ராஜி வெங்கட்
தென்னிந்தியர் என்றாலே கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும்தான் என்பது பொதுவான கருத்து. இவற்றைக் கற்றதோடு நிற்காமல் மேலே போய் Opera (ஆபரா என்று உச்சரிக்கவேண்டும்) சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு, பாடுகிறார் தமிழ்ப்பெண் ஒருவர். ஆபராவைப் பாடுவதாகச் சொல்வதுகூடச் சரியல்ல, ஏனென்றால் அது நாடகப் பாணியில் அமைந்தது. அதில் வசனம், பாடல், பின்னணித் திரை என்று பல நாடகக் கூறுகளும் இருக்கும். அதிகப் பரிச்சயமில்லாத ஒருவருக்கு ஆபரா பாடுபவரின் முகப்போக்கு, குரலோட்டம், உடல்மொழி ஆகியவை சற்று விநோதமாகவே தோன்றக்கூடும்.

அவர், அட்லாண்டாவைச் சேர்ந்த ராஜி வெங்கட். எப்படி இதில் நுழைந்தார் என்று அறியும் ஆர்வத்தில் அவரிடம் பேச்சுக் கொடுக்கிறோம். மடைதிறந்தாற்போல் பேசுகிறார் ராஜி வெங்கட்: பிறவியிலேயே சங்கீதம் என்பதான உள்ளுணர்வு எனக்கு இருந்தது. ஆனால் ஆபராவுடன் பரிச்சயம் கல்லூரிக் காலத்தில் கிடைத்து, அதன்மேல் காதல் ஏற்பட்டது. அதைச் சிறப்பாகச் செய்ய ஆவல் வந்தது.

என் ஆசிரியைகள் நடாலி டிஸ்ஸே (Natalie Dessay), அன்னா நெட்ரெப்கோ(Anna Netrebko) இருவருமே எனக்கு இதைக் கற்க உள்தூண்டலாக இருந்தனர். இது மிகக் கடினமான துறை. உண்மையாகவே ஆபரா வடிவையும், சங்கீதத்தையும் ஆழமாக நேசித்தால் மட்டுமே இதைக் கற்பிக்க முடியும். என்னை முன்னைவிடச் சிறந்த பாடகியாக்கியதற்கு நான் தினமும் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். நடாலி தன்னை ஒரு பாடும் நடிகை என்று சொல்லிக் கொள்வார். ஒரு நடிகையாக வாழ்வைத் தொடங்கி, தனக்குப் பாடும் திறமை இருப்பதைக் கண்டுகொண்டவர். அற்புதமான பாடகி.



ஆச்சரியமானது அன்னா நெட்ரெப்கோவின் கதை. ஆபாரா அரங்கத்தில் துப்புரவுத் தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கி சங்கீதத்தை சுயமாகக் கற்றவர். அவர் இன்று உலகப் புகழ் பெற்றுள்ளார். துப்புரவுத் தொழிலாளி! That's honestly crazy. ஆபரா சங்கீதம் உணர்ச்சி பூர்வமானது. அது உங்கள் உணர்ச்சிகளை அழகிய ஒலிகளாக உருமாற்றுகிறது.

ஆபராவுக்கும் பாரம்பரிய இந்திய இசைக்கும் குரல் பயன்பாட்டில் இமயமலைக்கும் ஆல்ப்ஸுக்குமான வேறுபாடு உண்டே, அதைச் சொல்லில் விளக்க முடியுமா என்று கேட்கிறோம்.

நான் இதைத் தீவிரமாக ஆராய்ந்திருக்கிறேன் என்று தொடங்குகிறார். இரண்டிற்கும் தொண்டைத் தசைகள், காற்று, குரல்வளை இவற்றின் பயன்பாட்டில் பெருத்த வேறுபாடு உண்டு. முற்றிலும் மாறுபட்டவை. ஒன்றின் சாயல் மற்றொன்றில் தோன்றாமல் இரண்டு கலைகளிலும் நிலைத்திருப்பது மிகவும் கடினம். எனக்கும் இதில் போராட்டம்தான். ஆபராவில் குரல்வளை கீழேயும், உள்நாக்கு மேலேயும் இருப்பது அவசியம். இதன் மூலம் அதிகப்படியான இடைவெளி ஏற்படும். உங்களது குரல் நாண்கள் காற்றலைகளில் தாக்கத்தை உண்டாக்கி ஆபரா இசையை எழுப்ப இந்த இடைவெளி அவசியம்.

கர்நாடக சங்கீதம் இதற்கு நேர் எதிர். இதில் குரல்வளை அசைந்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கமகமும் உங்கள் தொண்டையில் இசைக்கருவியை இசைப்பதற்கு ஒப்பானது. ஒவ்வொரு ஒலிக்கும் வெவ்வேறு தந்தியை மீட்டுவதைப் போன்றது இது. இதைத் துல்லியமாகச் செய்வது மிக மிக முக்கியம். இதில் குரல், பல்வேறு சாகசம் செய்யும் ஒரு கால்பந்து வீரரைப் போலச் செயல்படும். Incredible. மேலும் கர்நாடக சங்கீதத்தில் நீங்கள் உட்கார்ந்துகொண்டு பாடலாம். ஆனால் ஆபராவில் நடிப்போ, நடனமோ சேர்ந்திருக்கும். நின்று கொண்டுதான் பாடவேண்டும்.



