சேர்ந்திருந்தால் இருவருக்கும் மகிழ்ச்சி
அன்புள்ள சிநேகிதியே,
நான் மே மாதம் அமெரிக்கா வந்தேன் இது ஏழாவது முறை. ஒரே பையன். திருமணம் ஆகவில்லை. ஒவ்வொரு முறையும் பத்து, பதினைந்து பெண்கள், ஃபோட்டோ, ஜாதகக் குறிப்புகளுடன் வருவேன். ஏதாவது நடக்காதா என்று ஏக்கம். என் பையன் என் சொல்படி கேட்பவன். நான் ஜாதகப்பித்து. அவன் அப்பா, இவன் காலேஜ் போன வருடம் திடீரென்று போய்விட்டார். அவனுக்குப் பதினேழு வயது. எனக்கு 54. ரொம்ப வருடம் எல்லா தெய்வங்களையும் வேண்டி வேண்டி 14 வருடம் காத்திருந்து பிறந்த பிள்ளை. இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக இருந்தோம். அவன் வீட்டிலிருந்து கொண்டே (நான் என் பேங்க் வேலையை VRS வாங்கிக்கொண்டேன்) எஞ்சினியரிங், வேலை என்று போனான். எல்லாரையும் போல இங்கே மேலே படிக்க வந்தான். இங்கேயே தங்கிவிட்டான். நான் வந்து, வந்து போய்க் கொண்டிருந்தேன். அவன் என்னிடம் பாசமாக இருந்தான். நான் பார்த்து வைத்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதிமொழி கொடுத்தான். எதுவும் அமையவில்லை.

போன ஜனவரியில் ஒரு நல்ல ஜாதகம் பொருந்தி, பெண் இங்கேயே இருக்கிறாள் என்று என் சம்மதத்தைத் தெரிவித்தேன். அவனும் அவளும் இங்கேயே பார்த்துக்கொண்டார்கள். அவனுக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். ஒத்துப் போய்விட்டது. ஆனால், முறையாக நிச்சயம் செய்வதற்கு முன்னால் நான் அவளை வந்து பார்த்துவிட வேண்டும் என்று இங்கே கிளம்பி வந்து விட்டேன். வரும் தையில் இங்கேயே முடித்து விடலாம். அவர்களுக்கு விசா பிராப்ளம். அவளுடைய அப்பா, அம்மா இங்கேதான் பிள்ளையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. நான் போய்விட்டுத் திரும்பி வரவேண்டும் என்று ஏற்பாடு.

ஆனால் இங்கே வந்து பார்த்தால் அந்தப் பெண் நான் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக இருக்கிறாள். வரப்போகும் மாமியார் என்று ஒரு மரியாதை இல்லை. ஒரு நமஸ்காரம் இல்லை. முதலில் பார்க்கும்போது ஒரு புடவையோ சுடிதாரோ அணிந்து வரக்கூடாதா? முழங்கால் பேண்ட்டில் வந்து நிற்கிறாள். உரிமையாக நான் கொடுக்கும் முன்னாலேயே "ஐ லவ் பஜ்ஜி" என்று வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டாள். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவன், அவளைப் பார்த்தாலே வழி வழி என்று வழிகிறான். 'வாடா போடா' என்று என் எதிரிலேயே பேசி, சில சமயம் இன்சல்ட் செய்வதுபோலக் கூட தோன்றுகிறது. "என்னடா இது? இப்படி மரியாதை தெரியாத பெண்ணாக இருக்கிறாளே?" என்று அவனிடம் தனியாகக் கேட்டேன். "அம்மா, இந்தக் காலத்தில் இப்படித்தான் சகஜமாக இருப்பார்கள். நீ தப்பாக எடுத்துக் கொள்ளாதே" என்று என்னைச் சமாதானம் செய்யப் பார்த்தான். என் மனது ஒப்பவில்லை. எவ்வளவு ஆசை ஆசையாக எதிர்பார்த்துக்கொண்டு வந்தேனோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. "ஹா.. ஹா.." என்று எப்போதும் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு என்னைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. அவன் பிறந்த நாள் அன்று போன வாரம் கோவிலுக்குப் போனோம். அப்போதும் அந்த நிஜாரும் அரைக்கைச் சட்டையும் தான். எல்லாப் பெண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள், இந்த காலத்தில். சரி, ஆனால், 'அம்மா வந்து இருக்கிறாள். நீ கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்' என்று இந்தப் பையனாவது சொல்லக்கூடாதா? ஆக மொத்தம் இந்தப் பெண்ணை எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. எங்கேயோ 'கெமிஸ்ட்ரி' சரிப்பட்டு வரவில்லை. நிறையச் சம்பவங்கள் இருக்கின்றன. நானும் படித்தவள்தான். பேங்கில் வேலை பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு விஷயத்தை மட்டும் வைத்துச் சொலவில்லை. ஜாதகப் பொருத்தம், போட்டோவைப் பார்த்துவிட்டு நானேதான் அவளை, அவனுக்கு அறிமுகம் செய்வித்தேன். இப்போது நடைமுறையில் என் பிள்ளை சந்தோஷமாக இருப்பான் என்று தோன்றவில்லை. ஒரு மாதிரி அவனிடம் சொல்லிப் பார்த்தேன். அவன் மோகத்தில் இருக்கிறான். எதுவும் அவனுக்குப் பதிவதில்லை. இப்போது வீட்டுக்கு அவளை அழைத்துக் கொண்டு வருவதைக் குறைத்துக் கொண்டு, அவன் லேட்டாக வருகிறான். எனக்கா புரியாது? இந்தக் கல்யாணத்தை, என் மனத் திருப்தியுடன் எப்படி நடத்துவது என்று தெரியவில்லை. இங்கேயே ஒரு கோவிலில் அவர்கள் அப்பா, அம்மா ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். நான் அதிகம் கூப்பிட்டுப் பேசுவதில்லை. ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கிறேன். குடைந்து குடைந்து அவர்களை ஏதாவது கேட்டு என்ன பிரயோஜனம்? ஒரே ஒரு வேண்டுதல்தான். ஒன்று அவளே அவனை விட்டுப் போகவேண்டும். இல்லை, அவனுக்குப் பிடிக்காமல் விடவேண்டும். என்னைச் சுயநலவாதி என்று நினைக்காதீர்கள். மனதைத் திறந்து சொல்லிவிட்டேன். ஏதாவது அட்வைஸ்?

