ஆகஸ்ட் 17, 2019 அன்று குரு ஷிரிணி காந்த் அவர்களின் சிஷ்யையும், திருமதி குஸுமா - திரு வெங்கி வட்டினேனி தம்பதியரின் மகளுமான செல்வி நிகித்தாவின் பரதநாட்டிய அரங்கேற்றம், சான்ட க்ளாராவில் உள்ள மிஷன் சிட்டி சென்டர் நிகழ்கலை அரங்கில் இனிதாக நடந்தேறியது. குரு ஷிரிணி காந்த் விரிகுடாப் பகுதியில் மைத்ரி நாட்யாலயா நடனப்பள்ளியின் மூலமாக பரதமும், குச்சிபுடி நடனமும் கற்பித்து வருகிறார்.
நிகழ்ச்சி டாக்டர் வாசுதேவன் ஐயங்கார் அவர்களின் இனிமையான குரலில் கனகாங்கி ராகத்தில் தியாகராஜரின் "ஸ்ரீகணநாதம் பஜாம்யகம்" என்கிற கிருதியுடன் துவங்கியது. திருமதி அபர்ணா சர்மா இயற்றிய அம்ரிதவர்ஷினி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த புஷ்பாஞ்சலியிலும், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பிருந்தாவனி ராகம், ரூபக தாள "ரெங்கபுர விஹார" என்கிற கிருதியிலும் நிகித்தாவின் நடனம் அரங்கத்தை நிமிர்ந்து உட்கார வைத்தது. திஸ்ரத்தில்அமைந்த அலாரிப்பில் திறனைக் காட்டி மேலும் வியக்க வைத்தார். நிகித்தாவின் தாளப்பரிமாணத் தேர்ச்சியும், பாவம் கொப்பளிக்கும் முகபாவமும், அபிநய நேர்த்தியும் சுப்பராய சாஸ்திரியின் ரீதிகௌளை ராக, மிச்ரசாபு தாள "ஜனனி நினுவினா" கிருதியில் பிரமிப்பூட்டின. பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் இயற்றிய ஜம்ப தாளத்தில அமைந்த வசந்தா வர்ணத்திற்கு, நிகித்தா தன் சலங்கை ஜாலத்தால் மேலும் வர்ணமேற்றினாள்.
நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் சம்பு புராணத்தில் இருந்து எடுத்த சூர்யாஷ்டகம், ஸ்வாதித் திருநாள் இயற்றிய "நிருத்யதி நிருத்யதி" ஆகியவற்றுக்கு ஆடி, பரதக்கலையின் சாராம்சத்தை பாவங்கள் மூலம் விளக்கியது குறிப்பிடத்தக்கது. கதனகுதூகலத்தில் அமைந்த "ரகுவம்ச சுதா", ராகமாலிகாவில் "ரஞ்சனி ம்ருதபங்கஜ லோச்சனி" ஆகியவற்றை இடைவேளையில் வாசித்து மனதைக் குளிர்வித்தனர் இசைக்குழுவினர்.
அன்னமய்யாவின் "முத்துகாரே யசோதா" கிருதிக்கு, கால்கள் தரையில் படுகின்றனவா என்று வியக்குமளவிற்கு பூமிக்கும் வானுக்கும் குதித்து ஆடியது அரங்கை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியின் சிகரமாக பாலமுரளிகிருஷ்ணா இயற்றிய பெஹாக் ராகத் தில்லானா அமைந்திருந்தது. "கோவிந்தா ஹரி கோவிந்தா" என்ற மங்களத்துடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
தஞ்சாவூர் கேசவன் (மிருதங்கம்), லட்சுமி பாலசுப்ரமணியம் (வயலின்), அஸ்வின் கிருஷ்ணகுமார் (குழலிசை) ஆகியோர் நிகழ்ச்சிக்குப் பெரும் பலம்.
பிரசன்னா நாராயணன், சான் ஹேசே, கலிஃபோர்னியா |