மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: சிவவேடனும் பாசுபதமும்
'When thou art able to behold the three-eyed trident-bearing Siva, the lord of all creatures, it is then, O child, that I will give thee all the celestial weapons. Therefore, strive thou to obtain the sight of the highest of the gods; for it is only after thou hast seen him. O son of Kunti, that thou will obtain all thy wishes.' Having spoken thus unto Phalguna, Sakra disappeared then and there, and Arjuna, devoting himself to asceticism, remained at that spot." (கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு) என்று இந்திரன் சொன்னதன் பேரில் அர்ஜுனன் இமயமலையை அடைந்து, அங்கிருந்தபடி தன் தவத்தை மேற்கொண்டான் என்கிறார் வியாசர். "Passing through the forest that was difficult of access, he approached the great mountain. In all his splendour, Arjuna then lived on the peak of the Himalayas." (from "The Mahabharata: Volume 2" by Bibek Debroy) ஆனால் வில்லி, அவன் கைலாய மலையை அடைந்து அங்கிருந்தபடி தன்னுடைய தவத்தை மேற்கொண்டான் என்கிறார்.

அரியும் வெங் கரியும் தம்மில் அமர்புரி முழக்கம் கேட்டும்
கிரியினில் முழக்ம் கேட்டும் கிராதர் போர் முழக்கம் கேட்டும்
எரிகிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த
புரிகுழலோடும் வைகும் புண்ணியப் பொருப்பைச் சேர்ந்தான்
(வில்லி பாரதம், ஆரண்ய பருவம், பாடல் 33)

(பொருள்) சிங்கங்களும் கொடிய யானைகளும் தங்களுக்குள் போரிட்டுக்கொள்கின்ற ஓசையையும்; அந்த ஓசைக்கு எதிராக இமயமலையில் எழுகின்ற ஓசையையும்; வேடர்களுடைய போர் முழக்கத்தையும்; காட்டுத் தீ பற்றி எரிதலினால் எழுகின்ற ஆரவாரத்தையும் அர்ஜுனன் கேட்டுக்கொண்டே வழிநடந்து எவ்வுயிர்க்கும் தலைவரான சிவபெருமான், இமவான் பெற்ற உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்ற புண்ணியமான கயிலை மலையை அடைந்தான். இதேபோல, வியாச பாரதத்தில் அர்ஜுனன் இந்திரனுடைய அறிவுரையின் பேரிலேயே தவம் மேற்கொள்கின்றான். முனிவர்களின் சொற்படித் தவம் மேற்கொள்கையில், அவனுடைய உறுதியைப் பரிசோதிப்பதற்காக இந்திரன் தேவமாதர்களையும் மன்மதனையும் கொண்டு இடையூறு செய்தும் அர்ஜுனன் தவத்தைத் தொடரவே இந்திரன் காட்சியளித்து அவனுக்கு வரங்களைத் தந்தான் என்கிறது வில்லி பாரதம்.

மைந்தன் இம்மாற்றம் கூற மனனுற மகிழ்ந்து தெய்வத்
தந்தையும் விருத்த வேடம் தனையொரு கணத்தின் மாற்றி
இந்திரனாகி முன்னின்று இப்பெருந் தவத்தால் வந்து
பைந்தொடி பாகன் பாசுபதம் உனக்கு உதவும் என்றான்
(ஆரண்ய பருவம், பாடல் 72)

(இந்திரனுடைய) மகனான அர்ஜுனன் இப்படி பதில் சொன்னதைக் கேட்டு, தான் பூண்டிருந்த விருத்த வேடத்தைக் கலைத்து, அர்ஜுனனுக்கு எதிரில் இந்திரனாக நின்று, 'நீ மேற்கொண்டிருக்கின்ற இந்தத் தவத்தால், உன்னெதிரில் சிவபெருமான் தோன்றி, பாசுபதாஸ்திரத்தைத் தருவார்' என்றான். இப்படிப் பல சிறுசிறு மாறுதல்கள் வில்லியில் காணப்படுகின்றன. ஆனால் இந்தப் பகுதியில், மூல பாரதத்தில் உள்ளதன் சாரத்தை வில்லி அப்படியே எடுத்துத் தந்திருக்கிறார்.

