கோசேவா ராதாகிருஷ்ணன்
சுமார் 60 ஏக்கர் நிலம். புதர் மண்டித் தரிசாகக் கிடந்தது. அந்த இடத்தை வாங்குகிறார் அவர். பலரது கேலி, கிண்டலைப் பொருட்படுத்தாமல் அங்கே மரங்களை நடுகிறார். பராமரிக்கிறார். ஆண்டுகள் உருண்டு ஓடுகின்றன. இன்றைக்கு அது பறவைகள் பாடும் வனமாக, எழில் கொஞ்சும் காடாக வளர்ந்து நிற்கின்றது. காடொன்றை உருவாக்கியது மட்டுமல்ல, தனி ஒருவராக நின்று அந்த இடத்தை நாட்டு மாடுகளுக்கான புகலிடமாக, கோசாலையாக மாற்றி, பசுப் பாதுகாப்புப் பணியை முன்னெடுத்துச் செய்கிறார் திரு. ராதாகிருஷ்ணன். C.A. படித்த ராதாகிருஷ்ணன் மஸ்கட்டில் பதினைந்தாண்டுக் காலம் பட்டயக் கணக்காளராகப் பணியாற்றியவர். இந்தியா திரும்பிய சில ஆண்டுகளுக்குப் பின் அவர் மேற்கொண்ட முயற்சிதான் 'கோவிந்தன் கோசாலை'. இதோ, கோசேவா ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.

★★★★★


கே: ஆடிட்டருக்குப் படித்து வெளிநாட்டில் பணியாற்றிய உங்களுக்கு பசுப் பராமரிப்பு இல்லம் அமைக்கும் எண்ணம் வந்தது எப்படி?
ப: நான் மஸ்கட்டில் 15 வருடம் பணியாற்றினேன். 1997ல் தமிழ்நாட்டுக்கு வந்தேன். 1998ல் இங்கே ஒரு B.P.O. நிறுவனத்தைத் தொடங்கி 2005ம் ஆண்டுவரை நடத்தி வந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு கோசாலை அமைக்கும் எண்ணம் தோன்றியது. அதற்கு முக்கியக் காரணம், காஞ்சி மகாபெரியவர். வேதத்தைப் பாதுகாத்தல், பசுக்களைப் பாதுகாத்தல் இவையிரண்டும் அவர் வலியுறுத்திய விஷயங்கள். நான் சிறு வயதில் வேதம் படிக்கவில்லை. சரி, பசுக்களையாவது பாதுகாக்க முற்படுவோமே என்று நினைத்தேன். அதற்காக 2003ல் மதுராந்தகம் அருகே நிலம் பார்க்கச் சென்றேன். ஐந்து எக்கர் நிலம்தான் வாங்கப் போனேன். ஆனால், 60 ஏக்கர் நிலம் விலைக்கு வந்தது. அருகில் மிகப்பெரிய காடு இருந்தது. இந்த இடத்தில் கோசாலை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அதை வாங்கிப் போட்டேன். வெறும் முட்புதராக இருந்தது. நான் அதை வாங்கிச் சரி செய்தேன்.

2004ல் சிறிய அளவில் கோவிந்தன் கோசாலையை அங்கே அமைத்தேன். வெட்டுக்குப் போன பத்து மாடுகளைத் தடுத்து, அவர்கள் கேட்ட விலையைக் கொடுத்து வாங்கி அங்கே வைத்துப் பராமரிக்க ஆரம்பித்தேன். 2012ல் என்னுடைய நிறுவனப் பணிகளையெல்லாம் முற்றிலுமாக நிறுத்திவிட்டு கோசாலையைப் பராமரிப்பது மட்டுமே பணியாகக் கொண்டு அதில் இறங்கினேன். நிறுவனத்தில் வந்த பணம் அனைத்தையும் கிணறு, மின் மோட்டார், குடில்கள், கொட்டில்கள் என்று கோசாலைப் பராமரிப்பிற்கு மட்டுமே செலவழித்தேன். மாடுகள் பல்கிப் பெருகின. இப்போது கிட்டத்தட்ட 250 மாடுகள் கோசாலையில் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான மாடுகள் வெட்டுக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது, தடுத்து வாங்கப்பட்டவை. மற்றவை அங்கேயே கன்றுகளை ஈன்றவை. பசு மாடுகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பது எனது முக்கிய விருப்பம். எனது குடும்பம், வீடு, அலுவலகம் என அனைத்தும் சென்னையில் இருந்தாலும் நான் மாதத்தின் பெரும்பாலான நாட்களை இங்கே கோசாலையில் பசுக்களுடன்தான் கழிக்கிறேன். இதை ஒரு தன்னைத் தானே தாங்கி நிற்கும் முன்மாதிரி (self-sustaining model) ஆகச் செய்யவேண்டும் என்பது என் ஆசை.



