தென்றல் பேசுகிறது...
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழனின் உலகளாவிய நோக்கைப் பிரகடனப் படுத்தினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, செப்டம்பர் 27, 2019ம் நாளன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில். அங்கு நிகழ்த்திய தமது அற்புதமான உரையில், "எங்கள் நாடு யுத்தத்தை அல்ல, புத்தத்தைக் கொடுத்தது" என்று பெருமிதத்துடன் சொன்னார். "பயங்கரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும்" என்று அறைகூவினாரே அன்றி, பயங்கரவாதத்தைப் பரப்புவது இந்த நாடு என்று தனிப்படுத்திச் சொல்லவில்லை. "எங்கள் நாட்டின் வளர்ச்சி உலக நாடுகளுக்கு ஒரு முன்னோடி" என்று ஒவ்வொரு துறையிலும் பாரதம் அடைந்துவரும் வெற்றிகளைப் பட்டியலிட்டு, "இது வளர்ந்துவரும் நாடுகள் அனைத்துக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக அமையவேண்டும் என்பதுதான் எங்கள் கனவு" என்று தெளிவுபடுத்தினார். அவருடைய பார்வை விசாலமாக இருந்ததே அன்றிக் குற்றம் சாட்டுவதாக இருக்கவில்லை. "எல்லாருடனும் சேர்ந்து எல்லோருக்கும் வளர்ச்சி" என்கிற அவரது கோஷம் வெறும் சொல் அலங்காரமல்ல என்பதை உலக அரங்கில் உரக்கச் சொன்னார் பாரதப் பிரதமர். இந்தியர் அனைவரும் ஒருசேரத் தலைநிமிர்ந்து மகிந்து கொண்டாட வேண்டிய தருணம் இது.

★★★★★


அதிபர் ட்ரம்ப் ஜூலை 25ம் தேதி உக்ரேனிய அதிபருடன் தொலைபேசிய விவரங்கள் வெளியாகியுள்ளன. மக்களாட்சிக் கட்சியின் முக்கியப் பிரமுகரும் 2020ம் ஆண்டு அதிபர் வேட்பாளராக நிற்கப் போகிறவருமான ஜோ பைடன் மீது பொதுவெளியில் சேற்றை வாரி இறைக்கும் முயற்சியை ட்ரம்ப் மேற்கொண்டார் என்பதை அவரது உரையாடல் காண்பிக்கிறது. 'உண்மை விளம்பி' ஒருவர் எழுதிய பெயரிலாக் கடிதத்தால் இது வெளிவந்துள்ளது. உரையாடல் எழுத்துப் படிவத்தை ரகசிய ஆவணமாக்கியது, மத்திய அலுவலர்களை ஒற்றாடக் கூடாதென மிரட்டியது என்று தமது பதவிக்கும் தகுதிக்கும் சற்றும் பொருந்தாத பல தந்திரங்களைச் செய்கிறார் ட்ரம்ப். இப்போது ட்ரம்ப்பைப் பதவிநீக்கம் (Impeachment) செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. அமெரிக்காவில் பொருளாதார, வேலைவாய்ப்பு, உற்பத்தி, பன்னாட்டு வணிக உட்படப் பல துறைகளையும் அவர் செயலிழக்கச் செய்துள்ளதைப் பற்றி முன்னர் இதே பத்தியில் பேசியுள்ளோம். பல்லின மக்களும் தழைத்து வந்த நம் நாட்டில் இன்று சாலைகள் வெறிச்சோடிக் கிடப்பதையும் பார்க்கிறோம். கட்சிப் பிரிவினைகளை மீறி நாட்டின் பிரச்சனையாக இதைக் கருதி ஒரே குரலில் எதிர்ப்பது மிக அவசியம். காலம் தாழ்த்தினால் இழப்பு மக்களுக்குத்தான்.

★★★★★


'மாடு' என்ற சொல்லைச் 'செல்வம்' என்ற பொருளில் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார். அது ஏனென்று புரிய வேண்டுமென்றால் கோசேவை ராதாகிருஷ்ணன் அவர்களின் நேர்காணலைப் படிக்க வேண்டும். இன்று இந்தியர்கள் அனுபவிக்கும் சுதந்திரத்துக்கு விலையாகத் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்தவர்களை நாம் மறக்கக் கூடாது. அந்த வரிசையில் தமிழ் நாட்டில் குறிப்பிடத் தகுந்தவர்களில் ஒருவர் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனார். சாதனைச் சிறுவன் லிடியன் நாதஸ்வரத்தையும் இந்த மாதம் நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். மகிழ்ச்சியோடு திருப்புங்கள் பக்கத்தை.
வாசகர்களுக்கு காந்தி ஜெயந்தி, தசரா மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்.

தென்றல்
அக்டோபர் 2019

© TamilOnline.com