அர்ஜுனன் இமயமலையில் (அல்லது வில்லிபாரதப்படி கைலாய மலையில்) இருந்துகொண்டு தவம் மேற்கொண்டான். "புல்லாலாகிய ஆடையைத் தரித்தவனும் தண்டத்தாலும் மான்தோலாலும் அலங்கரிக்கப்பட்டவனும் ஆகி, முதல் மாதத்தில் பழுத்துப் பூமியில் உதிர்ந்த இலையை மூன்று நாளுக்கு ஒருதரம் ஆகாரமாகக் கொண்டான். இரணடு மடங்கான காலத்தினால் (=ஆறு தினங்களுக்கு ஒருதரம்) கனியைப் புசித்து இரண்டாவது மாஸத்தைப் போக்கினான். அவன் பதினைந்து நாளுக்கொருதரம் ஆகாரம் செய்துகொண்டு மூன்றாவது மாதத்தையும் கழித்தான். பிறகு, நாலாவது மாதம் வந்தவுடன் பரதஸ்ரேஷ்டனும் தோள்வலியமைந்தவனுமான பாண்டுபுத்திரன் காற்றைப் புசித்துக்கொண்டும், கைகளை உயர்த்திக்கொண்டும் பிடிப்பற்றவனாகிக், கால் கட்டைவிரலின் முனையால் நின்றுகொண்டும் இருந்தான்" என்கிறது வியாச பாரதம். (வனபர்வம், கைராத பர்வம், அத். 38, பக். 145).

இப்படிக் கடுந்தவம் செய்துவந்த போதில், அவனுடைய தவத்தின் ஜுவாலையால் வாட்டமுற்ற முனிவர்கள் சிவபெருமானை அடைந்து, அவரிடத்தில், "பெருமானே! அர்ஜுனன் இமயமலைச் சாரலில் கடுமையான தவம் புரிகின்றான். அவன் என்ன காரணத்துக்காகத் தவம் புரிகிறான் என்பது எங்களுக்குத் தெரியாது. அவனுடைய தவத்தின் மூலமும் எங்களைத் தகிக்கச் செய்கிறான். ஆகையால் அவன் தொடர்ந்து தவம் இயற்றாதபடி, அவனுடைய எண்ணத்தை நிறைவேற்றி வைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்கள். இதைக் கேட்ட சிவபெருமான், "மகரிஷிகளே! அர்ஜுனன் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவன் எண்ணத்தை நான் அறிவேன். சொர்க்கம், செல்வம், ஆயுள் போன்ற எவற்றையும் விரும்பி அவன் தவம் இயற்றவில்லை. அவன் விரும்பியதை நான் அளிக்கிறேன். நீங்கள் கவலையின்றித் திரும்பிச் செல்லுங்கள்" என்றார். இதைக்கேட்ட முனிவர்கள் தங்களுடைய ஆசிரமங்களுக்குத் திரும்பினார்கள்.

