அக்காலத் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர், திருச்செங்கோடு ராமலிங்க சுந்தரம் என்னும் டி. ஆர். சுந்தரம். இவர், ஜூலை 16, 1907ல் பிறந்தார். திருச்செங்கோட்டின் புகழ்வாய்ந்த தொழிலதிபரும், ஜமீந்தாருமான ராமலிங்க முதலியாரின் மகன் இவர். சென்னையில் இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, டெக்ஸ்டைல் தொழிலில் மேற்படிப்புக்கு இங்கிலாந்து சென்றார். அங்கே படிக்கும்போதே கிளாடிஸ் என்பவரை மணந்து கொண்டார். படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். குடும்பத்தில் இவரது திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும் மூத்த அண்ணன் முருகேச முதலியாரின் முயற்சியில் சமரசமானது.
சுந்தரம் அடிப்படையில் புதுமை விரும்பி. இங்கிலாந்தில் இருந்த காலத்தில் அந்த நாட்டின் வாழ்க்கைமுறை, நேர்த்தி, தொழில்நுட்பங்கள் ஆகியவை இவரைக் கவர்ந்திருந்தன. இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், தான் கற்றறிந்த விஷயங்களைச் செயல்படுத்த விரும்பினார். சினிமாத் தொழில் வளர்ந்து கொண்டிருந்த காலம் அது. சேலத்தில் வசித்த காலத்தில் அண்டை பங்களாவில் ஓரியண்டல் டாக்கிஸ் நிறுவனர் வேலாயுதம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். அவருடன் பங்குதாரராக இணைந்து 'ஏஞ்சல் பிலிம்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்மூலம் சில படங்களில் பணியாற்றி நல்ல அனுபவம் பெற்றார். என்றாலும் படப்பிடிப்பிற்காக பம்பாய், கல்கத்தா எனப் பல இடங்களுக்கும் அலைந்து திரியவேண்டி இருந்தது. காரணம், எல்லா வசதிகளுடன் கூடிய ஸ்டூடியோக்கள் அப்போது தமிழகத்தில் இல்லை. தானே அப்படி ஒரு ஸ்டூடியோவைத் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் சுந்தரத்துக்குத் தோன்றியது. ஏஞ்சல் ஃபிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து விலகினார். மாடர்ன் தியேட்டர்ஸ் பிறந்தது
சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மலையடிவாரத்தில், பத்து ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். அதில் படப்பிடிப்பு முதல் தொகுப்புவரை எல்லா வசதிகளும் கொண்ட ஸ்டூடியோ ஒன்றை நிர்மாணித்தார். 'மாடர்ன் தியேட்டர்ஸ்' என்று அதற்குப் பெயரிட்டார். முதல் படமாக 'சதி அகல்யா' வெளியானது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தவமணி தேவியை அப்படத்தின் கதாநாயகியாக்கினார். அதில் துணிந்து நீச்சலுடையில் நடித்தார் தவமணி தேவி. அதனால் தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக்கன்னி என்று பெயர்பெற்றார். அப்படம் வெற்றி பெற்றது.
அடுத்து, பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மணீயம்' கதையை 'மனோன்மணி' என்ற பெயரில் படமாக்கினார். அதில் பி.யு. சின்னப்பாவுடன் டி.ஆர். ராஜகுமாரி நடித்தார். தமிழில் முதன்முதலில் பெரும் பொருட்செலவில் உருவான படம் அதுதான். ஆனால், அது போதிய வெற்றி பெறவில்லை. என்றாலும் சளைக்கவில்லை சுந்தரம். வித்தியாசமான கதையைக் கொண்ட திரைப்படம் ஒன்றை எடுக்க முனைந்தார். அதற்காக ஒளிப்பதிவாளர்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்துப் படப்பிடிப்பு நடத்தினார். அதுதான் 'மாயா மாயவன்.' சண்டைக் காட்சிகளுக்காகவும், ஒளிப்பதிவிற்காகவும் அப்படம் பேசப்பட்டது. படம் வெற்றி பெற்றது. அதனை அடுத்து அலெக்சாண்டர் டூமா எழுதிய 'Man in the Iron mask' என்ற கதையை, பி.யு. சின்னப்பாவைக் கதாநாயகனாகக் கொண்டு 'உத்தமபுத்திரன்' என்னும் படமாக்கினார். தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக பாரதியார் பாடல் இடம்பெற்ற படம் அதுதான். "செந்தமிழ் நாடெனும் போதினிலே..." என்ற பாடலை பி.யு. சின்னப்பா பாடினார். அதுவே படத்திற்குச் சிறந்ததோர் விளம்பரமானது. மட்டுமல்ல; தமிழில் வெளியான முதல் இரட்டை வேடப் படமும் அதுதான். படம் பெருவெற்றி பெற்றது. தொடர்ந்து, 'பர்மா ராணி' என்ற படத்தைத் தயாரித்தார். அப்படத்தில் அவர் வில்லன் வேடமேற்று நடித்தார். அதுவும் வெற்றிப்படம்தான்.