கே: இதைத் தொடங்கும்போது ஏற்பட்ட சிக்கல்கள் என்ன?
ப: ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்து விட்டேனே தவிர எனக்கு அப்போது பசுப் பராமரிப்புப் பண்ணை எப்படி இருக்க வேண்டும், என்ன தேவை என்பது எதுவுமே தெரியாது. நாங்கள் பசு வளர்த்ததுமில்லை. பசுக்களில் நாட்டு மாடு, கலப்பு மாடு என்ற வித்தியாசங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் கோசாலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்ததால், அதற்கேற்ப எல்லாம் நடந்தது. ஒரு நற்பணியை நாம் துவக்கி நடத்த முற்பட்டால், நல்ல எண்ணம் இருந்தால், அதற்கு இறைவன் துணை புரிவான் என்பதற்குச் சான்று வேண்டுமென்றால் இதைத்தான் சொல்லவேண்டும்.

பசுமாடு வளர்க்க எந்தச் சூழல் சிறப்பாக இருக்குமோ அப்படி இருந்தது நான் வாங்கிய இடம். சுற்றிலும் ஆயிரம் ஏக்கருக்குக் காடுகள். அருமையான சீதோஷ்ண நிலை. மலையடிவாரம். ஊரிலிருந்து மிகவும் தள்ளி இருந்ததால், கார், பஸ், டூ வீலர் இரைச்சல் இல்லாத அமைதியான இடம். ஹாரன் போன்ற ஒலிகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் மாடுகள் மிரளும். மேய்ச்சலுக்கு உகந்த பூமி. இதெல்லாம் நாம் உண்டாக்க முடியாது. இயற்கை தானாக உண்டாக்கி வைத்திருக்கிறது, அதுவும் இந்தப் பசுக்களுக்காகவே என்பது எனக்குப் பின்னால்தான் புரிந்தது. ஆக, நான் அந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. அந்த இடம் பசுக்களுக்கு உகந்தது என்பதால், அது என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நான் கோசாலையை நடத்துகிறேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. குருவின் அனுக்கிரகத்தால் என்னைக் கருவியாகக் கொண்டு இதெல்லாம் நடக்கிறது என்பதுதான் உண்மை.

கே: உங்கள் கோசாலையின் சிறப்பு என்று எதைச் சொல்வீர்கள்?
ப: முதல் சிறப்பு, இங்குள்ள அனைத்துமே நாட்டு மாடுகள். இரண்டாவது அத்தனையுமே இந்தப் பகுதியிலேயே - அதாவது செங்கல்பட்டு மற்றும் அதனை ஒட்டிய பகுதியிலேயே - தலைமுறை தலைமுறையாகப் பிறந்து வளர்ந்து வரும் மாடுகள். அந்தச் சீதோஷ்ண நிலைக்கேற்ற உடல் திறனை, வாழும் தன்மையைக் கொண்டவை. மூன்றாவது அத்தனையுமே வெட்டுக்காகக் கொண்டு செல்லப்பட்டவை. நான் தடுத்து, அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து மீட்டவை. நான்காவது முக்கியமான விஷயம், இவை தினந்தோறும் மேய்ச்சலுக்குப் போகும் மாடுகள்; ஜெயில் போல அடைத்துக் கட்டிப்போட்டு, வளர்க்கப்படும் மாடுகள் அல்ல. சுமார் 10 கி.மீ. தூரமாவது இவை தினமும் நடக்கின்றன. மனிதனுக்கு எப்படி 'நடப்பது' அவசியமோ அதுபோல நாட்டு மாடுகளுக்கும் அவை முக்கியம். அவை நடக்கவேண்டும், ஓட வேண்டும். வெயிலில் அலைந்து, மழையில் நனைந்து உரம் பெற்றால்தான், ஆரோக்கியமாக இருக்கும். மேய்ந்தால்தான் மாடு.