இப்படிக்கு,
...........


அன்புள்ள சிநேகிதியே
நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. நிறைய நாள் பொறுத்திருந்து, ஜாதகம் பொருந்தி, உங்கள் ஆசியுடன் உங்கள் மகன் இந்த முடிவை எடுத்திருக்கிறான். நீங்கள் எழுதியதில் நீங்கள் அவமானப்படும்படியாகவோ, உங்கள் மனம் குமுறுவது போல அந்தப் பெண் உங்களை நடத்தியதாகவோ எனக்குத் தெரியவில்லை. கொஞ்சம் indifference கொஞ்சம் self indulgence. அதை உங்கள் மகன் பெரிதாக நினைத்ததாகத் தெரியவில்லை. அவர்கள் இருவருமே வயது வந்தவர்கள். அவர்களுக்குள் ஒத்துப் போவதில் பிரச்சனை இருந்தால், பேசித் தீர்த்து, தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு அவர்களுடையது. உங்கள் தாய்ப்பாசம் உங்கள் மகனின் பக்குவத்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறதோ என்று எனக்கு தோன்றுகிறது.

ஒரு உறவு முறையில் நாம் எல்லாருமே, 'இன்னார் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்' என்று ஓர் அளவுகோலைப் பயன்படுத்தி எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்கிறோம், அதில் தவறில்லை. எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால், எதிர்பார்ப்புகள் எதிர்மாறாக வரும்போது, நாம் அதற்குத் தயாராக இருந்தால் நம் மனம் இப்படிப் புண்பட்டு முரண்படாது. நான் எந்த உபாயமும் சொல்லும் நிலையில் இல்லை. இது அவர்கள் வாழ்க்கை. அவள் செயல் உங்களுக்குப் பழக்கப்பட்டு விடும். நீங்கள் அந்தப் பெண்ணிடம் எந்த வகையில் உங்கள் அக்கறை, அன்பைக் காட்டியிருக்கிறீர்கள் (காட்டியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்) என்று எனக்குத் தெரியவில்லை. எப்போது ஜாதகம் பொருத்தம் என்று அவனிடம் உங்கள் ஒப்புதலைத் தெரிவித்தீர்களோ இனி, அவன் வாழ்க்கையில் எந்தப் பாதகமும் ஏற்படாது, ஏற்படக்கூடாது என்ற நம்பிக்கையிலும் வேண்டுதலிலும் இருந்தால், திருமணம் இனிதே நிறைவேறும். நீங்கள் உங்கள் மகனின் மேல் உயிரையே வைத்து இருக்கிறீர்கள். இந்த உறவு பிரிய நேர்ந்தால் அவனுக்கு ஏற்படும் வேதனை உங்களையும் பாதிக்கும். சேர்ந்து இருப்பதில் அவனிடம் இருக்கும் மகிழ்ச்சி உங்களுடைய மகிழ்ச்சி இல்லையா?

மீண்டும் சந்திப்போம்., வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com