நாதநிதி: 30வது ஆண்டு விழா
ஆகஸ்ட் 3, 2019 அன்று, குரு ஸ்ரீகாந்த் சாரி நடத்திவரும் நாதநிதி இசைப்பள்ளி, தனது 30ம் ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஸ்ரீகாந்த் வீணை இசையை விரிகுடாப் பகுதியில் கற்பித்து வருகிறார். இந்த விழா, 'ராமபக்தி' என்ற கருத்தில் அமைந்திருந்தது. தியாகராஜரின் கிருதிகளில் மிளிரும் ராம பக்தியை நிகழ்ச்சி பிரதிபலித்தது. கிருதிகளை ஆராய்ந்து சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதசேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஆத்மநிவேதனம், விராஜம், தன்மயத்வம் மற்றும் முக்தி என்ற முக்கியமான அம்சங்களை விவரிக்கும் கீர்த்தனைகளை ஸ்ரீகாந்த் சாரி தேர்ந்தெடுத்திருந்தார்.

பல்வேறு படிநிலைகளில் இருக்கும் மாணவர்கள் லால்குடி பாணியில் கிருதிகளை வாசித்தார்கள். குரு ஸ்ரீகாந்த் பேசுகையில், குரு லால்குடி ஜெயராமனின் முன்னோர்கள் தியாகராஜரிடம் இசை கற்றுக் கொண்டதாகவும், தமது இசைப்பள்ளியின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவில் தியாகராஜரின் பக்தி ததும்பும் இசை மேடையேறுவது பொருத்தம் என்றும் கூறினார்.

ஸ்ரீகாந்த் எல்லா மாணவர்களுடனும் சேர்ந்து வாசித்தார். ஸ்ரீராம் பிரம்மானந்தம் தனது சிஷ்யர் அருண் ஸ்ரீராமுடன் சேர்ந்து மிருதங்கம் வாசித்தார். சென்னையிலிருந்து டெல்லி சுந்தர்ராஜன், வசுதா ரவி, எஸ்.வி. ரமணி ஆகிய இசைக் கலைஞர்கள் வந்திருந்தார்கள்.

அரங்கத்தின் முன்னறையில் அழகான ராமர் மண்டபம் ஒன்று அமைத்து அதில் ராமபக்தியை வெளிப்படுத்தும் பல்வேறு கலைப் பொருட்களை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தார்கள். நிகழ்ச்சியின் உச்சமாக, இறுதியில் குரு ஸ்ரீகாந்தை ஓர் ஆசனத்தில் அமர்த்தி, சால்வை போர்த்தி, ஒரு தாம்பாளத்தில் அவருடைய பாதங்களை வைத்து, ரோஜா மலர்களைத் தூவி நமஸ்காரம் செய்தது நெகிழ்ச்சியைத் தந்தது. இந்த கௌரவத்தை, குருவுக்கு எதிர்பாராமல் செய்து மகிழ்ச்சியில் அவரை ஆழ்த்தினார்கள்.

நிருபமா வைத்யநாதன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com