சொல்லப்போனால் மாடு என்றால் அது நாட்டு மாடுதான். அன்றைக்கு இந்த மாடுகளை 2500, 3000 கொடுத்து வாங்கினோம். இன்றைக்கு ஒரு மாட்டின் விலை 22000, 25000 சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் மட்டுமே இருக்கும் மாடுகள் இவை. காளைகள் கிடைப்பதுதான் கடினமாக இருக்கிறது. பொலிகாளைகள் கிடைப்பதில்லை. இந்த நாட்டு மாடுகள் இனம் தக்க வைக்கப்பட வேண்டும், சந்ததி வளர வேண்டும், இல்லாவிட்டால் இந்த இனம் அழிந்துபோய்விடும் என்பதால் நான் அதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன்.



கே: இவற்றின் உணவுத் தேவைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
ப: இந்த மாடுகள் கொட்டிலில் அடைந்து கிடப்பவை அல்ல. தமக்குத் தேவையான உணவை மேய்ச்சலில் உண்கின்றன. உபரியாகச் சத்துக்களை நாங்கள் புண்ணாக்கு, தவிடு, வைக்கோல் என்று அளிக்கிறோம். அதற்காக எங்கள் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்கிறோம். சம்பா அரிசி விளைவிக்கிறோம். அதிலிருந்து மாடுகளுக்கான வைக்கோல் கிடைத்து விடும். கைக்குத்தல் அரிசி தயாரிக்கிறோம். எண்ணெய்க்காக வேர்க்கடலை பயிரிடுகிறோம். அதிலிருந்து புண்ணாக்குக் கிடைத்து விடும். தவிர, மாடுகளின் தீவனத்துக்காகப் புல்லைத் தனியாக வளர்க்கிறோம். அது தவிர்த்து பரந்த காடு அருகே இருக்கின்றது. மேயப் போகாமல் இருந்தால் ஒரு மாதத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால், எங்கள் பசுக்கள் மேயப்போவதால் 2, 3 லட்சம் ஆகிறது. ஒழுங்காக மழை பெய்தால் மார்ச், ஏப்ரல், மே மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் அவற்றுக்கான இரை மேய்ச்சலிலேயே கிடைத்துவிடும்.

கே: இந்தப் பசு இல்லத்தின் மூலம் உங்களுக்கு என்னென்ன கிடைக்கின்றன?
ப: கோசேவை செய்வதுதான் என் முதல் நோக்கம். வியாபார நோக்கம் எதுவுமில்லை. ஆனால், கோசேவை மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதும் உண்மை. பலரும் மாடு வளர்ப்பில் வருமானம் என்பது பாலின் மூலம்தான் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது அப்படியல்ல. ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் நாட்டு மாடுகள் அதிகபட்சம் 3 லிட்டர் கறக்கும் அவ்வளவுதான். ஆனால் நாள் பூராவும் பல விதங்களில் உழைக்கும். வட இந்திய மாடுகள் நிறையப் பால் தரும். 8 லிட்டர், 10 லிட்டர்கூடத் தரும். ஆனால் உடல் உழைக்காது.

நாங்கள் பாலை விற்பதில்லை. கன்றுகளையே குடிக்க விட்டு விடுகிறோம். காலையில், கன்றுகள் குடித்தது போக எஞ்சிய சிறிதளவு பாலைக் கறந்து அருகிலிருக்கும் ஆலயங்களுக்குக் கொடுக்கிறோம். மதியம் கறக்கும் பாலைப் பயன்படுத்துவோம். இங்கே 15, 20 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதைக் கொண்டு நெய் தயாரிக்கிறோம்.

