ஜூன் 30, 2019 அன்று விரிகுடாப்பகுதியின் பிரபல நடனப் பள்ளியான நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி, தனது நூறாவது நடன அரங்கேற்றத்தை டப்ளின் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கொண்டாடியது. இப்பள்ளி நடனசாரம், நிருத்யமாலை, அந்தர்யாமி , கிருஷ்ணானுபவம் முதலிய பல பிரம்மாண்டமான படைப்புகளை முன்னர் படைத்து வழங்கியுள்ளது. இயற்கைப் பேரிடர் நிவாரண நிதி திரட்டவெனப் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது.
நூறாவது அரங்கேற்றமாக, மாணவி அர்ப்பிதா கிருஷ்ணகுமாரின் பரதநாட்டிய நிகழ்ச்சி அமைந்தது. புஷ்பாஞ்சலியில் துவங்கி, அடுத்து வெகு அழகாக ஐந்து ராகங்கள் ஐந்து தாளங்கள் அடங்கிய ஜதிஸ்வரத்தை நேர்த்தியாக ஆடினார் அர்ப்பிதா. அடுத்து வந்த வர்ணத்தில், தன்னைப் பிரிந்து வள்ளியிடம் செல்லும் முருகனை நொந்து, தோழியான அன்னத்திடம் தெய்வானை குறை சொல்வதாக அமைந்தது. பாவத்துடனும், தாளத்திற்கு என்ற ஜதியுடனும் அழகாக ஆடினார் அர்ப்பிதா. சிவன்மீதும் கிருஷ்ணன்மீதும் அமைந்த பதங்களுக்குப் பின்னர், தில்லானா மற்றும் மங்களத்துடன் நிறைவு செய்தார்.
இந்துமதி கணேஷ் , ரித்திகா ரவி ஆகியோரின் நட்டுவாங்கத்தில், ஆஷா ரமேஷ் (பாட்டு), விக்ரம் ரகுகுமார் (வயலின்), ஆதித்யா கணேஷ் (மிருதங்கம்), அஷ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) ஆகியோர் நேர்த்தியாகப் பின்னணி இசை வழங்கினர்.
நடனம் கற்பித்த குருவாக மற்றுமல்லாமல், நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அறியச் செய்து, அவற்றைப் பின்பற்ற வழிகாட்டியாக இருந்த குருவைக் கெளரவிக்க, முன்னர் அரங்கேற்றம் கண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவியர் பல மாநிலங்களிலும் இருந்து வந்திருந்து இந்துமதி கணேஷைக் கெளரவித்தனர். நாட்டிய சாஸ்திரத்தை முறையாகப் பயின்று பல தலைமுறைகளுக்குப் பயிற்றுவித்து வரும் குரு இவர் 'நாட்ய மயூரி', 'நாட்ய கலாரத்னா' போன்ற கௌரவங்களுக்கு உரித்தானவர்.
நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |