாகி வரும் இப்படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.
அரவிந்த் |