உண்மையில் மாட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது பால் விற்பனையைவிடச் சாணம் மற்றும் கோ மூத்திரம் மூலம் கிடைப்பதுதான். ஆனால், நாங்கள் இதை எல்லாம் பெரிய அளவில் செய்யவில்லை. குடிசைத் தொழில்போல, தேவைப்படுபவர்களுக்கு மட்டும் சிறிய அளவில் தயாரித்துத் தருகிறோம். இவற்றின் மூலம் நிறையச் சம்பாதிக்க முடியும் என்பது உண்மை. மற்றபடி மாட்டின் கழிவுகள் எங்கள் பண்ணைகளில் உரமாகின்றன. சாணம் மிக நல்ல இயற்கை உரம். வறட்டி செய்தும் விற்கலாம். 'பஞ்சகவ்யம்' தயாரித்தும் அளிக்கலாம். மனிதர்களுக்கு மட்டுமல்லாது நிலங்களுக்கும் அது நல்ல இயற்கை உரம்.



கே: பசுக்களின் எண்ணிக்கை, குறிப்பாக நாட்டு மாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாகச் சொல்கிறார்களே!
ப: உண்மைதான். பலரும் நாட்டு மாடுகளைவிடப் பால் அதிகம் தரும் கலப்பின மாடுகளையே வளர்க்கின்றனர். அதனால் நாட்டு மாட்டினங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. கலப்பின மாடுகளின் பாலை உட்கொள்வதால் பல்வேறு நோய்கள் வருவதாகக் கூறப்படுகின்றது. 'பசுமைப் புரட்சி' என்று சொல்லி, ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தினோம். அதன் விளைவு என்ன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அதுபோல 'பால் புரட்சி அல்லது வெண்மைப் புரட்சி' என்றார்கள். மாடுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தார்கள். என்ன ஆயிற்று? இன்றைக்கு ஏ1, ஏ2 என்று வந்து, ஏ1 (கலப்பின மாடுகளின்) பால்தான் பல நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது என்று சொல்லும் நிலைமைக்கு வந்திருக்கிறோம். ஏ2 பால் என்பது நாட்டு மாடுகளின் பால். அதில் நிறையச் சத்துக்கள் உள்ளன என்பது கண்கூடான உண்மை. அதனால்தான் அதன் விலையும் அதிகமாக இருக்கிறது. 1 லிட்டர் பால் 110 ரூபாய். ஆனால், இன்றைக்கு நாட்டு மாடுகளின் எண்ணிக்கை அருகிக்கொண்டே வருகிறது.

இயற்கையே இந்த இடத்தில் இப்படிப்பட்ட மாடுதான் வாழ முடியும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிர்ணயித்ததை மாற்றியமைக்க நாம் யார்? அப்படி இயற்கையோடு சண்டை போட்டு நாம் வெல்லமுடியாது. இயற்கையோடு ஒன்றித்தான் வாழவேண்டும். வாழ முடியும். இன்றைக்கு நோய்கள் பெருகியிருக்கின்றன. நம் முன்னோர்கள் போல் ஆராக்கியமாக வாழ வேண்டுமென்றால் நாம் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும். இயற்கைப் பொருட்களை உண்ண வேண்டும். பசு அதற்கு உதவுகிறது. பசுவின் பால், தயிர், மோர், நெய் என அனைத்துமே நமக்கு உணவாகிறது, மருந்தாகிறது.

கே: உங்கள் கோசேவா தயாரிப்புகளை எப்படி வாங்கலாம்?
ப: எங்கள் இணையதளத்தின் மூலம் வாங்கலாம். தீவிரமாக எங்கள் பொருட்களின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் நான் ஆர்வம் காட்டவில்லை. முக்கியக் காரணம் நேரமின்மை. மற்றுமொரு காரணம் கோசேவை ஒன்றே எனது நோக்கம் என்பதுதான். விருப்பமுள்ளவர்கள் வாங்கலாம். தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தந்தப் பகுதியில் உள்ள நபர்களைத் தொடர்பு கொண்டும் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் நேரடியாக வாங்க இயலாது. எக்ஸ்போர்ட், டாகுமெண்டேஷன் என்று அதில் நிறைய வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதிமுறை. அதனால் கொரியர்/தபால் என்று பிரத்யேகமாக எங்களால் அனுப்பமுடியாது. ஆனால், இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் வாங்கிக் கொண்டுபோய்க் கொடுக்கலாம். இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் அனுப்புகிறோம்.