இதற்குப்பிறகு சிவபெருமான் ஒரு வேடனின் உருவத்தைத் தரித்துக்கொண்டார். வேட்டுவப் பெண்ணின் வடிவத்தில் தம்முடன் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு அர்ஜுனன் தவம் புரியும் இடத்துக்குச் சென்றார். அப்போது, திதியின் புதல்வனான மூகாசுரன் காட்டுப் பன்றியின் உருவத்தை எடுத்துக்கொண்டு, தவக்கோலத்தில் உள்ள அர்ஜுனன்மீது பாய்ந்தான். "அர்ஜுனன் தவத்துக்குப் போனாலும் கையில் வில்லை எடுத்துக்கொண்டு வேட்டையாடுவான். இது அவனுடைய சுபாவம்" என்பார் பூஜ்யஸ்ரீ வினோபா பாவே தன்னுடைய கீதைப் பேருரைகளில். அப்படி, மூகாசுரன் தன்மீது பாய்ந்ததும், அர்ஜுனன் தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்த காண்டீபத்தை எடுத்துக் கொண்டு, காடே அதிரும்படியாக நாண் ஒலியை எழுப்பி, "இங்கு வந்து என்னைக் கொல்ல முயலும் உன்னை இப்போதே யமலோகம் அனுப்புகிறேன் பார்" என்று வில்லில் அம்பைத் தொடுத்தான். "இந்தப் பன்றியை முதலில் குறிவைத்தவன் நான். ஆகவே நீ இதன்மேல் அம்பெய்யாதே" என்று வேடனாக வந்த சிவபெருமான் தடுத்தார். (அர்ஜுனனும் சிவபெருமானும் ஒரேசமயத்தில் அம்பு தொடுத்து எய்தனர் என்கிறது வில்லி பாரதம். "இருவரும் ஏவிய வாளி உடனேபட்டு உடலுருவி ஏனம் வீழ" என்பது வில்லி பாரதம். (ஏனம்=பன்றி) அதன்பிறகு (வியாச பாரதப்படி) "பொன்னைப்போன்ற மேனியை உடைய வேடனே! நான் குறிவைத்த இந்தப் பன்றியை நீ எதற்காக அடித்தாய்? இது வேட்டைக்குறிய முறை அல்லவே" என்று சொன்னான். "வீரனே! காடு வேடர்களுக்கு உரியது. தவவேடத்தில் உள்ள நீ இந்தப் பன்றியின்மீது அம்பெய்திருக்கிறாய்." "இந்தப் பன்றி என்னைக் கொல்லப் பாய்ந்தது. ஆகவே நான் இதைக் கொன்றேன்" என்றான். "அதற்கு முன்னாலேயே நான் இதைக் கொன்றுவிட்டேன்" என்றான் வேடன்.

இருவருக்கும் வாதம் முற்றி, யுத்தமாக மாறியது. "பிறகு அர்ஜுனன் வேடனிடத்தில் சரமாரியை நன்குபெய்தான். அதனைச் சிவன் சந்தோஷமுள்ள மனத்துடன் ஏற்றுக்கொண்டார். பினாகியானவர்* ஒரு முகூர்த்தகாலம் அம்புமழையைத் தாங்கிக்கொண்டு மலைபோல அசைவற்றவராகிக் காயப்படுத்தப்படாத சரீரத்துடன் நின்றார்." (வனபர்வம், கைராத பர்வம், அத்.39, பக். 148) (*பினாகி: பினாகம் என்ற வில்லை ஏந்துபவரான சிவபெருமான்.) தொடர்ந்து, தன்னுடைய அம்புகள் பயனற்றுப் போவதைக் கண்டு அர்ஜுனன் ஆச்சரியப்பட்டான். ’காண்டீவத்திலிருந்து புறப்படும் நாராசங்களைக் கலக்கமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் இவன் ருத்திரனோ, தேவனோ, யட்சனோ, அசுரனோ’ என்றெல்லாம் எண்ணிய அர்ஜுனன் தொடர்ந்து தன்னுடைய நாராசங்களை பெருமான்மீது எய்தான். பாணங்கள் குறைந்து போன நிலையில் அர்ஜுனன் வேடவடிவில் இருந்த பெருமானை வில்லால் அடித்தான். முஷ்டிகளால் குத்தினான். வேடநாயகன் அர்ஜுனனுடைய வில்லைப் பறித்துக்கொண்டார். உடனே அர்ஜுனன் தன்னுடைய கத்தியை எடுத்துக்கொண்டு அவரை எதிர்த்தான். தன்னுடைய கத்தியை வேடனுடைய தலைமீது விட்டெறிந்தான். அதுவோ, வேடனுடைய தலையில் பட்டுச் சிதறியது. அதன்பிறகு அர்ஜுனன் சிவவேடன் மீது கற்களை எறிந்தான். வேடன் கற்களையும் சிரித்தமுகத்துடன் ஏற்றுக்கொண்டார். போர் இவ்வாறு நீண்டநேரம் தொடர்ந்தது. இறுதியில் சிவவேடன் அர்ஜுனனைத் தன் கரங்களால் இறுகக்கட்டிக் கொண்டான். அப்போது மூச்சற்றவனாக ஆன அர்ஜுனன் மயங்கி விழுந்தான். இரண்டு நாழிகைக் காலத்துக்குப் பிறகு, ஒரு மலர்மாலையால் சிவபெருமானைப் பூஜித்தான். அப்படிப் பூஜித்ததும் அந்த மலர்மாலை வேடனுடைய தலையில் இருப்பதைக் கண்டான். உடனே 'இவர் இன்னார்' என்பதை உணர்ந்துகொண்டு வேடவடிவத்தில் இருக்கும் சிவபெருமானை வணங்கினான்; இனிய மொழிகளால் துதித்தான். 'நான் செய்த அபசாரங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்’ என்று சங்கரரை வேண்டிக்கொண்டான். இறைவனால் தழுவப்பெற்ற அர்ஜுனன் முன்னிருந்ததைவிட அதிகமான தேகபலம் உடையவனானான். அவனிடத்திலிருந்த தோஷங்கள் நீங்கின.

