S.M. நடேச சாஸ்திரி
முதன்முதலில் ஆங்கிலத்தில் சிறுகதை எழுதிய தமிழ் எழுத்தாளர், முதன்முதலில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குச் சிறுகதைகளை மொழிபெயர்த்தவர், தமிழில் முதன்முதலில் துப்பறியும் நாவலை எழுதியவர், குடும்ப நகைச்சுவை எழுத்தின் முன்னோடி எனப் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றவர் S.M. நடேச சாஸ்திரி என்னும் சங்கேந்தி மகாலிங்கம் நடேச சாஸ்திரி. இவர் 1859ல் திருச்சி மணக்கால் அருகே உள்ள சங்கேந்தி கிராமத்தில் மகாலிங்க ஐயர் - அகிலாண்டேஸ்வரி தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். துவக்கக் கல்வியை உள்ளூரிலும் லால்குடியிலும் பயின்றவர், கும்பகோணத்தில் உயர்பள்ளிக் கல்வியை முடித்தார். சென்னைப் பல்கலையில் இளங்கலைப் படிப்பை நிறைவுசெய்தார். 1881ல் இவருக்கு இந்திய அரசின் தொல்லியல் துறையில் வேலை கிடைத்தது. பிரிட்டிஷ் அதிகாரி ராபர்ட் சிவெலின் கீழ் பணி புரியத் துவங்கினார். சாஸ்திரி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், உருது என 18 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரது அறிவுத் திறன் கண்டு வியந்த ராபர்ட் சிவெல் இவருக்கு 'பண்டிட்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். அதுமுதல் 'பண்டிட் நடேச சாஸ்திரி' என்றே இவர் அழைக்கப்பட்டார்.

சில வருடங்கள் சென்னையில் பணியாற்றிய பின் மைசூர் அரசின் சிற்பக்கலைத் துறைப் பொறுப்பு அதிகாரியாக இடமாற்றப்பட்டார். அங்கு சில ஆண்டுகள் பணியாற்றினார். பன்மொழிப் புலமையோடு, சிற்பம் மற்றும் கலைத்துறையில் பணியாற்றியதால் வரலாற்றின் மீதும் சாஸ்திரியாருக்கு மிகுந்த ஆர்வம். கல்வெட்டுக்கள் பற்றிய நுணுக்கமான விவரங்களைச் சேகரித்து வந்தார். ஓய்வு நேரத்தில் அவற்றைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். சிறு வயதிலிருந்தே தந்தை, தாய் மற்றும் சித்தியிடம் கதை கேட்டு வளர்ந்தவராதலால் நாட்டுப்புறக் கதைகளின் மீதும் இவருக்கு ஆர்வம். அதன் காரணமாக, தான் சென்றவிடங்களில் புழக்கத்தில் இருந்த வாய்மொழி இலக்கியங்களை எழுத்தில் பதிய ஆரம்பித்தார். மைசூரிலிருந்து தமிழகத்திற்கு மீண்டும் வந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டது. சிறைத்துறை, பதிவுத்துறை போன்ற துறைகளில் பணியாற்றினார். இவரது நேர்மை, உறுதி, இரக்க குணம், உதவும் மனப்பான்மை போன்றவற்றாலும், லண்டன் கலாசாலை (ராயல் சொசைட்டி) உறுப்பினராக இருந்ததாலும், ஐரோப்பிய அதிகாரிகள் இவரை மிகவும் மதித்துப் போற்றினர். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றிய நடேச சாஸ்திரி, ஓய்வு நேரத்தில் தான் சேகரித்தவற்றை எழுத்தாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு ஆங்கிலேய அதிகாரிகளாக இவரது நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர். முதன் முதலில் ஆங்கிலத்திலேயே இவர் தனது படைப்புகளை வெளியிட ஆரம்பித்தார்.

தென்னாட்டில் வழங்கி வந்த கதைகளைத் தொகுத்து, 1884ல், 'Folklore in South India' என்ற நூலை வெளியிட்டார். அதுவே முதல் நூல். அடுத்து தமிழகத்தில் மிகவும் பிரபலமான 'மதனகாமராஜன் கதை'யை, 'The Dravidian Nights Entertainments' என்ற தலைப்பில் 1886ல் வெளியிட்டார். புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து 'Tales of the sun' என்ற தலைப்பில் 1890ல் வெளியிட்டார். இவரது முதல் தமிழ் நூல் 'தானவன் என்ற போலிஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புத குற்றங்கள்'. 1892ல் வெளியான இந்நூல்தான் தமிழில் வெளியான முதல் துப்பறியும் நாவல். காவல்துறை அதிகாரியும், சாஸ்திரியின் நண்பருமான A. Porteous, I.G "தமிழில் துப்பறியும் நாவல்களே இல்லையே! நீங்கள் எழுதுங்களேன்" என்று வலியுறுத்தியதால் Dick Donovan ஆங்கிலத்தில் எழுதிய நாவல்களை முன்மாதிரியாகக் கொண்டு முழுக்க முழுக்கத் தமிழ்க் களத்தில் அந்த நாவலை எழுதினார் நடேச சாஸ்திரி. Donovan என்பதையே கதையின் நாயகனுக்குப் பொருந்தும்படி தானவன் என்ற பெயராகச் சூட்டியிருந்தார். காலவரிசைப்படிப் பார்த்தால் 'பிரதாப முதலியார் சரித்திரம்' (1879) நாவலுக்குப் பிறகு தமிழில் வெளியான இரண்டாவது நாவல் என்று தானவனைச் சொல்லலாம். தமிழின் இரண்டாவது நாவலாகக் கருதப்படும் 'கமலாம்பாள் சரித்திரம்' விவேகசிந்தாமணியில் 1893ல் தொடராக வெளியாக ஆரம்பித்து, 1896ல் தான் புத்தகமாக வெளிவந்தது. ஆனால், தானவனோ 1892லேயே வெளிவந்துவிட்டது. இருந்தபோதிலும் அது தழுவல் முயற்சி என்பதால் பிற்காலத்தில் இலக்கிய ஆய்வாளர்களால் புறந்தள்ளப்பட்டது.