தமிழ்த் திரையுலகில், நூறாவது பேசும்படமாக வெளிவந்த 'பக்த நாமதேவர்' என்ற படத்தைத் தயாரித்த பெருமையும் சுந்தரத்துக்கு உண்டு. முதல் சிங்களப் படத்தை எடுத்தவரும் இவரே! மலையாளத்தில் வெளியான முதல் பேசும்படமான 'பாலன்' (1938) படத்தைத் தயாரித்தவரும் டி.ஆர். சுந்தரம்தான். அவர் செய்த புதுமைகள் அநேகம். தென்னிந்தியாவில் முதன்முதலில் அனிமேஷனை அறிமுகப்படுத்தியவர் இவர் (படம்: பத்ம ஜோதி, 1937). மூன்று குறும்படங்களை இணைத்து ஒரே படமாகத் தந்தவரும் இவர்தான். கலிகால மைனர், பள்ளி நாடகம், சூரப்புலி என மூன்று கதைகள் கொண்ட மூன்று குறும்படங்களை இணைத்து 'சௌசௌ' என்ற பெயரில் 1945ல் வெளியிட்டார். முதன்முதலில் கலர் படம் (கேவா கலர்) எடுத்தவரும் சுந்தரமே! (படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும், 1955).
சுந்தரம் மிகுந்த கட்டுப்பாடு உடையவர். தன்னிடம் நடிக்கும் நடிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அவரிடம் ஒப்பந்த முறையில் பலர் பணியாற்றி வந்தனர். நேரந்தவறாமை மிக முக்கியம் அவருக்கு. ஒரு சமயம் பி.யு. சின்னப்பா குறித்த நேரத்திற்கு வராததால் சினம் கொண்டு அவரை நீக்கிவிட்டுத் தானே கதாநாயகனாக நடித்தார். 'சுலோசனா' என்னும் அந்தப் படத்தில் அவர் இந்திரஜித் ஆக நடித்திருந்தார். படம் வெற்றிபெறவில்லை என்றாலும் சுந்தரம் கவலைப்படவில்லை. அடுத்த பட முயற்சிகளில் ஈடுபட்டார். 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி', 'பொன்முடி', 'மந்திரிகுமாரி', 'திகம்பர சாமியார்' (வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல். நம்பியார் 10 வேடங்களில் நடித்த படம்), 'சர்வாதிகாரி', 'வளையாபதி', 'பாக்தாத் திருடன்', 'தயாளன்', 'ஆதித்தன் கனவு', 'தாய் உள்ளம்', 'திரும்பிப்பார்', 'இல்லற ஜோதி', 'பாசவலை', 'ஆரவல்லி', 'பெற்ற மகளை விற்ற அன்னை', 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்', 'குமுதம்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'வல்லவன் ஒருவன்', 'இரு வல்லவர்கள்', 'எதிரிகள் ஜாக்கிரதை', 'காதலித்தால் போதுமா', 'நான்கு கில்லாடிகள்', 'சி.ஐ.டி.சங்கர்', 'கருந்தேள் கண்ணாயிரம்' எனப் பல வெற்றிப் படங்களைத் தந்தவர் சுந்தரம். கே.எஸ். சேதுமாதவனும், முக்தா சீனிவாசனும் இவரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்களே! எம்.ஏ. வேணு, சுலைமான், ஏ.பி. நாகராஜன் எனப் பலர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றியவர்கள்தாம். தன் படங்களைத் தானே இயக்குவதோடு மட்டுமல்லாமல் திறமை வாய்ந்த இயக்குநர்களான எல்லிஸ் ஆர். டங்கன், எம்.எஸ். டாண்டன், நொடானி, ரகுநாத், ராம்நாத், பொம்மன் டி. இரானி, ஆதூர்த்தி, சுப்பாராவ், எல்.எஸ். ராமச்சந்திரன் எனப் பலருக்கும் இயக்கும் வாய்ப்புக் கொடுத்து அவர்கள் உயர்வுக்கும் காரணமானார்.