சிவபெருமான் அர்ஜுனனைப் பார்த்து 'நாராயணனுடைய தோழனான நீயே நரன். பதரிகாசிரமத்தில் பல பதினாயிரம் வருடங்கள் தவம் செய்தவன் நீ. இந்திரனுக்குப் பட்டாபிஷேகம் நடந்த சமயத்தில் நீயும் கிருஷ்ணனும் வில்லை எடுத்துக்கொண்டு அசுரர்களைக் கொன்றீர்கள். உன்னிடமிருந்து நான் பறித்துக்கொண்ட இந்த காண்டீவம்தான் அந்த வில்' என்று சொல்லி காண்டீவத்தைத் திரும்பக் கொடுத்தார். கூடவே எப்போதும் குறையாமல் இருக்கும் அம்பறாத் தூணியையும் கொடுத்தார். அர்ஜுனன் தனக்கு பிரமசிரஸ் என்ற (பிரமாஸ்திரத்தைக் காட்டிலும் ஆற்றலுள்ள) அஸ்திரத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டான். பயிற்சிக் காலத்திலேயே துரோணர் அர்ஜுனனுக்கு பிரமசிரஸைப் பயிற்றுவித்திருந்தார். இந்த பிரமசிரஸ் என்ற அஸ்திரத்தைத்தான் அஸ்வத்தாமன் பதினெட்டாம் நாள் யுத்தத்துக்குப் பிறகு அர்ஜுனன்மீது எய்து, அதைத் திரும்பப்பெற முடியாதவனாக நிற்கப்போகிறான். அர்ஜுனன் தன்னுடைய பிரமசிரஸால் அதைத் தணித்து, இரண்டையும் சாந்தம் செய்யப் போகிறான். இதற்கு அடுத்ததாக சங்கரனார் அவனுக்கு பாசுபதாஸ்திரத்தைக் கொடுத்தார். ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் தரிப்பது, எய்வது, மீட்பது (அஸ்திரத்தை எய்ததும் அதைத் தடுத்துத் திரும்ப வாங்குவது) என்று மூன்று நிலைகள் உண்டு. 'இந்த மூன்று நிலைகளிலும் நீ வல்லவன் ஆவாய் என்று அர்ஜுனனை ஆசிர்வதித்தார்.

தொடர்ந்து, நாம் முன்பே குறிப்பிட்டிருந்ததைப் போல, யமன் முதலானவர்கள் அர்ஜுனனுக்கு ஆயுதங்களைத் தந்ததையும், இந்திரன் அழைப்பின் பேரில் அர்ஜுனன் இந்திரலோகத்துக்குச் சென்றதையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com