கே: "மாடுகளை எங்களால் வளர்க்க முடியாது; நீங்கள் வளருங்கள்" என்று சொல்லி உங்களிடம் யாரேனும் மாடுகளைக் கொடுக்க முன்வந்தால் அல்லது 'கோ தானம்' ஆகக் கொடுக்க முன்வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
ப: நாட்டு மாடாக, அதுவும் செங்கல்பட்டு மாடாக இருந்தால் மட்டும்தான் வாங்கிக்கொள்வோம். இங்கிருக்கும் மாடுகள் எல்லாமே ஒரேவகை மாடுகள்தான். கோதானம் செய்ய விரும்பினால் சொல்லுங்கள், நல்ல செங்கல்பட்டு மாடாக நாங்களே தேடிப் பார்த்துச் சொல்கிறோம். நீங்கள் பணம் கொடுத்து, மாட்டை வாங்கி எங்களிடம் தரலாம்.

கே: ஆலயங்களுக்குத் தானமாய் அளிக்கப்படும் மாடுகள் சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: கோவிலுக்கு நேர்ந்துகொண்டு பசுக்களை விடுகிறார்கள். சில இடங்களில் பராமரிக்க முடியாமல் வேறு யாரிடமோ கொடுக்க, அவை இறுதியாக வெட்டுக்குச் செல்கின்றன. ஆகவே கோதானம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் நல்லது, கெட்டது இருக்கத்தான் செய்யும். ஆகவே அவர்கள்தான் கவனமாக நல்ல கோசாலையாகப் பார்த்து, மாடுகளைச் சரியாகப் பராமரிப்பார்களா என்பதை அறிந்து, பின் மாடுகளை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தானம் செய்து பலனில்லை.

கே: இந்த கோசாலை பராமரிப்பதற்கான நிதி ஆதாரங்களை பற்றி...
ப: ஒன்று, எங்கள் பொருட்களை விற்பதில் கிடைக்கும் வருமானம். அது சிறிய அளவுதான். மற்றொன்று, நன்கொடைகள். பசுக்களுக்கான தீவனத் தேவைகளைச் சுழற்சி முறை இயற்கை விவசாயம் மூலம் நாங்களே உற்பத்தி செய்வதாலும், பசுக்கள் மேய்ச்சலுக்கு விடுவதாலும் எங்கள் தேவைகளைச் சமாளிக்க முடிகிறது. நாங்கள் 80ஜி வருமான வரிவிலக்குப் பெற்றிருக்கிறோம். பலர் உதவுகிறார்கள். யார் வேண்டுமானாலும் கோசேவைக்கு உதவலாம். எங்கள் இணையதளத்தில் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளன. வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான FCRA நான் வாங்கவில்லை. அதற்கென்று தனிச் சட்டதிட்டம் இருக்கிறது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் இருப்பவர்கள் மூலம் உதவலாம்.



கே : எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
ப: இன்னும் நிறையப் பசுக்களைச் சேர்த்து விரிவாக்க நினைக்கிறேன். மக்களிடையே கோசேவை பற்றிப் போதிய விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணமுண்டு.

ஒரு திட்டம் இருக்கிறது. ஒருவர் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் அவர் வாழ்க்கை முழுவதும் அவர் குறிப்பிடும் நாளில் மாடுகளுக்கு உணவு கொடுப்பது என்பது. அதுபோல கோபூஜை செய்ய வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு ஆர்வம் இருக்கலாம். தங்கள் நட்சத்திரம், தேதி, பெயர் சொல்லி, அதற்கான தொகையை அனுப்பிவிட்டால் நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் சார்பாக நாங்களே கோபூஜைக்கு ஏற்பாடு செய்துவிடுவோம்.