இப்படி ஒரு வினோதமான குரல் பிரயோகம் கொண்ட ஆபராவை 'நம்மூர்க்காரர்கள்' எப்படிப் பார்க்கிறார்கள் என்று ராஜியிடம் கேட்கிறோம்.

சற்றே தமாஷாக அவர் கூறுகிறார்: இந்தியர்களுக்கு நன்றாகத் தெரிந்தது ஓப்ரா வின்ஃப்ரே (Oprah Winfrey) தான். நான் ஆபரா பாடுகிறேன் என்றால், என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏமாற்றம் நிறைந்த குரலில் 'ஓ ம்யூசிக்' என்று சொல்வதைப் பார்க்கக் கஷ்டமாகத்தான் இருந்தது. எதிர்காலத்தில் நான் 'ம்யூசிக் தெரபி' செய்தால்தான் யாருக்காவது என் மேல் நம்பிக்கை வரும் என நான் கூறுவதுண்டு. அவர்களுக்குப் பியானோ, வயலின், பாரம்பரிய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகள் பற்றித் தெரிந்திருந்தும் குரலிசை பற்றித் தெரிவதில்லை என்பதுதான் வேடிக்கை.

எளிதாக என்னை அவர்கள் புறந்தள்ளிவிட முடியாது. என்னால் எத்தனை கடினமாக உழைக்கமுடியும் என்பது எனக்குத் தெரியும். பிறரது கருத்துக்கள் நமது வளர்ச்சிக்கு உதவும். எனது பெற்றோருக்குத்தான் மிகவும் கடினமாக இருந்தது. ஆபரா கற்றால் என்ன வேலை கிடைக்கும், அது என் சொந்தக்காலில் நிற்க உதவுமா என்பதில் இன்னும் தெளிவில்லை. கல்லூரியிலும் இந்தியர்களுக்கு

இதைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் டாக்டரேட் படிப்பைவிட இது குறைவானது என்பது மட்டுமே . ஆனால் 2018ன் இறுதியில் ஆபரா பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் 'பாம்பே ஆபரா' மறுபடியும் தொடங்கியதால் சிறிது விழிப்புணர்வு வந்துள்ளது.



ராஜியின் தன்னம்பிக்கை நமக்குப் பிடித்திருக்கிறது. ஆபரா இசை வட்டாரத்தில் உங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று மேலும் குடைகிறோம்.

ராஜி பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாதவர். சிரித்துக் கொண்டே சொல்கிறார். நான் ஒரு trouble maker. அது எனது சுபாவம். நான் கல்லூரிக்குச் செல்வதே வாரம் ஒருமுறை ஒரு மணி நேரம் ஆபரா வகுப்புக்காகத்தான் என்பதை மற்ற ஆசிரியர்கள் புரிந்துகொண்டு விட்டார்கள். இந்தத் துறையில் நான் வெகுதூரம் முன்னேறுவேன் என்று சக கலைஞர்கள் நம்பினார்கள். நான் அவர்களைப் பெரிதும் மதிக்கிறேன். எனக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது எனப் புரிந்து கொண்டேன்.

பார்வையாளர்களும் கைதட்டி வரவேற்றதோடு, என் வளர்ச்சியைக் காண திரும்பத் திரும்ப வர விரும்பினர். பாடுவதைத் தவிர எனக்கு விருப்பமான இன்னொன்று என்னவென்றால், மேடைநிகழ்ச்சி வழங்குவதுதான் (performance). அவர்களுக்காக நான் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன் எனக் காண்பிப்பதில் எனக்கு விருப்பமுண்டு. Communicating our hearts under the same stage lights. நான் அவர்களிடம் எப்படி பாதிப்பை ஏற்படுத்தினேன், உணர்வுபூர்வமான தொடர்பு ஏற்பட்டதா, என்பதை அவர்கள் கூறும்போது எனக்கு மிகவும் பிடிக்கிறது.

ராஜி வெங்கட்டின் உத்வேகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நிச்சயமாக பரிசுகள் வென்றிருக்க வேண்டும் என்று நினைத்து, விவரம் கேட்கிறோம். 2018ல் அமெரிக்கத் தேசிய ஆசிரியர் பாடும் போட்டியில் 'Classical women's division' பரிசு வென்றேன் என்கிறார். தவிர ஆம்னி ஹோட்டலில் CNN-க்காக ஒரு மிகப்பெரிய இசைநிகழ்ச்சியில் பாடியதையும் பெருமையாகக் குறிப்பிடுகிறார். ஆனால், அதையெல்லாவிட அவருக்குச் சந்தோஷம் கொடுப்பது, “சில நாட்களுக்கு முன் என் ஆசிரியை என் பாட்டைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டதுதான்”!



