பெரிய சார்!
"பொிய சார்" இன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார்! இந்த மனநிலையில் என்னால் எதுவும் எழுத இயலவில்லை... ஆனாலும் முயல்கிறேன்.

1960கள். ராமநாதபுரம் மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குத் தென்கிழக்கில் சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள சிலுக்கபட்டி குக்கிராமத்துக்குப் பெரிய சார் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வந்தார். அதுவரை ஆசிரியரே இல்லாத பள்ளி அது. சுமார் 36 ஆண்டுகள் அதே பள்ளியில் பணிபுரிந்தார். பணி ஓய்வுக்காலத்திற்குள், மேல்நிலைப் பள்ளி கட்டுவதற்காகத் தன் சொந்த நிலத்தையே தானமாகக் கொடுத்தார். ஒரு நல்லாசிரியர் விருதுகூட பெறாத மாசற்ற மாமனிதர், ஆகச்சிறந்த ஆசிரியர் பொிய சார் (1936 - 2019).

பெரிய சாருக்கு அருப்புக்கோட்டைக்கு அருகில் திருவரிந்தாள்புரம் சொந்த ஊர். செழிப்பான கிராமம். விவசாயக்குடும்பம். குழந்தைகளைச் சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு மனைவியோடு வந்தார். இடதுசாரி இயக்கத்தில் இருந்த அப்பாவும் அவரும் நான் பிறக்குமுன்பே ஆகச்சிறந்த சினேகிதர்கள். அப்பாவை அவர் "சீத்தா" என அன்போடு அழைப்பார். பள்ளியில் சேர்ந்தபின் என்னை அவர் அழைத்த பெயர் "தக்காளி". இன்றளவும் என் பள்ளி நண்பர்கள், உறவினர்கள் அழைக்கும் பெயர் தக்காளிதான். நான் கொஞ்சம் கொழுகொழுவென, சிவப்பாக இருப்பேனாம். இது பெரிய சார் சொன்னது.

அவருடைய முழு முயற்சியால், எட்டாம் வகுப்புவரை அனைத்து வகுப்புக்களுக்கும் ஆசிரியர்கள் வந்துவிட்டனர். காமராசரின் மதிய உணவுச் சமையலுக்கு ஒருவர், தோட்டம் மற்றும் விவசாயம் பற்றிக் கற்றுக்கொடுக்க ஒருவர் - இப்படியாக மொத்தம் பத்து ஆசிரியர்கள் சிலுக்கபட்டி தொடக்கப் பள்ளியில். மாதமொருமுறை பள்ளியாளுமன்றம் நடைபெறும். இது நம் பாராளுமன்ற சட்ட திட்டங்கள், நாட்டின் ஆட்சிமுறை, மந்திரிசபை, மக்களவை ஆகியவை பற்றிய புரிதலுக்கு ஒத்திகை. தோ்தல் நடக்கும்போதெல்லாம் ஓட்டுப்பெட்டியைத் திருடிக்கொண்டு ஓடிப்போகும் வேலை என்னுடையது. பிறகு சில காவல்துறை அதிகாரிகளால் நான் கைது செய்யப்படுவேன்.

எனக்கு முதலில் கிடைத்த பதவி சுகாதார அமைச்சர். பள்ளி வளாகத்தில் கிடக்கும் குப்பை, நாய் மற்றும் கோழி எச்சங்கள், சுவரில் இருக்கும் கரிக்கோடு, தண்ணீர்க் குழாயருகில் இருக்கும் பாசி எல்லாவற்றையும் பார்த்துச் சுத்தம் செய்வது என் வேலை. எனக்குப் பிடிக்காத மாணவர்களை அழைத்துச் சுத்தம் செய்யவைத்துப் பழி தீர்த்துக் கொள்வேன். மறுத்தால் ஒரு பைசா, இரண்டு பைசா அபராதம். இவற்றால் கடுப்பாகிப் போன சில மாணவர்கள் என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நினைத்தால் மாதம், தேதி உட்பட எந்த இடம் அசுத்தமாக இருந்ததென்பதைக் குறிப்பிட்டுப் புகார்ப் பெட்டியில் எழுதிப் போட்டு விடுவார்கள். அவை பள்ளியாளுமன்றத்தில் வாசிக்கப்படும். அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் அபராதம் செலுத்தவேண்டும். பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அவர் எந்தப் பதவிக்கும் போட்டியிடக்கூடாது.

பொிய சார் தன்னோடு பணிபுரிந்த ஆசிரியர்கள் (அவரிடம் படித்தவர்களே அவருடன் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளனர்) மூன்று தலைமுறையினரையும் அப்பா பெயரோடு சோ்த்து அழைக்கும் அபார நினைவாற்றல் கொண்டவர். கிராமத்தில் நடைபெறும் எல்லா நல்ல, கெட்ட காரியங்களிலும் முதல் நபராக வந்து நிற்கும் ஒட்டுறவு கொண்டவர். கண்மாய் உடைந்து பெருவெள்ளம் எடுத்தால் கிராமத்தினரோடு இரவெல்லாம் கண் விழித்துக் காத்து நிற்பார்.

கொலையாளிக்கு அறிவுரை
ஒருமுறை அவருடைய மாணவன் ஒருவன் கையில் அரிவாளோடு ரத்தம் சொட்டச்சொட்ட அதிகாலையில் வந்து நிற்கிறான். அதிர்ந்து போன பொிய சார், "என்னடா சொக்கா, இப்படி வந்து நிக்கிறே!" என்கிறார்.

