ஆகஸ்டு 10, 2019 அன்று, திருமதி. காயத்ரி சுப்ரமணியனின் (நிறுவனர், K.A. K.A. Academy of Indian Music & Dance, மேரியட்டா, அட்லாண்டா) மாணவியரான ஷ்ரேயா கண்ணா மற்றும் சமிக்ஷா ஸ்ரீராமின் பரதநாட்டிய அரங்கேற்றம், அட்லாண்டாவில் உள்ள போர்ட்டர் ஸ்டான்ஃபோர்டு கலையரங்கத்தில் நடைபெற்றது.
கடவுளுக்கும், குருவுக்கும், ரசிகர்களுக்கும் புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி, நளினத்தோடு ஆடிய அலாரிப்பு, மனதை மலரச் செய்தது. அடுத்து வந்த "தண்டை குலுங்க, சதங்கை முழங்க" சப்தத்தில் முருகனாக சமிக்ஷா, கிழவர் வேடமிட்டு வந்து சீண்ட, வள்ளியான ஷ்ரேயா, கோபம் கொண்டு, பயந்து, பின் நாணி, முருகனை மணந்ததைச் சித்திரித்தனர். பின் வந்த சீதா கல்யாண வர்ணமான "ராமன் ரகுவீரன்" பாடலுக்கு, சிவ தனுஷை முறிக்கையில் ராமனாகவே மாறினாள் ஷ்ரேயா. எப்படியாவது ராமனை மணந்துவிட வேண்டுமென்ற தவிப்பும், காதலும், நாணமும் காட்டிச் சீதையாகவே மாறிச் சமிக்ஷா மயங்கி நின்றாள்.
அடுத்து வந்த "என்ன தவம் செய்தனை" பாடலுக்குத் தனி நடனத்தில் ஷ்ரேயா தாய்மை ததும்ப யசோதையாகவும், குறும்புக்காரக் கண்ணனாகவும் இரு வேறு உடல் மொழிகளுடன் ஆடினாள். "ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண" என்ற அடுத்த பாடலுக்கு நடராஜரும் மலையரசியும் சேர்ந்து ஆட, கனகசபையே கண்முன் வந்தது. மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக் கனாக் கண்ட ஆண்டாளாக மாறினாள் சமிக்ஷா "வாரணம் ஆயிரம்" பாடல் தனி நடனத்தில். இந்தப் பாடலை சமிக்ஷாவின் அன்னை தீபா ஸ்ரீராம் பாட, மகளை மணக்கோலத்தில் கண்ட தீபாவின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!
தொடர்ந்து வந்த காளிங்க நர்த்தனத் தில்லானாவிவைத் திருமதி காயத்ரி வசந்த் பாட, குரல் வளத்திலும் நடனத்திலும் அனுபவித்த மக்கள் எழுந்து நின்று பாராட்டினர். அடுத்து வந்தது குறத்தி நடனம். மங்களத்துடன் அரங்கேற்றம் இனிதே முடிந்தது.
நாட்டியப் பயிற்சியின் முதல் பகுதியை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழை, குரு காயத்ரி சுப்ரமணியன் வழங்கினார். திருமதி காயத்ரி வசந்த் (குரலிசை), திருமதி காயத்ரி சுப்ரமணியன் (நட்டுவங்கம்), திரு C.V. சுப்ரமணியன் (வயலின்), திரு சுரேஷ் கோதண்டராமன் (மிருதங்கம்), செல்வன் அர்ச்சித் சுரேஷ் (கஞ்சீரா) ஆகியோரின் வலுவான துணை அரங்கேற்றத்திற்கு உயிரூட்டியது. பெற்றோர் ஸ்ரீதேவி - கண்ணன் மற்றும் தீபா - ஸ்ரீராம் நன்றி கூறினர்.
மும்பை திருமதி பத்மினி ராதாகிருஷ்ணன் அவர்களின் சிஷ்யையான திருமதி காயத்ரி சுப்ரமணியனிடம் கடந்த 12 ஆண்டுகளாக நாட்டியம் பயின்று வரும் இவர்கள் ஒன்றுவிட்ட சகோதரிகள் ஆவர். கர்நாடக சங்கீதத்திலும், பியானோ வாசிப்பதிலும் நல்ல திறமை கொண்டவர்கள். மேரியட்டா தமிழ்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பை முடித்துத் தேர்ச்சியடைய இருக்கிறார்கள். கேம்ப்பெல் (IB) மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் படிக்கும் சமிக்ஷாவும், வீலர் (Magnet) மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் ஷ்ரேயாவும் இறையருளால் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
வலைமனை: www.kaacademy.com
ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |