திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில்.
சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ளது திருப்போரூர்.

தல புராணத்தின்படி திருப்போரூர் தலம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆறுமுறை கடல் சீற்றத்திற்கு உள்ளாகிச் சிதிலமடைந்துள்ளது. முருகப்பெருமான், கந்தசாமியாக அகத்திய முனிவருக்கு உபதேசித்த தலம் இது. முருகன், அசுரர்களைப் போரிட்டு அழித்த இடங்கள் மூன்று. திருச்செந்தூரில் கடலிலும், திருப்பரங்குன்றத்தில் பூமியிலும், திருப்போருரில் காற்றிலும் அசுரர்களுடன் போரிட்டு முருகன் வென்றார். முருகன் தாரகாசுரனைப் போரில் அழித்ததால் இத்தலம் போரூர். போரி, போரி மாநகர், யுத்தபுரி, சமரபுரி என்பவை இத்தலத்தின் பிற பெயர்கள். கந்தர் சஷ்டி கவசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமராபுரி இத்தலந்தான்.

ஸ்ரீ சிதம்பர சுவாமிகள், சொக்கநாதர்-மீனாட்சி அருளால் மதுரையில் தோன்றியவர். அங்கயற்கண்ணியின் அருள் வேண்டித் தவம் செய்தார். அன்னை அகமகிழ்ந்து திருப்போரூர் கோவிலைச் சீரமைத்திட ஆசி வழங்கினாள். அப்பணியை அவர் செய்துவந்த போது ஒரு தெய்வீகக் குரல் ஏழாவது முறையாகப் பனைமரத்தின் அடியில் பூமியைத் தோண்டி அங்குள்ள சிலையை எடுக்கக் கூறியதைக் கேட்டார். கோவிலைக் கட்டுவதற்கு முன் சிலையை எடுத்து, பின்னர் திரும்பக் கட்டினார் என்று கூறப்படுகிறது. சிதம்பர சுவாமிகளுக்கு கோவிலில் தனிச்சன்னிதி உள்ளது. வைகாசி விசாகத்தின்போது அவருக்குத் தனி மரியாதை செய்யப்படுகிறது.

கோவில் 10ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகவும், பின்னர் கவி சிதம்பரநாத சுவாமிகளால் எடுத்துக் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் சுவாமிகள் ஜீவமூல ஒடுக்குமுறையில் மூலவரான கந்தசாமிக் கடவுளோடு இரண்டறக் கலந்த திருக்கோவில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. கோவில் ஐந்தடுக்கு விமானம், ராஜகோபுரத்துடனும், நுழைவாயில் கோபுரம் 70 அடி உயரத்துடனும், 200 அடி அகலத்துடனும் நான்கு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. கர்ப்பக்கிரகத்திற்கு 24 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாகச் செல்ல வேண்டும். நுழைவாயில் கோபுரத்திற்கு அருகில் முருகன் சன்னிதி. முருகன் கிழக்கு நோக்கி ஏழடி உயரத்தில், நின்ற கோலத்தில், இரு கைகளிலும் வேலுடனும், மயில் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீவள்ளி, தெய்வயானை இருவருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் முதல் பிரகாரத்தில் உள்ளன. சிவன் பார்வதி, மற்ற தேவதைகளும் காட்சியளிக்கின்றனர். கோவிலின் உட்புறத்தில் அமைந்துள்ள வன்னி மரத்திற்கு எதிரே அருள்பாலிக்கும் விஸ்வநாதர், விசாலாட்சியை வலம் வந்தால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்குமாம். திருப்போரூரில் மடம், அதன் வடபுறம் வேலாயுத தீர்த்தம். அதன் மேற்கே சுந்தர விநாயகருக்கு அழகான ஆலயம் உள்ளது. கந்த சஷ்டி மற்றும் மாசி மாத உற்சவத்தின்போது தீர்த்தவாரி நடைபெறுகிறது. குளத்தின் அருகில் கங்கை விநாயகர் அமர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் சோழ, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்கள் அநேகம். ஞானிகளால் கட்டப்பட்ட ஆலயங்கள் உலகில் இரண்டே இரண்டுதான். ஒன்று திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகப் பெருமானால் கட்டப்பட்ட ஆவுடையார் கோவில். மற்றொன்று திருப்போரூரில் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்ட கோவில். கோவில் திருப்பணி நடைபெற்றுவரும் சமயத்தில் திருப்போரூருக்கு உட்பட்ட பகுதியை அரசாண்ட நவாப் மன்னன், ஸ்ரீ சுவாமிகளின் அருள் வலிமையை உணர்ந்து, தனது ஆட்சிக்கு உட்பட்ட திருப்போரூர் பகுதி முழுவதையும் சுவாமிக்கு உரியதாக்கிச் செப்புப் பட்டயம் அளித்துச் சிறப்பித்திருக்கிறான்.

இங்கு 'யந்திர மாலா' என்ற பெயருடைய ஸ்ரீ சக்ரம் சிதம்பர சுவாமிகளாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு மூலவருக்கு வலப்புறம் உள்ளது. இது மிகச் சக்தி வாய்ந்ததாகும். இதற்கு அனுதினமும் ஆகம விதிப்படி அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மதுரை மீனாட்சி அம்மனால் சுட்டிக் காட்டப்பட்ட திருப்போரூர் கோவில் திருப்பணியை முடித்தபின் சிதம்பர சுவாமிகள் ஜீவமூல ஒடுக்க முறையில் கந்தசாமிக் கடவுளுடன் இரண்டறக் கலந்தார். முருகனுக்கு அவர் பக்தியோடு இயற்றிச் சமர்ப்பித்த பாடல்களே திருப்போரூர் சன்னிதிமுறைப் பாடல்கள் ஆயின.

கோவிலில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மே, ஜூனில் வைகாசி விசாகம், மாசி பிரம்மோத்சவம், பால் காவடி, தைப்பொங்கல், கந்தசஷ்டி, நவராத்திரி உற்சவங்கள் யாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

செவ்வாய் தோஷம், திருமணத்தடை, தீராத நோய் நொடிகள் போன்ற அனைத்துத் தோஷங்களும் நிவர்த்தி செய்யக் கோவிலில் பூஜை செய்கின்றனர். நிர்வாகம் இந்து அறநிலையக் காவல்துறைக்கு உட்பட்டது.

அன்னம் அளிக்குமூர் அண்டினரைக் காக்குமூர்
சொன்னம் மழைபோற் சொரியுமூர் - உன்னினர்க்குத்
தீதுபிணி தீர்க்குமூர் செவ்வேள் இருக்குமூர்
ஓதுதிருப் போரூர்எம் ஊர்


சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com