நிருத்யநிவேதன்: நிருத்ய சமர்ப்பணம்
ஆகஸ்ட் 10, 2019 அன்று, சான் ஹோசே நகரின் ஹூவர் அரங்கத்தில், 20 நடனங்களை, நிருத்ய நிவேதன் நாட்டியப் பள்ளி மாணவ மாணவியர் 'நிருத்ய சமர்ப்பணம்' என்ற தலைப்பில் தொகுத்து வழங்கினர்.

நடராஜப்பெருமானை வழிபட்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் பேசிய நிருத்யநிவேதனத்தின் நிறுவனர் - கலை இயக்குனர் குரு புவனா வெங்கடேஷ், மாணவ மாணவியரின் வாழ்வில் கலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். குரு புவனா விநாயகனைத் துதித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். முதலாவதாக, பள்ளி மாணவியர் ஆணிகா மற்றும் ஸ்ரீநிதியின் மல்லாரி நடனம் இடம்பெற்றது. அடுத்து, இளஞ்சிறார் ஆடிய "செத்தி மந்தாரம் துளசி", அலாரிப்பு, திருப்புகழின் "ஏறு மயிலேறி", மற்றும் மீராவின் "கிரிதாரி" பார்த்தோரை ஈர்த்தன.

பள்ளியின் முதன்மை நடனக் கலைஞரும் குரு புவனாவின் முதல் மாணவியும் மகளுமான ஹர்ஷிதா வெங்கடேஷ் ஆடிய ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் "அம்பா ஸ்துதி" கண்டோர்க்குக் களிப்பூட்டியது. கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம் மற்றும் பிருந்தாவனி வேணு ஆகியவற்றில் அவர் தெய்வீகமான காரணாக்களை உபயோகித்து ஆடியது கண்ணுக்கு விருந்து.

அடுத்து, பள்ளியின் மூத்த மாணவியரான நந்திதா, நவ்யா மற்றும் நிலா ஆகியோர் ஒருமித்து ஆடிய "ஆனந்த நர்த்தன கணபதிம்" அழகாகக் கரி ஹஸ்த கரணத்தை வெளிப்படுத்தியது. இம்மூவரும் பந்தநல்லூர் பாரம்பரியத்தில் ஆடிய வர்ணம் தத்ரூபமாய் அமைந்திருந்தது. ஸ்ரீமான் நாராயண ஐயரின் வரிகளில் சிம்மேந்திர மத்யமத்தில் சஞ்சாரி பாவத்தில் அமைந்திருந்த இந்தப் பாடலின் நடனம், மஹிஷாசுர மர்தினிக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே நடந்த யுத்தத்தை நேர்த்தியாக, உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியது.

இளம் மாணவ மாணவியர் ஆடிய சாவேரி ஜதீஸ்வரம் , திருப்பதி வெங்கடாசலபதியை துதிக்கும் "ஆதிகோகுழுவை", முருகனைத் துதிக்கும் காவடிச்சிந்து ஆகியவை சிறப்பாக இருந்தன.

புவியின் நான்கு பருவ காலங்களையும் நடனத்தில் கொண்டாடும் ஒரு புதினத்தையும் அரங்கேற்றினார் குரு புவனா. வசந்த காலத்தின் புத்துணர்வையும், வெயிற் காலத்தின் ஆற்றலையும், இலையுதிர் காலத்தின் சில்லென்ற காற்று மற்றும் மழையையும் , குளிர்காலப் பனியின் புனிதத்தையும் நடன பாவங்களின் மூலம் வெளிப்படுத்தியது பரவசப்படுத்தியது. இறுதியாக, இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாய் குரு புவனாவின் "வந்தே மாதரம்" பாடலுக்கான நாட்டியம் மெய்சிலிர்க்க வைத்தது.

நிகழ்ச்சியின் முடிவில் பேசிய குரு புவனா, பணிவோடு சேர்ந்த காலை ஞானமே ஒருவரின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்று எடுத்துரைத்தார். நிகழ்ச்சியைக் காண வந்திருந்த தாத்தா பாட்டியினரை மேடைக்கு அழைத்து குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்த்துக்களையும் அவர்கள் கையாலேயே பரிசுகளையும் வழங்க வைத்தது தனிச்சிறப்பாகும்.

ஜகந்நாதன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com