தெரியுமா?: தங்கமங்கை P.V. சிந்து
பூசர்ல வெங்கட சிந்து, சிறகுப்பந்து உலகச் சேம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சுவிட்ஸர்லாந்தின் பேஸெல் நகரில் நடந்த இறுதிச்சுற்றுப் போட்டியில் ஜப்பானின் நோஸொமி ஒகூஹராவை 21-7, 21-7 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார் சிந்து. "நீங்கள் பெற்ற இந்த வெற்றி பல தலைமுறைகளுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும்" எனத் தமது வாழ்த்துரையில் பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.

முன்னர் 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' மற்றும் 'பத்மஸ்ரீ' விருதுகள் கொடுத்து இவரை பாரதம் கௌரவித்துள்ளது. 2018ல் 8.5 மில்லியன் டாலரும், 2019ல் இதுவரை 5.5 மில்லியன் டாலரும் வென்றுள்ள இவர், Forbes பத்திரிகையின் மிக அதிகம் சம்பாதிக்கும் வீரங்கனைகள் பட்டியலில் இவ்விரண்டு ஆண்டுகளிலும் இடம்பெற்றுள்ளார்.

இவரது பெற்றோர் P.V. ரமணா மற்றும் P. விஜயா இருவருமே தேசிய அளவில் கைப்பந்தாட்ட வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தமது அபாரமான ஓட்டத்தால் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த, 'பையொலி எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்பட்ட P.T. உஷா, "சிந்துவின் சாதனைகளுக்குப் பின்னால் வலுவான தூண்களாக நிற்பது சிந்துவின் பெற்றோர்" எனக் கூறியுள்ளார்.



© TamilOnline.com