ஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-11)
அம்மா கீதா, அத்தை பாலாவுடன் பேசிச் சம்மதம் வாங்கிய பின்னர், அருண் கடகடவென்று குளித்து முடித்து எர்த்தாம்டனில் உள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு செல்லத் தயாரானான். அம்மாவும் வரட்டும் எனக் காத்திருந்தான். ஹாலில் இருந்த முகம்பார்க்கும் கண்ணாடியில் தான் எப்படி அறிமுகமே இல்லாத ஒரு நபரிடம் அணுகிப் பேசுவது என்பதை ஒத்திகை செய்து கொண்டிருந்தான்.

'ஹலோ மேடம், நான் அருண். இந்தக் கடையில கிடைக்கிற ஆப்பிளோட பளபளப்புபற்றி என்ன நினைக்கறீங்க?' என்று தனக்குத்தானே பேசிப் பார்த்தான். திருப்தி ஆகவில்லை.

'ஹலோ, இந்த ஆப்பிள் உங்க முகத்தையே ஒரு கண்ணாடிபோல காட்டுதே. அதைப்பத்தி என்ன நினைக்கறீங்க?' என்று வேறு விதமாகச் சொல்லிப் பார்த்தான். இது பிடித்திருந்தது. அவனுள் இருந்த நடிகன் வெளிப்பட்டான். வேறு வேறு தொனியில், வெவ்வேறு விதத்தில் பேசத் தயார்படுத்திக் கொண்டான். வீட்டிலுள்ளவர்கள் தன்னைக் கவனிக்கிறார்கள் என்று அவன் உணரவேயில்லை.

"And the Oscar for best actor goes to…" என்று ஒரு குரல் கேட்டது. அருண் சட்டென்று திரும்பிப் பார்த்தான். எல்லோரும் தன்னை ரசிப்பதைப் பார்த்துச் சற்று வெட்கமானது.

"கதை, வசனம், டைரக்‌ஷன் ஆஸ்கர் விருது, நம்ம அருணுக்குத்தான்" என்று சொல்லி அரவிந்த் விசில் அடித்தான். பக்கரூ ஒரு கத்து கத்தி கலகலப்பில் கலந்துகொண்டது.

அரவிந்தோடு அவன் அப்பா அஷோக்கும் சேர்ந்துகொண்டார். "அருண், இது உண்மையிலேயே ஆஸ்கர் பெர்ஃபார்மென்ஸ் தான்" என்றார். அருண் விருது வாங்கியதுபோல், சிரித்துக்கொண்டே தலை வணங்கினான்.

புறப்படுவதற்கான ஏற்பாடுகளை முடித்துவிட்டு கீதா அருணைப் பார்த்து, "போலாமா?" என்று கேட்டார். அருண் அதற்குத் தலை ஆட்டினான்.

"அப்பா, மாமா, நானும் அம்மாவும் ஆப்பிள்பத்தி இன்னும் தெரிஞ்சுக்க சூப்பர் மார்க்கெட்டுக்குப் போறோம்" என்று அருண் சொன்னான். முன்னமே அனுவும் அரவிந்தும் கூட வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அருணின் அப்பா ரமேஷுக்கு அப்போதுதான் அது ஒரு விளையாட்டல்ல என்பது புலப்பட்டது. அருண் உண்மையிலேயே ஆப்பிளின் பளபளப்பு பற்றி விசாரிக்கப் போகிறான்! ரமேஷ் கீதாவைக் கோபத்துடன் பார்த்தார்.

"என்ன இந்த முட்டாள்தனம் இன்னுமா போகலை?" என்று ரமேஷ் சத்தமாகக் கேட்டது அறையிலிருந்த அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. ரமேஷின் கோபம் எப்படிப்பட்டது என்று கீதாவுக்குத் தெரியும். அது பிரஷர் குக்கர்போல.

அந்த இக்கட்டான சூழிநிலையில் ஒரு புன்னகையோடு பாலா கீழிறங்கி வந்தார். ரமேஷைப் பார்த்து புன்னகைத்தவாறே, "ரமேஷ். நான்தான் அருணை இப்படி செய்யச் சொன்னேன். இது நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்" என்று சொல்லிவிட்டு, அருணைப் பார்த்து, "வா கண்ணா, நானும் உன்னுடன் இந்தப் புனிதப் போரில் கலந்து கொள்கிறேன்" என்றார்.

பாலாவே இப்படி ஆதரவு கொடுத்ததும் ரமேஷ் "என்ன போராட்டம்? என்ன நடக்குது இங்க? யாராவது எனக்குப் புரியற மாதிரி சொல்றீங்களா?" என்று இடிக்குரலில் கத்தினார்.