"சார், எனக்கு வேற வழி தொியல சார். எங்கப்பன் இன்னொருத்திய சேத்துகிட்டு, எங்காத்தாவ தெனந்தெனம் கள்ளுக் குடிச்சிட்டு வந்து மயித்த இழுத்துப்போட்டு அடிக்கறாரு சார். எங்காத்தா பாவம். எம்புட்டுத்தான் சார் பொறுக்கும்? இன்னிக்கி ஆத்தாவ ரொம்ப அடிச்சிட்டாரு சார். எரவாரத்துல இருந்த கறுக்கருவாள எடுத்து எங்காத்தா கழுத்த அறுக்கப் போய்ட்டாரு சார். அதப் பாக்க முடியாம நான் கொட்டத்துல இருந்த வெட்டருவாள எடுத்து... எங்கப்பனை வெட்டிபுட்டேன் சார். இப்ப நான் என்ன செய்யணும் சார்.... சொல்லுங்க!"

"நேரா காளையார்கோவில் போலீஸ்டேசன் போயி சரண்டர் ஆயிரு" இது பொிய சார். அவர் சொன்ன ஒரே காரணத்திற்காகக் காவல் நிலையத்தில் கொலையாளி சரணடைந்த கதை பத்திரிகைச் செய்தியானது.

இப்படி எத்தனை சம்பவங்கள்.....

"அதுக்கென்னய்யா, கூப்புடுய்யா...."

இரண்டாண்டுகளுக்கு முன் அமொிக்காவிலிருந்து தாயகம் சென்ற நான் அவரைச் சந்தித்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்தில், என் தம்பி தங்கைகள் என அவரிடம் படித்த ஐந்து பேர் சென்று சந்தித்தோம். அப்போது நான் அவரிடம் “நான் சமீப காலமா யாரையும், சார்னு கூப்பிடுறதில்ல, எனக்கென்னமோ அது புடிக்கல, நீங்களும் அப்பாவும் எவ்வளவு சினேகம்னு எனக்குத் தொியும். ஆனா அப்பா இன்னிக்கி இல்ல. அதுனால நான் ஒங்கள அப்பான்னு கூப்புடலாமாப்பா"ன்னு கேட்டேன்.

என் கண்களையே சில மணித்தியாலம் உற்றுப் பார்த்துவிட்டு "அதுக்கென்னைய்யா, நீ கூப்புடுய்யா. நான் ஒனக்கு அப்பாதான்" என்றதும், நான் என் அப்பாவையே சந்தித்தாகக் கலங்கிப்போனேன்.

"அப்பா. நான் என்னோட அப்பாவுக்கு எதுவும் பொிசா செஞ்சிறல. அதுக்குள்ள அவர் எங்களவிட்டு போய்ட்டாரு. ஒங்களுக்கு செஞ்சா அது என் அப்பாவுக்குச் செஞ்சது மாதிரிப்பா. ஏன்னா, நான் எங்கப்பாவப் பாத்து பிரமிச்சிருக்கேன். அவரு ஒங்களப் பத்தி சொன்னது எனக்கு இன்னும் அதவிட பொிய பிரமிப்பா இருந்துச்சு. ஒங்களப்பத்தின ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன். அத நான் படமா எடுக்கப் போறேன். மகத்தான ஆசிரியரான ஒங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கல. ஆனா நான் ஒங்களப்பத்தி படமா பண்ணா, கண்டிப்பா தேசிய விருது கெடைக்கும். அந்த விருத ஒங்க கையால வாங்கணும்" அப்படின்னு சொன்னேன்.

அவர் சிரிச்சிகிட்டே, "கண்டிப்பாய்யா.... கண்டிப்பா" என்று வாழ்த்தினார். விருது கிடைக்கிறதோ இல்லையோ. அவர் பாராட்டியதையே விருது வாங்கியதாகத்தான் இன்றளவும் உணர்கிறேன்.

எனக்கு திரையுலகம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத காலகட்டத்தில், பள்ளி நிகழ்ச்சிகளில் நான் நடிப்பதையும், பாடுவதையும், நடனமாடுவதையும் பார்த்து, "நீ பொிய நடிகனா, சகலகலா வல்லவனா வருவடா" என்று வாழ்த்தி எனக்குள் விதைபோட்ட அந்த மகான் அவர்தான். கல்லூரியில் படிக்கும்போது கூடப் பழைய மாணவர்கள் சார்பாகப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் செய்வது வழக்கம். நான் நடனமாடுவதற்கு முன் "இப்ப ஒருத்தன் வருவான் பாருங்க, எங்கிட்டதான் படிச்சான். நம்ம சீதாராமன் பையன் மூத்தவன் 'தக்காளி'. அப்படி இருந்தாலும் சும்மா ஒடம்ப வில்லா வளைப்பான் பாருங்க. பிரமாதமா ஆடுவான். வருங்காலத்துல பொிய நடிகனா வருவான்" என்று அவர் கூறும் வார்த்தைகள் என் காதுகளில் இன்றும் ஒலிக்கின்றன.

பெரிய சார் பள்ளியில் அறிமுகப்படுத்திய பள்ளியாளு மன்றம், விவசாய வகுப்பறை, ஆசிரியர்கள் பற்றாக்குறையின்போது மாணவர்களை ஒன்றாக உட்கார வைத்து வழி நடத்தும் கலை, இலக்கிய, இசை நிகழ்வுகள், கிராம மக்களோடு ஒன்றிணைந்து செய்யும் பொதுச் சேவை என்று எதுவானாலும் இன்றளவும் எந்த ஆசிரியரும் செய்யாத சேவை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஒரு கோடிதான் காட்டியிருக்கிறேன். மிஞ்சியதை அவர் பற்றிய படம் சொல்லட்டும் என்று. அந்தக் கனவு நனவாகப் பெரிய சார் ஆசிர்வதிக்கட்டும்.

நவின் சீதாராமன்,
டென்னஸி

© TamilOnline.com