குரு தாமே பிரம்மமாக இருக்கவேண்டும்
ஞானத்தேடல் கொண்ட ஒருவன் தனது அண்ணனிடம் தன்னை ரட்சிக்கும் மந்திர தீட்சை ஒன்றைத் தந்து, ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்கி வைக்கும்படிக் கேட்டுக்கொண்டான். "உறவினருக்கு உபதேசிப்பது கடினம், அதிலும் சொந்தத் தம்பிக்கு உபதேசிப்பது மிகவும் கடினம். ஆகவே, சாட்சாத் பரமசிவனே குருவடிவில் வந்தவராகிய தட்சிணாமூர்த்தியிடம் போய்க் கேள்" என்று அண்ணன் கூறினார். அவரை எப்படி அடையாளம் காண்பது என்று தம்பி கேட்டான். "எவர் ஒருவர் எல்லா மனிதர்களையும், எல்லாப் பொருள்களையும் சமமாகக் கருதுகிறாரோ அவரே நான் கூறும் குரு" என்றார் அண்ணன். தம்பி அத்தகைய குருவைத் தேடிக் கிளம்பினான்.

அவன் தன் கையில் ஒரு தங்கமோதிரத்தை அணிந்துகொண்டு ஒவ்வொரு ஆச்ரமமாகப் போனான். சிலர் அதைப் பார்த்துவிட்டுத் தங்கம் என்றனர். மற்றவர்கள் அதைப் பித்தளை, தாமிரம், ஈயம், வேறு உலோகக் கலவை என்று பலவாறாகக் கூறினர். அவன் போய்க்கொண்டே இருந்தான். சுடர்வீசும் கண்கள் கொண்ட இளந்துறவி ஒருவரை அவன் பார்த்தான். அவரிடம் அவன் "இது தங்கமா?" என்று கேட்டான். "ஆமாம்" என்றார் அவர். "இது பித்தளை அல்லவா?" என்றான். அதற்கு "ஆமாம், இது பித்தளைதான்" என்றார். அவன் அதை என்னவெனக் கூறினாலும் அவர் அப்படியே ஏற்றுக்கொண்டார். ஆகவே அந்தச் சாது தட்சிணாமூர்த்தியே என இவன் முடிவுசெய்தான். மனதின் சமநிலை ஏகத்துவத்தை உணர்வதால் ஏற்படுகிறதே அன்றி வேறு வகையில் அல்ல.

ஒருமுறை சனத்குமாரர் தீவிரமாகத் தவம் செய்துகொண்டிருந்த போது அவர்முன் கடவுள் தோன்றினார். "உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்றார் கடவுள். "தாங்கள் இப்போது எனது விருந்தினர். இங்கே நான் சில காலமாக இருக்கிறேன்; இவ்விடத்துக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் எது வேண்டுமானாலும் கேட்கலாம். விருந்தினர் கேட்பதை நான் கொடுத்தே தீரவேண்டும்" என்றார் சனத்குமாரர்.

பிரம்மத்தை அறிந்ததனால் அவர் பிரம்மமாகவே ஆகிவிட்டார். அதனால் அவரால் கடவுளைத் தனக்குச் சமமாகக் கருதிப் பேச முடிந்தது. "நான் நீயே" என்கிற நிலைமையை அவர் எட்டியிருந்தார். அவர் அப்படிப் பேசியதில் ஆச்சரியமில்லை. 'அவன்' எப்போதும் இருக்கிறான். 'அவனிடமிருந்து' பிரிந்த பின்னர்தான் ஜீவன் 'நான்' ஆகிறான்.

நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2018

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com