பெரிய ஆபரா அரங்குகளில், உலகப் புகழ்பெற்ற இசைக்குழுக்களுடன் பாட நீண்டகால ஒப்பந்தம் கிடைக்கவேண்டும் என்பதே ராஜியின் ஆசை. அவர் மேலும் சொல்கிறார், நான் தொடர்ந்து பல உச்சங்களைத் தொட விரும்புகிறேன். அது எப்போதும் முடிவடையக்கூடாது என்பது என் ஆசை. ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டால் அதைவிட பெரியதாக ஒன்றை சாதிக்கமாட்டேன். அதனால் நான் கண்ணுக்கெட்டும் குறுகியகால இலக்குகளையே நிர்ணயித்துக் கொள்கிறேன். அவை அங்குலம் அங்குலமாக என் இலக்கை நெருங்க உதவும்.

பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்றவற்றில் ராஜி என்ன செய்திருக்கிறார் என்பதையும் கேட்கிறோம்.

கர்நாடக சங்கீத அரங்கேற்றம் செய்ய ஆசை இருக்கிறது. விரைவில் செய்ய இருக்கிறேன். பஞ்சரத்ன க்ருதிகளைப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். நான் நினைத்ததைவிட அது கடினமாக உள்ளது. நான் எதையும் செம்மையாகச் செய்ய நினைப்பவள் (perfectionist).

பரதநாட்டிய அரங்கேற்றம் செய்துள்ளேன். நாட்யதாரா அட்லாண்டா என்ற பெயரில் நடனப்பள்ளி நடத்தி வருகிறேன். எனது ஆசிரியை இங்கிருந்து வேறிடம் சென்றபோது பள்ளியை என்னிடம் ஒப்படைத்துச் சென்றார். 2013 முதல் நான் கற்பிக்கிறேன்.

நான் Bach to Rock என்ற இசைப்பள்ளியிலும் கற்பிக்கிறேன். Bach என்கிற இசைமேதை தொடங்கி இன்றைய ராக் இசைவரை இங்கே உண்டு. எல்லா வயதினருக்கும் பியானோ, குரலிசை, கிடார் போன்றவற்றைக் கற்பிக்கிறேன்.



சத்திய சாயி நிறுவங்களுடன் உங்களது தொடர்பு என்ன? அங்கு உங்களது பங்களிப்பு என்ன?

சிறுவயதிலேயே ஸ்வாமியின் அறிமுகம் கிடைத்தது என் அதிர்ஷ்டம். பெரும்பாலோர் போல் அவரை நாம் கேள்வி கேட்கிறோம். அவர் ஆரவாரம் இல்லாமல் நம் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசுகிறார் என்பது என் எண்ணம். And for most of us it is the people we encounter, the media we are constantly in, and most importantly the unconditional love we get from our family and friends.

நான் சிறுவர், சிறுமியருக்கு பஜனைப் பாடல்கள் கற்பிக்கிறேன். நான் கண்டிப்பானவள் என்பதால் பல குழந்தைகளுக்கு என்னைப் பிடிக்காது. ஆனால் பல சமயங்களில் அவர்களது வழக்கத்திற்கு மாறான கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரய் இருக்கும் ராஜி அக்கா நான். கேள்விகளுக்கு விடை தெரியாவிட்டாலும், அவர்களை மிகுந்த அன்புடன் விளையாட்டுத்தனத்துடன் அவர்களை அணுக வேண்டும்.

மதுரபாரதி

*****


வாக்குவம் கிளீனரும் பியானோவும்
எனக்கு அப்போது 6 வயது. என் சகோதரன் ஆர்யா பியானோ கற்றுக் கொண்டிருந்தான். அவன் பீதோவனின் Fur Elise மற்றும் ஸ்டார் வார்ஸ் தீம் பாடலை வாசிக்கப் பழகிக் கொண்டிருந்தான். அக்கணமே பியானோ என்னை ஈர்த்தது. நானும் அவற்றை வாசிக்க விரும்பினேன். அவன் வாசித்து முடித்ததும் நான் பியானோவில் வாசிக்க முயன்றேன். ஆனால் ஏனோ சரியாக வரவில்லை. ஒருநாள் நான் வாசிக்க முயன்று கொண்டிருந்தபோது ஒரு வாக்குவம் கிளீனர் சேல்ஸ்மேன் வந்தார். என் பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் “ஹேய்! எனக்கு இந்தப் பாடல்கள் தெரியும்” என்று சொல்லிவிட்டு, எப்படி வாசிப்பது எனச் சொல்லிக் கொடுத்தார். அன்று நான் இரு விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்றுக்கொண்டேன். முதலாவது Kirby 2000 சிறந்த வாக்வம் க்ளீனர் என்பது, இரண்டாவது நான் இசையின்மேல் காதல் கொண்டுவிட்டேன் என்பது.

ராஜி வெங்கட்

© TamilOnline.com