அமெரிக்காவிற்கு முதன்முதலாக வந்த ஜானகிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து வியப்புத் தாங்க முடியவில்லை. கணவர் இறந்து இரண்டு மூன்று வருடங்களாக அய்யம்பேட்டையில் தனியாக இருந்தவளை, பிள்ளை குமார் கட்டாயப்படுத்தி அமெரிக்கா அழைத்து வந்திருந்தான்.
பாத்திரம் கழுவ மிஷின், துணி துவைக்க மிஷின், எப்போது வேண்டுமானாலும் குழாயில் வெந்நீர், அடேயப்பா! பிள்ளை நல்ல வசதியாக இருப்பது கண்டு பூரித்துப் போனாள். தனி வீடு. சுற்றிலும் தோட்டம். இரண்டு பேரும் ஆபீஸ் போகக் கார். எல்லாம் பார்க்கத் திருப்தியாக, சந்தோஷமாக இருந்தது. வந்து இரண்டு, மூன்று நாள் பிள்ளையும், மருமகளும் அம்மாவுடன் வீட்டிலேயே வேலை பார்த்தனர். திங்கட்கிழமை ஆபீஸ் கிளம்பினார்கள்.
"ஐயோ தனியா நான் இருந்ததே இல்லையே! அக்கம் பக்கம் நம் பாஷை பேசுறவாளுமில்லை. இந்தியாவில் யாராவது வருவதும் போவதும் தனிமையே தெரியாது" எனப் புலம்பினாள்.
குமாரும், "ஏன் இந்தியாவிலும் எல்லாரும் தனியாதானே இருக்காங்க. அவங்க வேலைக்குப் போக வேண்டாமா? கூடவே உட்கார்ந்து இருக்க முடியுமா? டிவி இருக்கு. ஃபோன் இருக்கு. புக்ஸ் இருக்கு. இரும்மா தைரியமா" எனக் கூறினான். மருமகளும், "ஆமாம் அத்தை. ஒன்றும் பயமில்லை. பெல் அடிச்சாத் திறக்காதீங்க. திருட்டு பயமா இருக்கு. ஜாக்கிரதையா இருங்க" எனத் தைரியம் சொல்லி, எப்படி மைக்ரோவேவ், கேஸ் எல்லாம் பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
அவர்கள் போய்க் கொஞ்ச நேரமானது. ஜானகி ஒரு பயத்துடனே குளிக்கக் கிளம்பினாள். ஏதோ பேச்சுக்குரல். உடனே படபடப்பு. யாராக இருக்கும். கதவெல்லாம் தொட்டுப் பார்த்தாள். எல்லாம் மூடித்தான் இருந்தன. சோபாவில் போய் உட்கார்ந்தாள். பேச்சு நிற்கவே இல்லை. ஜன்னல் பக்கம் போய்ப் பார்த்தாள். யாருமில்லை. ஒன்றும் புரியவில்லை. வேர்த்துக் கொட்டியது.
சட்டென்று ஃபோனை எடுத்து குமார் நம்பருக்கு நடுங்கும் விரல்களால் டயல் செய்தாள். "குமார் என்னமோ தெரியல. யாரோ வீட்டுக்குள்ள பேசிக்கிட்டே இருக்காங்க. ஆனா, யாரையும் காணோம். எனக்கு ஒரு சந்தேகம். நீ வீடு புதுசா வாங்கினியே தவிர ஹோமம் பூஜை எதுவும் செய்யலை. ஏதோ கெட்ட ஆவி இருக்கும்போல இருக்கு. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு" என அழுகை பொங்கக் கூறினாள்.
"எதாவது உளறாதே! எல்லாத்துக்கும் உனக்கு பயம். ஆங்.. சொல்ல மறந்துட்டேன். நீ நேரே மாடியில என் ஆஃபீஸ் ரூமுக்கு போ. அங்கே சுவரில் ஒரு சின்ன சுவிட்ச் மாதிரி இருக்கும். கிட்ட போய் நின்னு, 'அலெக்ஸா ஸ்டாப்' அப்பிடீன்னு ஒரு குரல் கொடு. பேச்சு நின்னுடும். நான் அவசரத்துல ஆஃப் பண்ணாம வந்துட்டேன்" என்று கூறவும், மாடிக்குப் போனாள் ஜானகி. அங்கேதான் அமானுஷ்யக் குரல்! பிள்ளை சொன்ன மாதிரியே 'அலெக்ஸா ஸ்டாப்' எனக் கத்திக் கூறினாள். உடனே பேச்சு நின்றுவிட்டது. 'அப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய குமார், "அம்மா ரொம்ப பயந்துட்டயா? இந்த அலெக்ஸா இருக்கே, நாம சொன்னா பாடும். மழை வருமான்னு சொல்லும். நியூஸ் சொல்லும். வீட்டு லைட் எல்லாம்கூட கண்ட்ரோல் செய்யும். வர வர இன்னும் அட்வான்ஸ் ஆய்க்கிட்டு வருதுன்னு சொல்றாங்க. நீ நல்லா பயந்தே போ" என்றான்.
'யார் சொன்னது அமெரிக்காவில பேச்சுத் துணைக்கு ஆளில்லேன்னு' என்று தனக்குள்ளே சொல்லிச் சிரித்துக்கொண்டாள் ஜானகி.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி |