தென்றல் பேசுகிறது...
இன்றைக்கு அமெரிக்காவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 6 மில்லியன், வேலை வாய்ப்புகள் 7.4 மில்லியன் என்கிறது ஒரு செய்திக் குறிப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் இது நல்லதுபோலத் தெரியும். உண்மை என்ன? இந்த வாய்ப்புகள் உயர்கல்வி கற்றோர் நிலையில் இல்லை. நீலக்காலர் வேலை என்று சொல்லப்படும் ஓட்டல்/தொழிற்சாலைப் பணியாளர், இன்னும் பிற உடலுழைக்கும் தொழிலாளருக்கான இடங்களே காலியாக உள்ளன இந்த நிலை வரக் காரணம்? இன்றைய அதிபரின் குடிவரவுக் கொள்கை! ஒருவர் தன் மகனோடு இந்தியாவுக்குச் சென்றார். அவர்களால் அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. அவரது மனைவியும் மற்றொரு குழந்தையும் இப்போது அமெரிக்காவில் தவிக்கிறார்கள். இது ஒரேயொரு உதாரணம்தான். இப்படி எத்தனையோ இந்தியர்கள், ஃபிலிப்பைன்ஸ் நாட்டவர், மெக்ஸிகோக்காரர்கள், இன்னும் பலர். இந்த முரணான குடிவரவுக் கொள்கையினால் எண்ணற்றவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியே போனால், முதலில் பார்த்தபடி, நாட்டின் அடிப்படைத் தொழில் வளர்ச்சியையே உறைய வைக்கும் அளவுக்குத் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது 'Make America Great Again' என்பது வெற்றுக் கூப்பாடாகுமே அல்லாது எந்த வகையிலும் அமெரிக்காவை முன்னிருந்த உன்னத நிலைக்குக் கொண்டுசெல்லாது. அதற்கு ஒரே வழி முன்போல சட்டபூர்வமாக வந்தோரை இரு கை நீட்டி வரவேற்று, அவர்களும் இந்நாடும் வளர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுதான்.

*****


இந்திய வரலாற்றில் ஆகஸ்ட் 5, 2019 பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய திருநாள். நமது நாட்டுக்குள்ளேயே நம்மவரை அன்னியராக்கி, அன்னியரின் வெறிச்செயலுக்கு ஏற்ற களமாக ஓர் பகுதியை முடக்கி வைத்திருந்த இமாலயத் தவறு திருத்தப்பட்ட நாள். போதாக்குறைக்கு வாழற்கரிய உறைகுளிர்ப் பகுதியில் வாழும் லடாக் மக்களை 72 ஆண்டுக் காலமாக அசட்டை செய்துவந்த மிகப்பெரும் தவறும் திருத்தப்பட்டுள்ளது. இனி காஷ்மீர் இளைஞர்களின் ஒரே தொழில் பாகிஸ்தானியர் எறியும் ரொட்டித் துண்டுகளுக்காக இந்தியப் படைகள்மீது கல்லெறிவதுதான் என்பது மாறும். அவர்களும் கல்வி, தொழில், மேம்பட்ட வருமானம் மற்றும் வசதிகள் ஆகியவற்றை அனுபவிப்பதன் மூலம், நாமும் இந்தியர்கள் என்ற பெருமிதத்தோடு வாழவும் வாய்ப்புகள் ஏற்படும். நம் நாட்டின் ஒரு பகுதியை நாம் சரிவர நிர்வகிக்க எந்த இருதரப்புப் பேச்சு வார்த்தையும், மூன்றாம் நாட்டின் தலையீடும் தேவையில்லை என்பதை நரேந்திர மோதி அரசு உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பையே தொழிலாகக் கொண்ட சீனாவைத் தவிர, உலக நாடுகள் அனைத்தும் இந்தச் சீரிய செயல்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளமையும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

*****


'இலக்கியவேல்' சிற்றிதழின் ஆசிரியர் கவிஞர் சந்தர் சுப்ரமணியன் அவர்களின் நேர்காணல், மேற்கத்திய இசைவகையான ஆபராவில் (Opera) தடம் பதித்துவரும் இளநங்கை ராஜி வெங்கட், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் ஆகியோர் குறித்த கட்டுரை என்று படிக்கவும் அசைபோடவும் ஏராளமான அம்சங்களுடன் வருகிறது இந்த இதழ்.

வாசகர்களுக்குப் பிள்ளையார் சதுர்த்தி, ஓணம், முஹர்ரம் மற்றும் உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

செப்டம்பர் 2019

© TamilOnline.com