'தென்றல்' இதழின் ஜூன் 2005 இதழைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.
முன்னோடி 'இரேனியஸ் அடிகள்' என்ற கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் படித்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்த கிறித்துவப் பாதியார்களின் சிறப்பு தெரியும். அந்தக் கட்டுரையை எழுதியவர் யார் என்பதைத் தாங்கள் வெளியிடவில்லை. அதை எழுதியவரின் முயற்சி பாராட்டுக்குரியது.
நாங்கள் சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முன்பு மே 7, 2005 தினகரன் இதழில் 'செருமானியத் தமிழ்ச் சான்றோன் இரேனியசு' என்ற கட்டுரை வெளிவந்தது. அதை எழுதியவர் முனைவர் பா. வளன் அரசு.
பா. வளன் அரசு எழுதிய கட்டுரையும், 'தென்றல்' இதழில் வந்த கட்டுரையும் ஒரே மாதிரியாக இருந்தது. அதை எழுதியவர் மேற்படிக் கட்டுரையில் இருந்து எடுத்து எழுதியிருந்தால் வளன் அரசு அவர்களுக்கு நன்றி சொல்லி வெளியிட்டிருக்க வேண்டும். அது நல்ல மரபு.
நான் பார்த்த முனைவர் பா. வளன் அரசு அவர்களின் கட்டுரையை 'தினகரன்' பத்திரிக்கையில் வந்ததை அப்படியே தங்கள் பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன்.
ஞா. இராமானுஜம், கேன்டன், மிச்சிகன்
******
தென்றல், மே மாதச் சிறுகதை ஒன்றில் கற்பகம் அவர்கள் எழுதியுள்ள 'வந்தவள்' என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதையில் எனக்கு அதன் முடிவு புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.
''எங்களுக்குள் இத்தனை ஆண்டுகளில் எந்த ஒளிவு மறைவும் இல்லை' என்று ரவியிடம் சொல்லும் ரகு உண்மையில் கற்பகம் ஏன் தன் கணவனைப் பிரிந்தாள் என்பதற்கான காரணத்தையோ, ரவி நம்புவதைப் போலத் தன் குழந்தைகளோடு தொடர்பு வைத்திருப்பாள் என்பதையோ ரகு அறிந்திருக்கவில்லையா? கருத்தில் முரண்பாடு இருப்பதுபோல் தெரிகிறது.
டாக்டர் அலர்மேலு ரிஷி, சான் ஓஸே, கலி.
******
தென்றல் ஜூன், 2005 இதழில் வெளிவந்த சங்கர நேத்ராலாயாவின் டாக்டர் பத்ரிநாத் அவர்களது பேட்டியும் அவர்கள் நிறுவனத்தின் உன்னத நோக்கமும் மிகவும் போற்றத்தக்கவை. அவரது தன்னலமற்ற சேவை உன்னதமானது. பேட்டியை வெளியிட்டமைக்கு நன்றி.
திருமதி சுபா பேரி அவர்களது பேட்டி, அமெரிக்கா வாழ் தமிழர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். 'கல்வியே விடுதலைக்கு வழி' என்ற அவரது கூற்று சிந்திக்கத்தக்கது.
முன்னோடி என்ற பகுதியில் இரேனியஸ் அடிகள் என்பவர் குறித்த கட்டுரையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு தீவீர மதப் பிரசாரகரை, இந்து மதத்தை மிகவும் கீழ்த்தரமாக இகழ்ந்து தனது மதத்தினை வெறியுடன் பரப்பிய ஒரு மத போதகரை முன்னோடி என்று போற்றுவது தென்றலின் மதச்சார்பின்மைக்கு ஏற்கத்தக்கதல்ல. தன் மதத்தை ஏழை எளிய அப்பாவி மக்களிடம் பரப்பும் நோக்கில் மட்டுமே தமிழைக் கற்றுக் கொண்டு அதைக் கொண்டு திருநெல்வேலி ஜில்லாவின் பெரும் பகுதிகளில் மதம் மாற்றிய ஒரு பிரசாரகரை ஒரு பெரிய சமூக சீர்த்திருத்தவாதி போல முன்னிறுத்தியதைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தேன்.
தன்னலமில்லாமல், வேறு எவ்வித எதிர் பார்ப்பும் இல்லாமல் தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்ட அறிஞர்களைத் தாராளமாக முன்னோடி என்று அழையுங்கள். இவரைப் போன்ற மத மாற்ற முன்னோடிகளை 'முன்னோடி' என்று கட்டுரை எழுதித் தென்றலின் தரத்தைத் தயவு செய்து தாழ்த்தி விடாதீர்கள்.
ராஜன் சடகோபன் ·ப்ரீமாண்ட், (கலி.)
******
இந்த அந்நிய மண்ணில் வசிக்கும் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்யும் சேவைக்காக உங்களுக்கும் தென்றல் குழுவினருக்கும் நன்றிகள் பல.
தமிழ் இலக்கியத்தின் பல கூறுகளையும், தமிழகத்தின் நடப்புகளையும் வெகு அழகாக இங்கு கொணர்ந்து தருகிறது தென்றல். இந்தியக் கோவில்களின் வரலாறு குறித்த தொடர் ஒன்றைத் தொடங்குவது தென்றலுக்கு மேலும் பெருமை சேர்க்கும்.
வி. எஸ். கோவிந்தராஜன், இண்டியானா
******
ஜூன் தென்றலில் மெரில் லின்ச் சுபா பேரியுடன் உரையாடல் மிக அருமை. தமிழர்க்கும் - மேலாக இந்தியர் அனைவர்க்கும் - பெருமை சேர்க்கும் விதமாக மெரில் லின்ச் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் சுபா பேரியின் ஒவ்வொரு பதிலிலும் பணி சார்ந்த திறமை, மனித நேயம், பணியாற்றும் நிறுவனம் - குடும்பம் - சமுதாயம் மற்றும் நாட்டின் மீது நேசம் ஆகியவை வெளிப்பட்டன. "நிதி நிறுவனங்கள் சேமிப்பைச் சொல்லித் தரும்போது எவ்வாறு அறச் செயல்களைச் செய்யலாம் என்பதையும் சொல்லித் தர வேண்டும்" என்ற அவரது கருத்து, மிதமிஞ்சிய நிதியைக் கையாளும் தனிநபர் மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் விடுத்த ஒரு அறைகூவலாகும்.
சென்னிமலை பி. சண்முகம், நியூயார்க். |