மே மாதம் 10-ம் தேதியிலிருந்து 31-ம் தேதிவரை வாக்காளர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்றது. சுமார் 17 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர். கடைசி நாளான மே 30-ம் தேதி மட்டும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்கள், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரம் புதிய வாக்காளர்கள், விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. இதனைச் சரிபார்க்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் வாக்காளர்கள் சேர்ப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தி.மு.க. மற்றும் அதன் தோழமை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. கடைசி நாளன்று மட்டும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் மனுவை ஆளும் அ.தி.மு.க. அளித்துள்ளது சந்தேகத்திற்கிடமானது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் தி.மு.க. முறையிட்டது. இது குறித்து தில்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றையும் அளித்தது. அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க.வினரால் மொத்தமாகக் கொடுக்கப்பட்ட 13 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்புக்கான விண்ணப்பங் களைத் தலைமைத் தேர்தல் ஆணையம் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தீர்மானம் ஒன்றை இயற்றியது.
இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தமிழகம் வந்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றைச் சென்னையில் நடத்தினர். அப்போது 234 தொகுதிகளிலும் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதுமட்டுமல்லாமல் பொய்யான தகவல்களைத் தந்து போலி வாக்காளர்களைச் சேர்ப்பவர்கள் தனி நபர்களாக இருந்தாலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் மத்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதியும் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, போலி வாக்காளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.
இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் தேர்தல் அதிகாரிகள் வெளியிடக்கூடாது என்று தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டு மல்லாமல் சென்னை உட்பட 6 மாநகராட்சி களில் கத்தை கத்தையாக விண்ணப்பம் பெறுவதற்கும் மத்தியத் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.
தமிழக அமைச்சரும் அ.தி.மு.க. தேர்தல் குழுச் செயலருமான ஓ. பன்னீர்செல்வம் வாக்காளர் பட்டியலில் மொத்தமாகப் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கத் தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் திடீரென்று தாக்கல் செய்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த வாரம் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில் 7 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாநகராட்சி ஆணையர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளிடம் வழங்கப்பட்ட 999 படிவத்தைச் சரிபார்த்து ஒப்படைக்க ஜூன் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
பல்வேறு குழப்பங்களுக்கு நடுவில் தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலின் மீது மக்களிடையே நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. இதை தேர்தல் ஆணையம் விரைவில் சரி செய்ய வேண்டும் என்பதுதான் இப்போது வாக்காளர்களின் எதிர்பார்ப்பு!.
தொகுப்பு: கேடிஸ்ரீ |