குருக்ஷேத்திரத்தில் போரிட்ட இரண்டு பக்கத்தினருக்கும் பீஷ்மர்தான் பிதாமகர். அவர் கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கி எட்டு நாட்கள் போர் நடத்தினார். ஆனால் வெற்றி கண்ணுக்குத் தெரியவில்லை. கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன் அவரை அணுகி இன்னும் உக்கிரமாகப் போரிட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தான். "நாளை எனக்கு வெற்றி அல்லது வீரமரணம்" என்றார் பீஷ்மர்.
இதனை அறிந்த கிருஷ்ணர், பாண்டவரின் தேவியும் தன்மீது மிகுந்த பக்தி கொண்டவளுமான திரௌபதியைத் தன்னோடு நள்ளிரவில் பீஷ்மரின் பாசறைக்கு வரச் சம்மதிக்க வைத்தார். துக்கத்தில் இருந்த அவளுக்குப் பிரார்த்தனை ஒன்றே தைரியம் கொடுத்தது, அந்தப் பிரார்த்தனையால் பிரபுவும் மனமிரங்கினார். பீஷ்மரின் பாசறைக்குள், முகத்தைத் துகிலால் மூடிக்கொண்டு அவள் நுழைந்தாள். காலணிச் சத்தத்தில் காவலர்கள் விழித்துக்கொண்டு விடக்கூடாது என்பதற்காகக் கிருஷ்ணர், அவளைப் பாத அணிகளைக் கழட்டிவிடக் கூறியிருந்தார். அந்தக் காலணிகளை ஒரு பட்டுத் துணியில் சுற்றியெடுத்துத் தனது கக்கத்தில் வைத்துக்கொண்டார் கிருஷ்ணர்!
பாசறைக்குள் நுழைந்த திரௌபதி பீஷ்மரின் பாதங்களில் விழுந்தாள். வழக்கம்போல அவரும் "தீர்க்க சுமங்கலி பவ" (சுமங்கலியாக நெடுங்காலம் வாழ்) என்று வாழ்த்தினார். இந்த ஆசீர்வாதம் கிடைத்ததும் தனது முகத்திரையை விலக்கினாள் திரௌபதி. தனது கணவன்மாரான பாண்டவ சகோதரர்களை அவர் கொல்லக்கூடாது என்று அவரிடம் வேண்டினாள். இந்த யுக்திக்குப் பின்னே கிருஷ்ணர் இருக்கவேண்டும் என்பதை பீஷ்மர் அறிந்துகொண்டார். தனக்கு மரணம் நெருங்கிவிட்டதை அவர் புரிந்துகொண்டார். வாசலில் கிருஷ்ணர் நிற்பதைப் பார்த்துவிட்டு, "நாம் எல்லோரும் அவன் கையில் பொம்மைகள்" என்று கூறினார். கிருஷ்ணர் வைத்திருக்கும் துணிமூட்டையில் என்ன இருக்கிறதென்று கேட்டார். தனது பக்தை ஒருத்தியின் பாத அணிகளைச் சுமந்திருப்பதாக அவர் கூறினார்!
அவனிடம் நம்பிக்கை வையுங்கள், அவன் கைவிட மாட்டான். அவன் வெற்றியை அடையும்வரை உங்களைப் பாதுகாத்து, வழி காட்டுவான். ஆழ்ந்த பக்தி, அசையாத நம்பிக்கை இவை கருணையைப் பெற்றுத் தராமல் போகாது.
சந்தேகமின்றிச் சரணடையும் விசுவாசம் திரௌபதிக்கு இருந்தது. அவள் அர்ப்பணிப்போடு வாழ்க்கை நடத்தினாள். அவளது ஐந்து கணவர்களும் பஞ்சப் பிராணன்கள், அவைதாம் உடலை உயிர்ப்பித்துச் செயல்படச் செய்கின்றன. இடையறாத விழிப்புடன் அந்தப் பிராணன்களைப் போஷிக்கும் சக்தி அவள்தான்.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |