துருவங்கள்
நெருப்பாய் அவனும்
நீராய் அவளும்.

எதிரெதிர் துருவங்கள்
ஈர்த்திடும் நியதியில்
வாக்குவாதத்தில் தொடங்கி
அன்பென மயங்கி
வாழ்க்கையில் இணைய
முடிவெடுத்த வேளையில்
சொல்லிக் கொண்டார்கள்
மோதிக் கொண்டது
வலிக்கவில்லை என.

கைகள் கோத்து
தொடங்கிய பாதையில்
கனலென வார்த்தைகளால்
சுட்டெரிப்பதில் அவனும்
அவமதிப்பின் அடி ஆழத்துக்கு
அவனை இழுத்துத்
துடிக்க வைப்பதில்
தீவிரமாய் அவளும்.

சிறிது தூரம்கூடத்
தாக்குப் பிடிக்க முடியாத
பயணத்தில்
விசும்புகிறாள் தன்னை அவன்
கொல்ல முயல்வதாக.

கூச்சலிடுகிறான் அவன்
தண்ணீருக்கடியில் தான்
மூச்சுத் திணறுவதாக.

படம், கவிதை: ராமலக்ஷ்மி,
பெங்களூர்

© TamilOnline.com