அந்த பூஜையின் வீடியோவையும் பதிவுசெய்து காண்பிக்கும் திட்டம் இருக்கிறது. நிறைய கோபூஜை இங்கே நடக்கிறது. விடுமுறை நாட்களில் இங்கேயே வந்து செய்கிறார்கள். 365 நாளும் கோபூஜை நடத்தும் எண்ணம் இருக்கிறது. நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கோசாலையில் தியானம், ஜெபம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் என்கிறது சாஸ்திரம். அப்படிப்பட்ட இடத்தில் புண்ய கர்ம ஹோமங்கள் செய்தால் இன்னமும் அதிகப் பலன் கிடைக்கும். விருப்பம் இருப்பவர்கள் அனுமதிபெற்று இங்கு வந்து செய்யலாம். 365 நாட்களும் கோசாலை திறந்திருக்கும். விரும்பினால், நீங்களே வந்து கோபூஜை செய்யலாம். அதுபோல நன்கொடை கொடுப்பதும் அவரவர் விருப்பம். யாரிடமும் நான் டிமாண்ட் செய்வதில்லை. தனி ஒருவராகத்தான் செய்யவேண்டும் என்பதில்லை, ஒரு குழுவாகச் சேர்ந்தும் செய்யலாம்.

பாவம் போகும். புண்ணியம் பெருகும். சந்ததிகள் நன்றாக இருக்கும். பசு இல்லாவிட்டால் விவசாயம் இல்லை. பசு இல்லாவிட்டால் வேள்வி, வழிபாடு போன்றவையும் இல்லை. அந்த அளவுக்கு முக்கியமானவை பசுக்கள். அவை போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். நம் முன்னோர்கள் போற்றிப் பாதுகாத்தார்கள். நாம்தான் தவறியிருக்கிறோம். அதைச் சரிசெய்ய வேண்டும் என்று உணர்ச்சிமயமாகப் பேசி முடிக்கிறார் ராதாகிருஷ்ணன். தனி ஒருவராக அவர் செய்துவரும் சாதனைகளைக் கேட்டு நமக்குப் பேச்சே எழவில்லை. அவரது முயற்சிகள் சிறக்க வாழ்த்தி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

பசு தரும் அரும்பொருட்கள்
நாட்டுப் பசுமாட்டின் நெய் மிகச் சிறந்த மருந்து. இதுபற்றி ஆயுர்வேதத்தில் சொல்லியிருக்கிறார்கள். பல நோய்களைத் தீர்க்கிறது. குறிப்பாக அல்சைமர், மனச்சிதைவு (டெமென்ஷியா), உறக்கமின்மை, நரம்புப் பிரச்சனைகள், ஜீரணப் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு இது அருமருந்தாக உள்ளது. கோ மூத்திரத்திலிருந்து கோ ஆர்க் தயாரிக்கிறோம். சாணத்திலிருந்து விபூதி. முறைப்படி வேத மந்திரம் சொல்லி, விரஜா ஹோமம் செய்து, சிவராத்திரி அன்று இதனைத் தயாரிக்கிறோம். அது தூய விபூதியாக மட்டுமல்லாமல் சிறந்த கிருமிநாசினியாகவும் இருக்கிறது.
- கோசேவா ராதாகிருஷ்ணன்

கோ ஆர்க்: அறிவியல் நிரூபணம்
காய்ச்சி வடிக்கப்பட்ட பசுவின் சிறுநீர் 'கோ ஆர்க்' எனப்படும். இதன் மருத்துவ குணங்களை விரிவாக ஆராய்ந்து நான்கு US காப்புரிமங்கள் வாங்கி வைத்திருக்கின்றனர். (United States Patent Nos: 6896907, 6410059, 20040198769, 7297659). அமெரிக்காவில் பேடண்ட் வாங்குவது சாதாரணமான விஷயமல்ல. இதிலிருந்தே இதிலிருக்கும் உண்மையை அறிந்து கொள்ளலாம்.