ஐந்து குறுங்கதைகளின் தொகுப்பு தான் தானவன். நாட்டின் வெவ்வேறு இடங்களில் திருட்டு, கொள்ளை முதலிய குற்றச் செயல்கள் நடக்கின்றன. உண்மைக் குற்றவாளிகளை யாராலும் கண்டறிய முடியாதபோது, தானவன் ஆண்டிப் பண்டாரம் முதற்கொண்டு வியாபாரிவரை பல்வேறு மாறுவேஷங்கள் பூண்டு இறுதியில் ஒவ்வொன்றிலும் உண்மைக் குற்றவாளியைக் கண்டறிந்து தண்டனை வாங்கிக் கொடுக்கிறான். மிகவும் விறுவிறுப்பாக இந்த நாவலை எழுதியிருக்கிறார் நடேச சாஸ்திரி. இவரது அடுத்த நாவல் 'தீனதயாளு'. 1900ல் வெளியானது. தொடர்ந்து 1902ல் 'திக்கற்ற இரு குழந்தைகள்' வெளிவந்தது. 1903ல் 'மதிகெட்ட மனைவி'. தொடர்ந்து 'கோமளம் குமரியானது' வெளியானது. அதே காலகட்டத்தில் வடமொழியிலிருந்து வால்மீகி ராமாயாணம், காளிதாசரின் குமார சம்பவம் உள்ளிட்ட பல இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார். 'Hindu Feasts, Fasts and Ceremonies' (1903) என்ற நூல் இந்தியாவின் மக்கள் வாழ்க்கையையும், நம்பிக்கைகளையும் அதன் பண்டிகைகள் போன்றவற்றின் சிறப்பையும் ஐரோப்பியருக்கு அறிமுகப்படுத்த எழுதப்பட்டதாகும். இவரது நூல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததால் 'விவேகபோதினி' போன்ற இதழ்களில் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார்.

இவரது முக்கியமான நூல்களுள் ஒன்று 'தலையணை மந்திரோபதேசம்' 1901ல் வெளியான இந்த நூலே தமிழில் வெளியான 'குடும்ப நகைச்சுவை' என்ற வகைமைக்கு முன்னோடி நூலாகும். தமிழில் இவ்வகை நகைச்சுவை எழுத்தின் முன்னோடி நடேச சாஸ்திரிதான். இந்தப் பாணியே பின்னர் கல்கி, எஸ்.வி.வி., தேவன், நாடோடி, துமிலன், சாவி எனப் பலரால் பின்பற்றப்பட்டது. விமர்சகர்களால் 'நாவல்' என்று மதிப்பிட்டாலும் உண்மையில் ராம பிரஸாத் - அம்மணி பாய் என்ற இருவருக்கிடையே எழும் ஊடல்தான் சிறு சிறு சம்பவங்களாக, சிறுகதைப் பாணியில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இதனைச் சிறுசிறு சம்பவங்களின், கதைகளின் தொகுப்பு என்றும் சொல்லலாம். நூலின் முன்னுரையில் சாஸ்திரி தாம் இதனை இருட்டில் ஒளிந்திருந்து ஒட்டுக்கேட்டு எழுதியிருப்பதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருக்கிறார். மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த நூல், அக்காலத்திலேயே ஐந்து பதிப்புகளுக்கு மேல் வெளியாகியிருக்கிறது.

ஹிந்துஸ்தானிக் கவிஞர் மீர் அம்மான் உருது மொழியில் இயற்றிய நூலை, 'வஸந்தோத்யானம் அல்லது நான்கு பக்கிரிகளின் கதை' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 'தக்காணத்துப் பூர்வ காலக் கதைகள்', 'தக்காணத்து மத்யகாலக் கதைகள்', 'மாமி கொலுவிருக்கை', 'தூக்குத் தூக்கி', 'ரகு வம்சம்', 'ஹர்ஷ சரித விமர்சனம்', 'தெனாலிராமன் கதைகள்' என்று பல படைப்புகளைத் தந்திருக்கிறார்.

மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர் நடேச சாஸ்திரி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத் திருவிழா திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தார். சுவாமி வீதி உலாவின் போடப்பட்ட அதிர்வேட்டுச் சத்தத்தால் மிரண்ட குதிரை ஒன்று தறிகெட்டு ஓடியது. ஓரமாக நின்று கொண்டிருந்த நடேச சாஸ்திரிகள் மீது வேகமாக வந்து மோதியது. சாஸ்திரிகள் கீழே விழுந்தார். கல் ஒன்றில் தலை அடிபட்டு மயக்கமுற்றார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏப்ரல் 12,1906 அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 46 தான்.

சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா தளங்களிலும் முன்னோடியாக வாழ்ந்த அவரது வாழ்வு 1906ல் முற்றுப்பெற்றது. என்றாலும் அவரது மறைவிற்குப் பின்னும் அவரது கட்டுரைகள் 'விவேக போதினி' இதழில் தொடர்ந்து வெளியாகின. நூல்கள் பலவும் தொடர்ந்து அச்சிடப்பட்டன. இன்றைக்கும் அவரது நூல்கள் (ஆங்கிலத்தில்) அச்சில் கிடைக்கின்றன என்பதே அவரது முன்னோடி முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் முக்கிய அங்கீகாரமாகும்.

அரவிந்த்

© TamilOnline.com