அஷோக் நிலமையைப் புரிந்துகொண்டு, அனுவையும் அரவிந்தையும் வீட்டுக்கு வெளியே அழைத்துப் போனார். கீதாவும் பாலாவும் அருணுக்கு ஆதரவு தருவது என்று முடிவெடுத்தார்கள். எப்படியாவது ரமேஷை சமாளிக்க உறுதி பூண்டார்கள்.

அருண் தைரியத்துடன், நிதானமாக அப்பாவைப் பார்த்துப் பேசினான். "அப்பா, சூப்பர் மார்க்கெட்ல நாம வாங்கற ஆப்பிளில் இருக்கும் பளபளப்பு ரசாயன மெழுகு தடவப்பட்டதனால் என்று சந்தேகப்படறோம். அதில் என்னென்ன கலந்துள்ளது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். அதனால..."

"அதனால என்ன? நீ பெரிய சமூக சேவகன் மாதிரி மத்தவங்க வாங்குறத தடுக்கப் போறியா? நீங்க எல்லோருமா சூப்பர் மார்க்கெட் வாசல்ல நின்னு கொடிபிடிக்கப் போறீங்களா?" ரமேஷ் கொந்தளித்தார். "என்ன, என்ன, பண்ணப்போறீங்க? என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க?" என்று மிகுந்த கோபத்தில் பேசியது ரமேஷுக்கு மூச்சிரைத்தது. "இந்தப் புரட்சிக்காரனுக்கு இரண்டு அம்மாக்களின் ஆதரவு வேறயா?"

கீதா பாலாவைப் பார்த்து "பாலா, எங்க வீட்டில ஹோர்ஷியானா அப்படின்னாலே கொஞ்சம் பயம்தான். ஏற்கனவே ரொம்ப சண்டை போட்டிருக்கோம். ரமேஷ் சத்தம் போட்டதுக்கு மன்னிச்சிக்கோங்க". அருண் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான். "அப்பா, இவ்வளவு ஆனதுக்கப்புறம் இதை அப்படியே விடக்கூடாது. தீர விசாரிக்கணும்" என்றான்.

அருண் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார் ரமேஷ். ஒரு கணம் கண்ணை மூடி யோசித்தார். சரி சூப்பர் மார்க்கெட் போகும் விஷயம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதுவுமில்லாமல், எல்லாம் கைமீறிப் போய்விட்டன.

"என்னமோ பண்ணிக்கோங்க, போங்க" என்று சொல்லிவிட்டு வெறுப்போடு கீதாவை முறைத்துவிட்டுக் கிளம்பிப் போனார்.

"பாலா அத்தை, நீங்கள் விரும்பினால் எங்களோட வாருங்கள். பாவம், எங்களால உங்க கோடை விடுமுறை பாழாகுது" என்று அருண் வருத்தம் கலந்த குரலில் கூறினான். பாலா அருணின் விவேகத்தை மெச்சினார். இந்தச் சிறுவன் தன் லட்சியத்தை அடையும் முயற்சியில் இருக்கிறானா, இல்லை அறியாமையில் பேசுகிறானா? பாலா யோசனையில் ஆழ்ந்தார். வந்த இடத்தில் இப்படியொரு ரகளையைக் கிளப்பிவிட்டோமே என்று வருந்தினார்.

கீதா, "அண்ணி, நீங்கள் வீட்டில மத்த வேலையைப் பாருங்க. நானும் அருணும் சீக்கிரமா திரும்பி வந்துருவோம்" என்றார். "ஒண்ணும் கவலைப்படாதே கீதா. நான் ரமேஷை சமாதானப்படுத்திக்கிறேன். நீ நம்ம செயல்வீரனோடு போய்ட்டு வா" என்று ஜோக் அடித்தார் பாலா.

சூப்பர் மார்க்கெட் பார்க்கிங் லாட்டில் இடம் கிடைக்க சிறிது நேரம் ஆயிற்று. அருண் பொறுமை இழந்து, அம்மாவிடம் காரை நிறுத்தச் சொல்லி, கதவைத் திறந்துகொண்டு ஓடினான். கீதா பார்க் செய்துவிட்டு உள்ளே போகும் நேரம், அருண் ஆப்பிள் இருந்த பகுதியில் ஒரு மூதாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தான். கீதா அருணருகில் போய் நிற்கலாமா என்று நினைத்தார். பிறகு, ஓரமாய் நின்று அவன் பேசுவதைக் கவனிக்கத் தீர்மானித்தார்.

அருண் ஆப்பிளைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பித்ததும், அவனைச் சுற்றிக் கூட்டம் கூட ஆரம்பித்தது. கீதாவிற்கு அருணின் நாவன்மை தெரியவந்தது.

கீதா மெல்ல, பெருமை கலந்த புன்சிரிப்புடன் அருண் இருந்த பக்கம் நடந்து சென்றார்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்

© TamilOnline.com