சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில், திருச்சி அருகே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 50 கி.மீ. தூரத்திலும், பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
தலப்பெருமை: சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவில் 1000 வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த கோயில். குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்டது. மலைகளும், ஏரியும், தோப்பும், வயல்களும் சூழ்ந்த மனதிற்கினிய சூழலில் ஊரின் எல்லையில் அமைந்துள்ளது. தீர்த்தம் : திருக்குளம். தலவிருட்சம் : மருத மரம்.
கண்ணகி மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி இத்தலம் வந்துதான் அமைதி கொண்டாள் எனச் செய்திகள் கூறுகின்றன. ஆரம்பத்தில் சிறுவாச்சூரின் வழிபடு தெய்வம் செல்லியம்மன் ஆகும். புராணச் செய்திகளின்படி ஒரு மந்திரவாதி தனது மந்திர சக்தியால் செல்லியம்மனை தீய சக்திகளால் கட்டுப்படுத்தி, தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்தான். ஒரு சமயம் மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு வந்து ஒரு வெள்ளிக்கிழமை இரவு தங்க செல்லியம்மனிடம் இடம் கேட்கிறாள். செல்லியம்மன், மந்திரவாதி தன்னைத் தொல்லைப்படுத்துவதைப் பற்றிக் கூறவும், அதற்கு மதுரை காளியம்மன், தான் அதற்கு வழி செய்வதாகக் கூறித் தங்குகிறாள். அன்னை மந்திரவாதியை எதிர்த்து அழித்து விடுகிறாள். செல்லியம்மன், அன்னையின் ஆற்றலைக் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் கோவிலிலிருந்து அடியார்களுக்கு அருள்புரிய வேண்டுகிறாள். தான் பெரியமலைக்குச் சென்று விடுவதாகவும், ஆனால் எப்போதும் தனக்கே முதல் மரியாதை தரவேண்டும் என்றும் கேட்டதற்கு இணங்க, மதுரை காளியம்மனும் அதற்கு ஒப்புக்கொள்கிறாள். பூஜையின்போது மலையை நோக்கித் தீபாராதனை காட்டிய பின்பு, மதுரகாளி அம்மனுக்குத் தீபாராதனை காண்பிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சிறுவாச்சூர் தலத்திற்கு வந்த மதுரை காளியம்மன், திங்கட்கிழமை பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள். திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கோவில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன், செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாக ஐதீகம்.
மதுரை காளி அம்மன் என்ற திருநாமம் மருவி மதுரகாளியம்மன் ஆனதாகக் கூறப்படுகிறது. அன்னை நான்கு திருக்கைகளில் உடுக்கை, பாசம், சூலம், அட்சயபாத்திரம் ஆகியவற்றை ஏந்தி, இடது திருவடியை மடித்து சிம்மத்தின் மீது வலது திருவடியை ஊன்றி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். திருவடியில் அரக்கர்கள் இல்லாததால் அழிக்கும் தொழில் இன்றி அருளும் நிலையிலேயே காட்சி அளிக்கிறாள். அம்மன் நான்கடி உயரத்தில் வடக்கு நோக்கி அருளுகிறாள். பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. வாரத்தில் திங்கள், வெள்ளி கிழமைகளில் மட்டுமே கோவில் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போதும் கோவில் திறக்கப்படும்.
இத்தலத்தில் மாவிளக்கு ஏற்றுதல் முக்கிய நேர்த்திக்கடன். பிரார்த்தனை செய்துகொண்டு வயிறு, கால், கை என அந்தந்த பாகத்தில் மாவிளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். அம்மனுக்கு அங்கப்பிரதட்சிணம், அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் ஆகியவற்றைச் செய்கின்றனர். சிறுவாச்சூர் என்றாலே மாவிளக்கு நேர்த்திக்கடன் புகழ்பெற்றதாகும்.
சித்திரைத் திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சூடுதலில் தொடங்கும். அடுத்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டி 13 நாள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வந்து தரிசிப்பர். மலை வழிபாடு, திருக்கல்யாணம், வெள்ளிக்குதிரை வாகனம், திருத்தேர் ஆகியன முக்கியத் திருவிழாக்கள். இந்நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். மேலும் ஆங்கிலப் புத்தாண்டு, ஆடி 18, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதசி, பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி நாட்களிலும் ஆலயம் திறந்து, வழிபாடு உண்டு. தலத்தின் காவல் தெய்வம் ஐயனார்.
காலை 8.00 மணிக்குச் சன்னிதி திறக்கும். 11.00 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8.00 மணிவரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். கல்யாண வரம், குழந்தை வரம், நோய் நிவாரணம், வழக்குச் சிக்கல் தீர, காணாமல் போன பொருள் கிடைக்க, இங்குள்ள அம்மனை வழிபட்டு வேண்டிக் கொண்டால் தீர்வு உடனடியாகக் கிடைக்கிறது.
அம்மன் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகஇருக்கிறாள். பக்தர்களின் அனைத்து வேண்டுகோளையும் மதுரகாளியம்மன் நிறைவேற்றித் தருகிறாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |