தெரியுமா?: UCB: தமிழ்த் துறைப் பேராசிரியர் வாசுகி கைலாசம்
பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியக் கல்வித்துறையில் தமிழியல் கல்விக்கான புதிய பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார் முனைவர் வாசுகி கைலாசம். சென்னையைச் சேர்ந்த இவர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

உலக இலக்கிய விவாதங்களில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் படைக்கப்படும் தற்காலத் தமிழிலக்கியங்களின் அழகியல் சார்ந்த ஆய்வு மேற்கொள்வதில் ஈடுபாடுடைய இவர், பெர்க்கிலிப் பல்கலைக் கழகத்தில் தம் ஆய்வினை விரிவுபடுத்துவதிலும் மாணவர்களைத் தமிழிலக்கிய ஆய்வுகளில் ஈடுபடுத்துவதிலும் ஆர்வமாக உள்ளார்.

"இளவயதில் இப்பொறுப்பேற்றுள்ள தமிழரான முனைவர் வாசுகி கைலாசம் அவர்களோடு இணைந்து செயல்படுவதில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழிலக்கியம் குறித்த அவருடைய பரந்துபட்ட பார்வை, பெர்க்கிலிப் பல்கலைக்கழகத்தில் தமிழியல் ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும்" என்கிறார் இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்பித்துவரும் முனைவர் பாரதி சங்கர ராஜுலு.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com