கோ ஆர்க்கிற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். மாடு நாட்டு மாடாக, மேயும் மாடாக இருக்க வேண்டும். பயோ கேஸில் கொதிக்கவைத்துத் தயாரிக்கும்போது பூரண பலன் கிடைக்கும். அதற்கு மண்பானையைப் பயன்படுத்துவதுதான் சிறப்பானது. அப்போதுதான் அது வீரியமுள்ளதாக இருக்கும். ஒரு வருடம் வரைக்கும் பயன்படுத்தலாம். இதற்கான பயிற்சியை நாக்பூர், கோ விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா ஆராய்ச்சி நிலையத்தில் தருகிறார்கள்.
- கோசேவா ராதாகிருஷ்ணன்

கோ ஆர்க்: மருத்துவ குணங்கள்
காய்ச்சி வடிக்கப்பட்ட பசுவின் சிறுநீரான 'கோ ஆர்க்' என்பது சர்வரோக நிவாரணி. இதன் முதல் முக்கியமான பயன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது. தவிர, ரத்த அழுத்தம், நீரிழிவு, ஒவ்வாமைகள் (அலர்ஜி), நோய்த் தொற்றுகள், தோல் நோய்கள் போன்றவை இதில் குணமாகின்றன. புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. இது பல நோய்களுக்கு மருந்தாகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.
- கோசேவா ராதாகிருஷ்ணன்

நாங்கள் செய்வது
பசுவின் பாலை கோசாலையில் வேலை செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுபோல இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தியாகும் காய்கறிகளும் அவர்களுக்குத்தான். வெளியில் விற்பதில்லை. அவர்களுக்குச் சாப்பாடும் அங்கேயே கொடுக்கிறோம். இரண்டு, மூன்று பேர் மட்டுமே அங்கே இரவில் தங்குவார்கள். மற்றவர்கள் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்று விடுவார்கள். வேர்க்கடலை பயிரிடுகிறோம். அதிலிருந்து ஆர்கானிக் கடலை எண்ணெய் எடுக்கிறோம். நெல் பயிரிடும்போது வைக்கோல் கிடைத்துவிடும். தீவனத்துக்காகப் புல்லையும் வளர்க்கிறோம். எங்கள் தயாரிப்புகள் குறித்த விவரங்களைப் பார்க்க.

இங்கு வந்தால் வசிப்பதற்காக சிறிய அறை ஒன்றைக் கட்டியிருக்கிறேன். மின்சார வசதி இருக்கிறது. மோட்டார் பம்ப்செட் இருக்கிறது. சோலார் பேனல் போடும் உத்தேசமும் இருக்கிறது. ஐந்து இடங்களில் மோட்டார் இருக்கிறது. 60 ஏக்கர் என்பதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் போய் ஆன் செய்யமுடியாது. கிணற்றுக்கு அருகே போய்த்தான் மோட்டார் போடவேண்டும் என்பதில்லை. மொபைல் மூலமாகவே ஆன் செய்துவிடுவேன்.

பசு மாடுகள் தனி, கன்றுக்குட்டிகள் தனி, காளை மாடுகள் தனி என மொத்தம் ஐந்து கொட்டில்கள் இருக்கின்றன. மாடுகளை அவ்வப்போது பரிசோதிக்க டாக்டர் வந்து செல்வார்.
- கோசேவா ராதாகிருஷ்ணன்.

மந்திரமாவது நீறு
பசுஞ்சாண விபூதி சைவ சமயத்தில் முக்கியமானது. அதன் பெருமையைக் கூற திருநீற்றுப் பதிகமே இருக்கிறது. 'மந்திரமாவது நீறு' என்கிறார் ஞானசம்பந்தப் பெருமான். அது வெறும் மதச்சின்னம் மட்டும் அல்ல. உன்னதமான மருந்தும் கூட. ஆனால், இன்றைக்கு நிறைய கலப்படம் வந்துவிட்டது. அதனால் பலருக்குத் தோல்நோய்கள் ஏற்படுகின்றன. இங்கே நாங்கள் இயற்கை வழியில், நமது பாரம்பரியப்படி அதைத் தயாரிக்கிறோம். அது விபூதியாக மட்டுமல்லாமல், சிறந்த கிருமி நாசினியாகவும் இருக்கிறது. அதுபோல வறட்டி கொடுக்கிறோம்.
- கோசேவா ராதாகிருஷ்ணன்

கோசேவையின் பலன்கள்
பசுப் பாதுகாப்பு நம் கர்மாவைப் போக்க உதவும் வழிமுறைகளுள் ஒன்று. எங்களிடம் நெய், விபூதி வாங்கினாலும் அந்தப் பணம் பசுக்களின் நலனுக்குத்தான் செல்கிறது. இதில் வணிக நோக்கம் எதுவுமில்லை. இங்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் பொருள்களுடன் சேர்ந்து புண்ணியமும் சேர்ந்து கிடைக்கிறது. வேறென்ன வேண்டும்?
- கோசேவா ராதாகிருஷ்ணன்