எஸ்.வி. ரங்காராவ், அஞ்சலிதேவி, எம்.ஆர். ராதா போன்றோரை அறிமுகம் செய்தார். நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த மனோரமாவை 'கொஞ்சும் குமரி' படத்தில் கதாநாயகி ஆக்கினார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பாரதிதாசன், கண்ணதாசன், மருதகாசி, கா.மு. ஷெரிப், கருணாநிதி, எம்.ஜி.ஆர். எனப் பலரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் இவர். கண்ணதாசன் முதன்முதலில் சினிமாவுக்குப் பாட்டு எழுதியது மாடர்ன் தியேட்டர்ஸில்தான். இவரது ஸ்டூடியோவில் அமர்ந்து கதை-வசனம், பாடல்கள் எழுதுவதை பலர் ஒரு பெரிய கௌரவமாக நினைத்தனர். அதற்கேற்றவாறு சிறந்த ஊதியமும் கொடுப்பார். திருச்சி லோகநாதன், டி.எம். சௌந்தர ராஜன், சீர்காழி கோவிந்தராஜன் எனப் பலரது திறனறிந்து பின்னணி பாட வைத்தவர். நடிகர், நடிகைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களை அங்கேயே தங்கவைத்து படப்பிடிப்புகளை நடத்தினார். அதனால் 'முதலாளி' என்று போற்றப்பட்டார். மனோகர், ஜெய்சங்கர், சி.ஐ.டி. சகுந்தலா போன்றோரது பல படங்கள் இவ்வாறு உருவானவையே. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களின் பங்களிப்பைப் பெற்ற நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ்.
தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பல படங்களைத் தயாரித்திருக்கிறார் சுந்தரம். அமெரிக்கப் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, 'The Jungle' என்ற ஆங்கிலப் படத்தைத் தயாரித்திருக்கிறார் (அது தமிழிலும் வெளியானது). தன் வாழ்நாளில் 98 படங்களைத் தயாரித்த சுந்தரம் அவற்றில் 55 படங்களை இயக்கியிருக்கிறார். இரண்டுமுறை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். இவரது தனிப்பட்ட முயற்சியால் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக் கட்டடம் கட்டப்பட்டது. பல்வேறு புதுமையான திட்டங்களைக் கைவசம் வைத்திருந்த டி.ஆர். சுந்தரம், திடீர் மாரடைப்பால் ஆகஸ்ட் 30, 1963 அன்று காலமானார்.
இவருக்கு ரிச்சர்ட் ராமசுந்தரம், டேவிட் கந்தசுந்தரம் என இரு மகன்கள். டேவிட் கந்தசுந்தரம் தன் அம்மாவோடு வெளிநாடு சென்றுவிட்டார். ராமசுந்தரம் என்னும் ஆர். சுந்தரம் தந்தையின் பாணியைப் பின்பற்றி படங்கள் எடுத்தார், என்றாலும் கால மாற்றத்தால் பல வெற்றி பெறவில்லை. நாளடைவில் இவர்கள் நிறுவனம் படத்தயாரிப்பைக் கைவிட்டது. தற்போது சேலத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் 'சுந்தரம் கார்டன்ஸ்' என்ற பெயரில் குடியிருப்புப் பகுதியாக உள்ளது.
ஆண்டு 2000-ல், சுந்தரத்தைக் கௌரவிக்கும் வகையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் அவரது மார்பளவு உருவச்சிலையை அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி திறந்து வைத்தார். அவரது நினைவாக சென்னை அண்ணாசலை-ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அவ்விடத்திற்கு சுந்தரம் சாலை - டி.ஆர். சுந்தரம் அவென்யூ என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்தக் கட்டுரைக்குச் சில முக்கியத் தகவல்களை அளித்து உதவிய திருமதி குருப்ரியா (கலிஃபோர்னியா), டி.ஆர். சுந்தரம் அவர்களின் பெயர்த்தி. அவர் கூறுவதாவது, "என் அம்மாவின் இயற்பெயர் பாவாய். ஆனால் தாத்தா சுந்தரம் அம்மாவுக்கு 'எமிலி என்று பெயர் வைத்தார். உறவினர்கள் அம்மாவை எமிலி என்றே அழைத்தனர். என் உறவினர்கள் என்னைப் பார்க்கும்போது, "ஓ நீ எமிலி பெண்ணா?" என்று கேட்பர்.
கட்டுரை: பா.சு. ரமணன் உதவி: குருப்ரியா, கலிஃபோர்னியா |