பசுவும் விவசாயமும்
இயற்கை வேளாண்மையைப் பசுமாடு இல்லாமல் முடியாது. மாட்டுச் சாணம் செறிவான உரம். அதன் சிறுநீரும் விவசாயத்துக்கு உதவுகிறது. இவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் பஞ்சகவ்யம் நிலத்திற்கு மிகப் பெரிய வளத்தைச் சேர்க்கிறது. நீங்கள் என்னதான் ரசாயன உரங்களைப் பயன்படுத்தினாலும் அவை பசிக்கு விட்டமின் மாத்திரை சாப்பிடுவது போலத்தான். பயிருக்கு, நிலத்துக்கு உண்மையான உணவு சாணமும் பசுவின் சிறுநீரும்தான்.

சென்னையிலிருந்து பள்ளிக் குழந்தைகள் பலர் வாராவாரம் இங்கு வருவார்கள். அவர்களுக்கு நான் இயற்கை பற்றி, விவசாயம் பற்றி, மாடுகள் பற்றி, சுற்றுச்சூழல் பற்றி எல்லாம் வகுப்பெடுப்பேன். அவர்களிடம் எதிர்காலத்தில் என்ன ஆக விருப்பம் என்று கேட்டால் பல விதமான பதில்கள் வருமே தவிர, யாருமே 'விவசாயி' என்று சொன்னதில்லை. காரணம், அவர்களுக்கு விவசாயம் பற்றித் தெரியாததுதான். விவசாயி இல்லை என்றால் நாம் இல்லை, சென்னை இல்லை, மெட்ரோ இல்லை, ஏன் எதுவுமே இல்லை. இதுபற்றி எல்லாம் பலரும் யோசித்தே பார்ப்பதில்லை. காசு கொடுத்தால் அரிசி கிடைக்கிறது, அப்புறம் என்ன என்று அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால் உணவுக்குத் தவிக்க வேண்டிய நிலைமை வந்துவிடும். இது அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.
- கோ சேவா ராதாகிருஷ்ணன்.

பசுப் பாதுகாப்பு
பசு பேதம் இல்லாமல் எல்லாருக்கும் பால் கொடுக்கிறது. அதனைப் பாதுகாக்கும் பணியை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். அதற்குச் சாதியோ, மதமோ, இனமோ தடையாக இருக்கக்கூடாது.

ஒருவருக்கு பித்ரு தோஷம், மாத்ரு தோஷம் என எது இருந்தாலும் அதற்குப் பரிகாரம் கோசேவைதான். திருமணம் ஆகவில்லை, குழந்தை பிறக்கவில்லை, ஆரோக்கியம் இல்லை, வேலை இல்லை, செல்வ வளம் இல்லை என எல்லாவற்றிற்கும் அவரவர் கர்மாதான் காரணம். இந்தக் கர்மாவை மாற்றும் எளிய, சிறந்த வழி கோசேவை. 'பஞ்சகவ்யம்' போன்ற மருந்துகளுக்கு இதில் முக்கிய இடமுண்டு. அவற்றால் வியாதி போகும். கர்மாவும் மாறும். ஆனால் அவை அதற்கேற்றப்படி தயாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பூரண பலன் கிடைக்கும்.

பசுவுடன் இருக்கும்போது உங்கள் மன அழுத்தம் எல்லாம் போய்விடும். இதனால்தான் அந்தக் காலத்தில் பிரச்சனை என்று வருபவர்களுக்கு மகான்களும், ஞானிகளும் கோசாலையைப் பராமரிக்கச் சொன்னார்கள். இன்றைக்கும் நியூ யார்க்கிலோ எங்கோ பசு மாட்டுடன் ஒரு மணி நேரம் இருப்பதற்கு 50 டாலர் வாங்குவதாகப் படித்தேன். அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கது பசு.
- கோசேவா ராதாகிருஷ்ணன்.

© TamilOnline.com